நீலப்படம் பார்ப்பது ஒழுக்கம் சம்பந்தமானதா? இன்றைய தலைமுறையில் நீலப்படம் பார்க்காதவர்கள் அல்லது பார்க்க விரும்பாதவர்கள் என யாரேனும் இருக்கிறார்களா? நீலப்படம் பார்ப்பது சமூகக் குற்றமா? பாலுறவு என்பது நுகர்ச்சிக்கானதாகவும், வியாபாரத்திற்கான பண்டமாகவும் ஆகிய இன்றைய உலகச் சூழலில், பாலுறவு சார்ந்த கலகங்கள் என்பதற்கு நிஜமாகவே ஏதேனும் ‘கலகத்தன்மை' இருக்கிறதா? பாலுறவுப் படங்களில் அருவருப்பையும் கலையையும் உன்னதத்தையும் எவ்வாறு பிரித்தறிவது? பாலுறவு சார்ந்த இலக்கியத்திற்கும் இறையியலுக்கும் திரைப்படத்திற்கும் இடையிலான அறுதியான உறவுதான் என்ன?
எத்தனையோ விடை காண முடியாத கேள்விகள் நமக்கு முன் கிடக்கின்றன. விடை காண முடியாத கேள்வியின் அளவுகளைவிடவும் அதிகமான நூறு நூறு திரைப் படங்கள் நமக்கு முன் கிடக்கின்றன.
திரைப்படக் கொட்டகையை தேவாலயத்துடன் ஒப்பிட்டார் மார்டின் ஸ்கோர்ஸிஸே. இருளில் தனித்த அனுபவத்தையும், அதே வேளை கூட்டுணர்வையும் தருவது திரைப்பட அனுபவம்.
அறம் சார்ந்த திட்டவட்டமான பதில் நழுவிக் கொண்டே இருக்கிறது. வாழ்வு அந்தரத்தில்தான் இருக்கிறது. அது ஒரு பயணம். பாலுறவு குறித்த அனுபவமும், அது குறித்த ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த கேள்விகளை எதிர்கொள்வதும், கடந்து செல்வதும் ஒரு பயணம்தான். கடந்துசெல்ல முடியுமா, நடைமுறையில் நம்மால் முடிகிறதா என்பதுதான், நாம், நமக்கு, நமக்குள் நாமே கேட்டுக் கொள்கிற, நிரந்தரக் கேள்வியாக இருந்துகொண்டே இருக்கிறது.