இறந்த காதலியை மணந்த காதலன்


தாய்லாந்தை சேர்ந்த ஒரு இளைஞர் காதலுக்கு ஒரு புதிய இலக்கணத்தை உருவாக்கி சாதித்து காட்டியிருக்கிறார்.அவர் பெயர் சாடில் டெபி. தாய்லாந்தின் சுரீன் நகரைச் சேர்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த சார்னியா காம்சூக் என்ற இளம் பெண்ணை கடந்த பத்தாண்டுகளாக காதலித்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சை கொடி காட்டினாலும் படிப்பு முடிந்த பின் தான் திருமணம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் டெபி.

சார்னியாவுக்கு பொறுமை இல்லை இவ்வளவு தாமதம் வேண்டாமே இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என அடிக்கடி வற்புறுத்த ஆரம்பித்தார். படிப்பை காரணம் காட்டி திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் டெபி. காலச் சக்கரம் வேகமாக உருண்டாலும் இருவருக்கும் இடையேயான அன்பு கொஞ்சம் கூட குறையவே இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. சார்னியா காரில் சென்றபோது பயங்கர விபத்து ஏற்பட்டது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சார்னியா. அலறி அடித்துக் கொண்டு மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தார் டெபி. அவர் வருவதற்குள் சார்னியாவின் உயிர் பிரிந்து விட்டது.

அழகுப் பெட்டகமாக நடமாடி வந்த தன் உயிருக்கு உயிரான காதலி உயிரற்ற சடலமாக படுக்கையில் கிடந்ததை டெபியால் ஜீரணிக்கவே முடியவில்லை. இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.இந்த நேரத்தில் டெபி ஒரு உறுதியான முடிவுக்கு வந்தார். அங்கிருந்த பெரியவர்களிடம் சென்று உயிருடன் இருந்தபோது அவளின் திருமண ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது, அவள் இறந்து விட்டாலும் அவளின் ஆசையை நிறைவேற்றா விட்டால் நான் மனிதனே இல்லை. எனவே தயவு செய்து அவளை திருமணம் முடிக்க சம்மதம் தாருங்கள் என கதறினார். வேறு வழியில்லாமல் சம்மதித்தனர் பெரியவர்கள்.

அதற்குள் இந்த தகவல் தாய்லாந்தின் பெரும் பகுதிக்கும் பரவி விட்டது. அனைத்து மீடியாக்களும், கல்லறை தோட்டத்தில் குவிந்தன. இறுதிச் சடங்கிற்கு பதிலாக திருமணச் சடங்கு நடந்தது. சார்னியாவின் உடல் படுக்கையில் வைக்கப்பட்டிருந்தது. மணப் பெண் அணிவது போன்ற உடை அவரது உடலுக்கு அணிவிக்கப்பட்டு இருந்தது. அவரது உயிரற்ற விரலுக்கு காதலும், சோகமும் மேலிட மோதிரத்தை அணிவித்தார் டெபி. இந்த வித்தியாசமான திருமண நிகழ்ச்சி, தாய்லாந்து முழுவதும் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.சமீபகாலங்களில் தாய்லாந்தில் அதிக பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாக இது அமைந்து விட்டது. இறந்த பின்னும் காதலை வாழ வைத்த டெபி தான் தாய்லாந்து மக்களின் தற்போதைய ஹீரோ.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"