விவாகரத்து செய்வதற்காக மனைவியை இண்டர்நெட்டில் விபசாரப் பெண்ணாகக் காட்டி, பொய் தகவல் பரப்பிய கணவரும் அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் (32) அடையாறில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஜெனிபருக்கும் (26) ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயது மகன் இருக்கிறான்.
இந் நிலையில் மகேசுக்கும் அவரது நிறுவனத்தில் பணியாற்றும் சுபாஷினி (28) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதையறிந்த ஜெனிபர் தனது கணவரை கண்டித்தார். இதையடுத்து தன்னை விவாகரத்து செய்யுமாறு மனைவியிடம் மகேஷ் கூறினார். ஆனால், இதற்கு ஜெனிபர் சம்மதிக்கவில்லை.
இதையடுத்து ஜெனிபரை சித்ரவதை செய்து வந்தார் மகேஷ். இதையறிந்த ஜெனிபரின் தந்தை அவரை கும்மிடிப்பூண்டிக்கு அழைத்து சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து மனைவியிடம் மன்னிப்பு கேட்டு ஒன்றாக வாழ்வதாக சம்மதித்தார் மகேஷ்.
இந்நிலையில் ஜெனிபரின் பேஸ்புக் இணையதள பக்கத்தில், அவரை விபச்சாரப் பெண்ணாக சித்தரிக்கும் வகையில் செய்தியும் படமும் தொலைபேசி எண்ணும் இடம் பெற்றிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ந்த ஜெனிபர் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். இது குறித்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி, மனைவியை விவாகரத்து செய்வதற்காக தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் மகேஷ் தான் இந்தச் செயலைச் செய்தார் என்று தெரிய வந்தது.
இதையடுத்து மகேஷையும், சுபாஷினியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மகேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில், சுபாஷினியை திருமணம் செய்ய முடிவு செய்தேன். அதற்காக மனைவியிடம் விவாகரத்து கேட்டேன். அவர் தர மறுத்து விட்டார். அதனால் அவரை பழிவாங்க திட்டமிட்டு அவரது பேஸ்புக் பாஸ்வேர்டை பயன்படுத்தி, அவரை கால்கேர்ள் என்று விளம்பரம் செய்தேன். இதைக் காட்டியே அவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தேன். அதற்குள் அவர் என் மீது போலீசில் புகார் தந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.