கணவனை கொலை செய்து அந்த இடத்தை சமையல் கூடமாக மாற்றிய மனைவி


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்டர் (60), கூலி வேலை செய்து வந்தார். கொசவன் புதூரை சேர்ந்த ராசி என்பவரை முதலாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

விக்டர் உமா (50), என்பவரை 2-வது திருமணம் செய்து பசுமாத்தூரில் வசித்து வந்தார். உமாவுக்கு சந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.

விக்டருக்கு உமாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 25-ந் தேதி முதல் விக்டர் மாயமானார். அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.

இந்தத நிலையில் விக்டரை அவரது மனைவி உமா கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் உமாவிடம் விசாரணை நடத்தினார். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

சம்பவத்தன்று விக்டர் உமா இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விக்டர் கத்தியால் உமாவை வெட்ட பாய்ந்தார். சுதாரித்து கொண்ட உமா கத்தியை அவரிடம் இருந்து பறித்து விக்டரை வெட்டி சாய்த்தார்.

ரத்த வெள்ளத்தில் விழுந்த விக்டர் துடிதுடித்து இறந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் நடந்த இந்த கோர சம்பவத்தை மூடி மறைக்க உமா திட்டமிட்டார். வீட்டின் அருகில் இரவோடு இரவாக குழிதோண்டினார். அதில் விக்டரின் பிணத்தை தூக்கி போட்டு புதைத்தார்.

காலையில் எதுவும் நடக்காததுபோல வழக்கமான வேலைகளை செய்துள்ளார். பிணம் புதைக்கப்பட்ட இடத்தை யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கட்டுக்கல் வைத்து அடுப்பு அமைத்தார். அதில் சமையல் வேலைகளை செய்து சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த தகவலை பெற்றுக்கொண்ட போலீசார் விக்டர் கொலை தொடர்பாக உமாவின் மகன் சந்திரனிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கணவனை மனைவியே புதைத்த இடத்தில் சமையல் கூடம் அமைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"