வடக்கு ஆஸ்திரேலியாவின் குகைகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 28 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் உள்ள அர்ன்ஹோம் என்ற இடத்தில் உள்ள உயரமான மலைப்பகுதியில் காணப்படும் குகைகளின் சுவர் மற்றும் மேற்பகுதிகளில் மிக நேர்த்தியாக, அழகாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆண், பெண் செக்ஸ் காட்சிகள், சிற்றின்ப காட்சிகள் அடங்கிய ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
சதர்ன் குயீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழக தொல்பொருள்துறை ஆராய்ச்சியாளர்கள் ப்ரைசி பார்க்கர் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல்கள் கிடைத்துள்ளன. நர்வாலா கபர்ன்மாங் என்ற மிக உயரமான, பெரிய மலையின் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் ஏராளமான பெரிய குகைகள் உள்ளன. இவற்றில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் உள்ளன. அத்தனை குகையிலும் மிக நேர்த்தியாக வரையப்பட்ட அரிய ஓவியங்கள் சுவர் மற்றும் கூரைப்பகுதிகளில் சொல்லோவியச் சோலையாக அலங்கரிக்கிறது.
இவற்றில் பெரும்பாலான ஓவியங்கள் பழங்குடியினரின் சிற்றின்ப காட்சிகளை வெளிப்படுத்துகிறது. இவர்கள் இப்பகுதியில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஓவியங்கள் 28 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்த பகுதியில் தற்போது மனித நடமாட்டமே இல்லை. இந்த ஓவியங்கள் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தி வெள்ளை, சிவப்பு நிறங்களில் வரையப்பட்டுள்ளது. பல்வேறு பரிசோதனைகளின் அடிப்படையில் இவை 28 ஆயிரம் பழமையானது என்று தெரியவந்திருப்பதாக ப்ரைசி பார்க்கர் கூறினார்.