எனக்கு கொஞ்சம் கலரான பொண்ணு பாருங்க பெண் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டால், பல மாப்பிள்ளைகளின் முக்கியக் கோரிக்கை இதுதான். குணம், கல்வி, குடும்ப பின்னணி என்று வாழ்க்கைக்கு அவசியமான எத்தனையோ இருக்க, சிவப்பு நிறத்தில் ஏன் மோகம் அதிகமாக இருக்கிறது. இது ஒரு குழந்தை மனபான்மை என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள்.
டீன் ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு சிவப்பு நிற சருமத்தின் மீது ஆசை வருகிறது. ஆண்களுக்கு உயரமாக வளர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பெண், தனக்கு வரும் கணவன் திடகாத்திரமாகவும், உயரமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆணோ, தனக்கு துணைவியாக வருபவள் அழகில் சிறந்தவளாக, அதுவும் செக்கச் சிவந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.
மனோதத்துவ ரீதியாக இப்படி நிறம், உயரம் போன்றவற்றில் அக்கறை கொள்வதை காம்ப்ளக்சன் என்று கூறுகிறார்கள்.
சமுதாயத்தில் இயல்பாகவே உடல்தோற்றத் திற்கு மிகுந்த மதிப்பு அளிக்கபடுகிறது. ஒரு குழந்தை பிறந்ததும் ஆணா, பெண்ணா என்று கேட்ட மறுநிமிடம் குழந்தை கறுப்பா, சிவப்பா? என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கிறது. திருமண ஊர்வலம் நடந்தாலும், பெண் நல்ல நிறமாக இருக்கிறாளா? என்பது பற்றிய பேச்சு எழுவதை பார்க்கிறோம்.
இயல்பாக நமது மனம் இல்லாத ஒன்றை பற்றி ஏங்கும். அதை எப்படியாவது பெற வேண்டும் என்றும் விரும்பும்.
மேனி நிறத்தை மெருகூட்டுவதாக நிறைய விளம்பரங்கள் வருவது பெரும்பாலானவர்களுக்கு சிவந்த தேகத்தில் இருக்கும் அக்கறையை எடுத்துக் காட்டும் சிறந்த உதாரணமாகும். உண்மையிலேயே எந்த பொருளும் இயல்பான வண்ணத்தை மாற்றிவிடாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும் அதன்மீது உள்ள ஏக்கத்தால் அத்தகைய பொருட்களை உபயோகபடுத்தத் தொடங்குகிறோம். அப்படி நிறம் மாறிவிடுவது நிஜமென்றால் உலகில் ஒரு கறுப்பு மனிதனையும் காணவே முடியாது. ஏக்கம் கொண்டவர்களின் மனம் சமாதானம் அடைவதற்கு இந்த தயாரிப்புகள் உதவுகின்றன அவ்வளவுதான்.
சிவந்த நிறத்திற்காக ஆசைபட்டு ஒவ்வொரு தயாரிப்புக்காக மாறுவது, பெண் தேடும்போதும் நிறத்தை காரணம் காட்டி மறுத்துவிடுவது என்று காலம் நகரும்போது ஒருவித சலிப்பும், மாற்ற இயலாத காரணத்தால் ஒருவித இயலாமையும் ஏற்படும். இது மன இறுக்கத்தைக் கொண்டு வரும். நீண்டநாள் பாதிப்புகள் மனவியாதியாக பரிணமிக்கலாம்.
படிக்கும் பருவத்தில் அல்லது பணியாற்றும் பருவத்தில் ஏற்படும் இதுபோன்ற நிறத் தோற்ற மனபான்மை ஒருவரின் படிப்பு அல்லது முன்னேற்றத்தை பாதிப்படையச் செய்யும்.
பெற்றோர், குழந்தை பருவத்தில் இருந்தே தங்களது குழந்தையின் தோற்றம், நிறம் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்த்து வளர்த்து வந்தால் இளம் பருவத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஒருவரை அழகு என்று கொண்டாடுவதும், மற்றவரை அழகற்றவர் என்று ஒதுக்கி வைப்பதும் பிற்காலத்தில் பிரச்சினைகளைத் தரலாம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்