கூகுள் ஆன்ராய்டு


கணிப்பொறி வன்பொருள் (ஹார்ட்வேர்) மற்றும் மென்பொருள் (சாஃப்ட்வேர்) என்னும் இரண்டு வேறுபட்ட பிரிவுகளின் தொகுப்பால் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்விரண்டும் பெரும்பாலும் தனி தனி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு பின் ஒன்றிணைக்கப் படுகின்றன. இதில் மென்பொருள் கட்டளைகளை இடுகிறது. வன்பொருள் அவற்றை நிறைவேற்றுகிறது. மென்பொருள் தொகுப்பின் மையமாக இயங்கு தளமும் (ஆப்ரேட்டிங் சிஸ்டம்), வன்பொருள் தொகுப்பின் மையமாக நுண்செயலியும் (மைக்ரோ ப்ராசஸர்) செயல்படுகின்றன.

பொதுவாக கணிப்பொறியின் செயல்திறன் அதன் வேகத்தைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. கணிப்பொறியின் வேகத்தை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. எனினும் மைக்ரோ ப்ரோசெசசெர் முக்கிய பங்குவகிக்கிறது. நுண்செயலி கணினியின் இதயமாகவும், இயங்கு தளம் கணினியின் மூளையாகவும் செயல்படுகிறது.

மென்பொருள் தொகுப்புகள் நுண்செயலியின் வடிவமைப்பிற்கு (ஆர்க்கிடெக்ச்சர்) தகுந்தவாறு உருவாக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு விதமான வடிவமைப்புகள் நம் பயன்பாட்டில் உள்ளன. அவை

1. சிஸ்க் (Complex Instruction Set Computing)
2. ரிஸ்க் (Reduced Instruction Set Computing)

சிஸ்க் (CISC)
சிஸ்க் வடிவமைப்பில் கட்டளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மேலும் பல்வேறு கட்டளைகள் மூலமாக ஒரு செயல் நிறைவேற்றப் படுகின்றன. இதனால் அதிக நேர சுழற்சி (கிளாக் சைக்கிள்) மூலமாக மட்டுமே தேவையை நிறைவேற்ற முடியும். இருப்பினும் இம்முறையே பெரும்பாலான கணினியில் பயன்படுத்தபடுகிறது. இவற்றை X86 குடும்ப செயலி (ப்ராசஸர்) என்று அழைப்பர்.

ரிஸ்க் (RISC)
ரிஸ்க் வடிவமைப்பில் கட்டளைகளின் எண்ணிக்கை குறைவாகவும், பல்வேறு கட்டளைகள் ஒரே நேரத்திலும் நிறைவேற்றும் திறன் கொண்டவைகளாகவும் இருக்கும். இதனால் கணிப்பொறியின் செயல்திறன் அதிகரிப்பதோடு பணியாற்ற குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மாக்கின்டோஷ், ஆர்ம்(ARM) நிறுவனத்தின் ஆர்ம், சன் இயங்கு தளம் (இப்பொழுது ஆராக்கிள்) நிறுவத்தின் ஸ்பார்க் போன்றவை இம்முறையை பயன்படுத்துகின்றன. இன்னும் பல சிறப்பம்சங்கள் ரிஸ்க் தொழில்நுட்பத்தில் இருந்தாலும் பெரும்பான்மையான பயன்பாட்டில் இவை இல்லாமல் போய் விட்டது.

ரிஸ்க் வடிவமைப்பு பயன்பாடுகளில் பல நன்மைகள் இருக்கும் பட்சத்தில் சிஸ்க் வடிவமைப்பைக் கொண்டு நிறைய பயன்பாடுகள் (அப்ளிகேஷன்) X86 செயலிகளுக்கு எழுதப்பட்டு விட்டது என்பது வருத்ததிற்குரிய விஷயமாகும். இதற்கு முக்கிய காரியம்.. இன்ட்டல், ஐ.பி.எம்., மைக்ரோசாஃப்ட் என்ற மூவர் கூட்டணியே ஆகும். இன்ட்டல் நுண்செயலி, ஐ.பி.எம். வன்பொருள், இயங்கு தளம் மைக்ரோசாஃப்ட் என்ற அவர்களின் வணிக வெற்றி வரலாறு உலகம் அறிந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் முனைப்புடன் உள்ளது கூகுள்.

வரும் காலங்களில் கணிப்பொறி, மடி கணினி எல்லாம் மலையேறி.. கையளவு செல்பேசியில் உலகமே அடங்கி விடும். அத்தகைய சூழலில் கூகுள் தான் வாங்கிய 'ஆன்ராய்டு' இயங்கு தளத்தின் மூலம் தன் அதிகாரத்தினை தனி பெரும் சக்தியாக நிலை நாட்டும். ஆன்ராய்டு பல சிறப்பம்சங்கள் கொண்ட 'ரிஸ்க்' வடிவமைப்பைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் ஆன்ராய்டு பயன்பாடுகள் திறந்த மூலநிரல் (ஓப்பன் சோர்ஸ்) என்பதால் ஆப்பிளின் 'ஐ-போன்'னும் அடிபடும் வாய்ப்புகள் உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"