ஆடை அளவை சோதிப்பதற்கான அறையினுள் கண்காணிப்பு கமெராவொன்றை பொருத்தி பெண்ணொருவர் படம்பிடிக்கப்பட்ட விவகாரமே கம்பஹா பிரதேசத்தில் கடை உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான லரிக் ராஜபக்ஷ (43) கொலை செய்யப்பட்டமைக்கு வழிவகுத்தது என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேற்படி வர்த்தகர் கடந் வெள்ளிக்கிழமை வாளால் வெட்டி கொல்லப்பட்டார். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேககிக்கப்படும் இரு வாள்களையும் பிரதான சந்தேக நபரின் பாதணியையும் பொலிஸார் கைப்பற்றினர். இதன் மூலம் இக்கொலையின் பின்னணியை பொலிஸார் கண்டறிய முடிந்தது.
பிரதான சந்தேக நபரின் சகோதரி, இக்கடையில் ஆடையொன்றை அணிந்து பார்ப்பதற்காக அதற்கான அறைக்குள் சென்றபோது கண்காணிப்பு கமெராவினால் படம்பிடிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பின்னர், கடையின் உரிமையாளர் இப்படத்தை காட்டி, மேற்படி பெண்ணை நிர்ப்பந்தித்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு நபரும் இக்குற்றத்தை புரிவதற்கு கடையின் உரிமையாளர் இடமளித்துள்ளார்.
திருமணமான மேற்படி பெண், இச்சம்பவத்தின்பின்னர் மன அழுத்தத்திற்குள்ளாகி இருந்த நிலையில் இது குறித்து அவரின் சகோதரர்களில் ஒருவர் வினவியுள்ளார். அப்போது, நடந்த விடயங்களை சகோதரரிடம் மேற்படி பெண் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து மேற்படி சகோதரர் மற்றொருவருடன் இணைந்து கடையின் உரிமையாளரை வெட்டிக் கொலை செய்துள்ளாதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேக நபர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பிரதான சந்தேக நபர் ஏற்கெனவே பல குற்றச்சசெயல்களை புரிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மற்ற நபரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.