சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் இளவயதினர்! அதிர்ச்சி தகவல்!!

கம்யூட்டரில் மணிக்கணக்கில் செலவு செய்யும் மகனோ, மகளோ இருக்கின்றனரா? அப்படி எனில் உங்கள் குழந்தைகள் படிப்பிற்காக அதிகம் மெனக்கெடுகின்றனர் என்று பெருமை பட்டுக்கொள்ளவேண்டாம். அவர்கள் பேஸ்புக், ட்விட்டர், யுடியூப்,என சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கியிருக்கக் கூடும் என்று எச்சரிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

இந்தியாவில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் 8வது மற்றும் 10 வது படிக்கும் 200 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் ஃபேஸ் புக் தங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என்று 58 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். தினசரி அப்டேட் செய்யாவிட்டால் எதையோ இழந்தது போல நினைப்பதாக 27 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர்கள்தான் உண்மையான அடிமைகள். இவர்கள்தான் அதிகம் கவனிக்கப்படவேண்டியவர்கள்.

'சமூக வலைத்தளங்களில் மூழ்கி படிப்பில் கவனம் சிதறும் பல மாணவ, மாணவிகள் இருக்கின்றனர். சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் 500க்கும் மேற்பட்ட நண்பர்கள் வரை இருக்கின்றனர். 'படிக்கிறேன்' என்ற போர்வையில் தினமும் 3-4 மணி நேரம் வரை சமூக வலைத்தளத்தில் மூழ்குவது, நண்பர்களுடன் சாட்டிங் என படிப்பை பாழாக்கிக் கொள்கின்றனர்.

‘லைக்­’ எதிர்பார்ப்பு
கல்லூரி செல்லும் மாணவர்களும், ஐடி துறையில் இருப்பவர்களும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்திய காலம் போய் இன்றைக்கு லட்சக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியும், பார்வையிட்டும் வருகின்றனர். மழை பெய்தால் ஸ்டேட்டஸ், தும்மினால் ஸ்டேட்டஸ் என அப்டேட் செய்து அதற்கு லைக் கேட்டு காத்திருக்கும் காலம் வந்துவிட்டது. அதிகம் ‘லைக்' கிடைத்தால் மகிழ்ச்சியும், யாருமே ‘லைக்' போடாவிட்டால் மனஅழுத்தமும் ஏற்படுகிறது இவர்களுக்கு. ஆர்வத்தில் தொடங்கிய இந்த பழக்கம் படிப்படியாக இதிலிருந்து மீளவே முடியாத அளவிற்கு வலைத்தளங்களின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் பெற்றோர்களுடனான பேச்சு குறைவதோடு, படிப்பும் பாழாகி விடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

ஃபேஸ் புக் அடிமை
மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு அடிமையாகக் கிடப்பது, எந்த நேரமும் வலைத்தள யோசனையிலேயே இருப்பது, பிற வேலைகளை மறப்பது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதன்காரணமாகவே 'சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று ஒரு புது ரகத்தினர் இன்றைக்கு மனநல மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அணுகத் தொடங்கி இருக்கிறார்கள்.

போதை
''மூளையில் 'டோபோமைன்' என்ற வேதிப்பொருள் சுரக்கும்போது ஒருவிதக் கிளர்ச்சி, சந்தோஷம் உண்டாவதும் இது போன்ற வலைதள அடிமையாக காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மது, புகை ஒருவித போதை என்றால் கணினி மற்றும் மொபைல் போன் போன்றவைகளிடம் இன்று பலரும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.


சமூக விரோதிகள்
சமூகத் தளங்கள் மூலமாகப் பள்ளி மாணவிகளைச் சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொள்ளும் அபாயமும் இருக்கிறது. முகம் தெரியாத ஆட்களுடன் 'தான் யார், தனக்கு என்ன சினிமா பிடிக்கும், எந்த மாதிரி உணவு பிடிக்காது' என்று துவங்கி தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள். புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தப் பழக்கம் கடைசியில் உணர்வு ரீதியான உறவாகவும் மாறி ஓடிப்போக வழிவகுக்கிறது.

மனஅழுத்தம்
''சமூக வலைத்தளங்களில் பழியாய்க் கிடந்தால் படிப்பு, வேலை, குடும்பம் ஆகியவற்றின் மீது கவனம் குறையும். கவனச்சிதறல் ஏற்படும். வாழ்க்கையில் எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்பது மறந்து போவதுடன் வாழ்க்கை முறையே மாறிவிடும். நிறைய 'லைக்ஸ்', 'ஷேர்' கிடைக்கவில்லை என்றால் ஒருவித ஏமாற்றம் வந்து மனஅழுத்தம் ஏற்படும். நம்முடைய கருத்துக்கு எதிரான கருத்து வந்தால், அதைத் தாங்கும் பக்குவமற்று சிலருக்கு எரிச்சல் ஏற்படும். அதுவே மன அழுத்தமாகவும் மாறும் என்கின்றனர் நிபுணர்கள்.

உடல், மனநல பாதிப்பு
மனம் மட்டும் அல்லாமல், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் இடுப்பு மற்றும் கண் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும். படிப்பு அல்லது வேலையில் கவனம் குறையும். எதையும் சகஜமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம். ஒரு வார்த்தைக்கே ஒடிந்துபோகிறவர்கள் வலைத்தள ஆர்வத்தால் எத்தகைய மனச்சிக்கலுக்கும் ஆளாக நேரிடும். சிலர் தற்கொலைக்கு முயலும் அபாயமும் உருவாகும்.

சமூக வலைத்தளங்களுக்கு அடிமையானவர்களை மீட்க ஒரே தீர்வு... அத்தகைய ஆர்வத்தை உடனடியாக நிறுத்துவதுதான். முதலில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், மூன்றே வாரத்தில் அதில் இருந்து விடுபட்டு வழக்கமான பணிகளில் முன்போல ஈடுபட முடியும். இதில் பெற்றோர் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளுக்குச் சமூக வலைத்தளங்களை அறிமுகம் செய்வதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம். மேலும் பிற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றில் சந்தோஷத்தை உருவாக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"