நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு... பெஸ்ட் ரிட்டையர்மென்ட் பிளான்


சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு உறுதியாகக் கிடைக்கும் ஒரு விஷயமாக இருந்தது பென்ஷன். ஆனால், இப்போது அங்குகூட நிலைமை மாறிவிட்டது. அரசாங்கம் அந்தப் பொறுப்பில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டுவிட்டது. பி.எஃப்.ஆர்.டி.ஏ. (பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி) என்ற அமைப்பை ஏற்படுத்தி, அரசு ஊழியர்களை நியூ பென்ஷன் ஸ்கீம் (என்.பி.எஸ்.) என்ற திட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.

இன்றைய தினத்தில் என்.பி.எஸ்-ல் ஒவ்வொரு இந்திய குடிமகனும் சேர்ந்து முதலீடு செய்யலாம். என்.பி.எஸ். பற்றி விரிவாகப் பார்க்கும்முன் வேறு என்னென்ன திட்டங்கள் ஓய்வுக்காலத்திற்கு உள்ளன என்று பார்த்துவிடுவோம். பொதுவாக கீழ்க்கண்ட திட்டங்கள் இன்றைய தினத்தில் நமது ஓய்வுக்கால ஊதியத்திற்கு முதலீடு செய்ய ஏதுவாக உள்ளன:

1. அரசாங்க பழைய பென்ஷன்,

2. என்.பி.எஸ்.,

3. பி.பி.எஃப். (பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்),

4. இ.பி.எஃப். (எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட்),

5. இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் திட்டங்கள்,

6. நமக்கு நாமே சொந்தமாக முதலீடு செய்து கொள்ளும் பென்ஷன் திட்டங்கள்.

பழைய பென்ஷன் திட்டம்!
புதிதாகச் சேரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் (ராணுவம் தவிர) மற்றும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கும் அரசின் பழைய பென்ஷன் திட்டம் செல்லாது. ஜனவரி 01, 2004 முதல் புதிதாகச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் என்.பி.எஸ். திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். எனவே, 2004 ஆண்டுக்கு முன்பு அரசு வேலையில் சேர்ந்தவர்களுக்கும் மற்றும் ராணுவத்தில் வேலையில் செய்பவர்களுக்கும்தான் மட்டுமே இத்திட்டம். ஒரு சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இன்னும் இந்தப் பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ளன.

என்.பி.எஸ். (நியூ பென்ஷன் ஸ்கீம்)
அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் (ராணுவம் தவிர) 2004 முதல் இந்த என்.பி.எஸ். திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களும் (தமிழ்நாடு உட்பட) இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை நிர்வகிக்க பென்ஷன் ஃபண்ட் மேனேஜர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கும் இத்திட்டம் 2009-ல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும்பாலான வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலம் இத்திட்டத்தில் மக்கள் சேர்ந்துகொள்ளலாம்.

இதில் டயர்-1, டயர்-2 என இருவகை கணக்குகள் உள்ளன. டயர்-1-ல் போடும் பணம் ஓய்வுக்காலத்தில்தான் எடுக்க முடியும். டயர்-2-வில் போடும் பணத்தை இடையில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை என்.பி.எஸ். திட்டத்தின்கீழ் கொண்டு வந்துள்ளன.

சிறிய அளவில் தங்கள் ஓய்வுக்காலத்திற்காக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காக, என்.பி.எஸ். லைட் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கும் அதிலிருந்து வரும் வருமானத்திற்கும் வருமான வரிவிலக்கு உண்டு. ஆனால், மெச்சூரிட்டி தொகைக்கு வரி உண்டு. இது இனிவரும் காலங்களில் மாறலாம்.

இத்திட்டம் பொதுமக்களிடையே பல்வேறு காரணங்களினால் இன்னும் பிரபலமாகவில்லை. இனிவரும் காலங்களில் அரசாங்கம் கொண்டு வரும் சீர்திருத்தங்களைப் பொறுத்து இத்திட்டம் பொதுமக்களிடையே பிரபலம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஓய்வுக்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர் களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. ஏனென்றால் 60 வயதிற்கு முன்பு இத்திட்டத்தில் (டயர்-1 அக்கவுன்ட்) இருந்து வெளியேற நினைப்பவர்கள், குறைந்தபட்சமாக 80 சதவிகிதத் தொகையை ஆனுயூட்டியாக மாற்றிக்கொள்ள வேண்டும். மீதி 20 சதவிகிதத்தை மொத்தமாக எடுத்துவிடலாம். 60-70 வயதில் வெளியேறுபவர்கள் 40 சதவிகிதத்தை ஆனுயூட்டியாக மாற்றிக்கொள்ள வேண்டும். 70 வயதிற்கு மேல் அக்கவுன்ட் குளோஸ் செய்யப்பட்டு, மொத்த பணமும் திருப்பித் தரப்படும்.

இத்தொகையை நிர்வகிப்பதற்கு மிகக் குறைந்த பணமே செலவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதலீடு செய்வதற்கு உச்சபட்ச தொகை ஏதுமில்லை. குறைந்தபட்ச தொகை ஆண்டிற்கு ரூ.6,000 மட்டுமே.

ஆனால், இதில் சில அசௌகரியங்களும் உண்டு. என்.பி.எஸ்.-ல் உள்ள ஃபண்டுகளின் செயல்பாடு பரவலாக ஆய்வு செய்யப்படவில்லை. மேலும், இந்த ஃபண்டுகள், பி.எஃப். அல்லது பி.பி.எஃப். போல இவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும் என்று கேரன்டியாக சொல்லமுடியாது. அதே நேரத்தில் அதீதமான ரிட்டர்னைத் தருவதற்கும் வாய்ப்பில்லை. தவிர, பணத்தை வெளியில் எடுக்கும்போது கட்டாயமாக ஓர் ஆனுயூட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆனுயூட்டியைவிட சொந்தமாக முதலீடு செய்பவர்களுக்கு அதிக ரிட்டர்னில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. மேலும், இத்திட்டத்தில் சிறு முதலீட்டாளர்களுக்கு செலவின சதவிகிதமும் சற்று அதிகமாக உள்ளது. கட்டாய முதலீட்டாளர்களுக்கு இத்திட்டம் ஒரு நல்ல உபகரணமாகும்.

இத்திட்டத்தில் சேரும் ஒவ்வொருவருக்கும் பிரான் (பெர்மனென்ட் ரிட்டையர்மென்ட் அக்கவுன்ட் நம்பர்) நம்பர் வழங்கப்படும். அவர் இந்தியாவில் எங்கு வேலை பார்த்தாலும் இந்த நம்பர் ஒன்றே! ஆகவே, வேலை காரணமாக அடிக்கடி நகரத்தை மாற்றுகிறவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தற்போது நாம் செய்யும் முதலீட்டை நிர்வகித்துத் தர ஏழு ஃபண்ட் மேனேஜர்கள் (எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., யூ.டி.ஐ., ஐ.டி.எஃப்.சி., கோட்டக், ரிலையன்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.) உள்ளனர்.

இதில் ஃபண்ட் மேனேஜரை பொறுக்கிக் கொள்வது நமது ஆப்ஷனாகும். ஒரு ஃபண்ட் மேனேஜரில் இருந்து இன்னொரு ஃபண்ட் மேனேஜருக்கும் மாற்றிக்கொள்ளலாம். நமது அக்கவுன்டை பராமரிப்பதற்காக ஃபண்ட் மேனேஜருக்கும், சென்ட்ரல் ரெக்கார்டு கீப்பிங் ஏஜென்சிக்கும் (சி.ஆர்.ஏ.) நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அக்கட்டணங்கள் யூனிட்டை ரத்து செய்வதன் மூலம் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. ஆனால், இக்கட்டணங்கள் மிக மிகக் குறைவே; மேலும், இக்கட்டணங்கள் பி.எஃப்.ஆர்.டி.ஏ-வால் தீர்மானிக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 18; அதிகபட்ச வயது 60 ஆகும். இந்திய குடிமக்கள் மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

என்.பி.எஸ்-ல் ஸ்வலம்பன் திட்டத்தை 2010-11-ல் மத்திய அரசாங்கம் வெளியிட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.1,000 முதல் 12,000-த்திற்குள் முதலீடு செய்பவர்களுக்கு வருடத்திற்கு ரூ.1,000-த்தை அந்த ஆண்டும், அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்கும் திட்டத்தில் சேருவதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் வழங்குகிறது. 2012-13-ல் கணக்கு தொடங்கியவர்களுக்கும் இந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகிறது.

பொருளாதார ரீதியாக வசதி குறைவானவர் களுக்காக என்.பி.எஸ். லைட் என்ற திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் செலவினங்கள் இன்னும் குறைவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர்கள் 'அக்ரிகேட்டர்கள்’ (நலிவடைந்த பிரிவு மக்களை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளர்) மூலம் சேரவேண்டும். இதில் சேருபவர்களுக்கு ஸ்வலம்பன் திட்டத்தைப் போலவே, மத்திய அரசாங்கம் வருடத்திற்கு ரூ.1,000 மானியமாக 2016-17 வரை வழங்குகிறது.

இத்திட்டம் மூன்று வகையான முதலீடுகளை ஒவ்வொருவருக்கும் தருகிறது. பங்கு சார்ந்த குறியீட்டு முதலீடுகள், கடன் சார்ந்த அரசாங்கப் பத்திர முதலீடுகள், கடன் சார்ந்த கார்ப்பரேட் பத்திர முதலீடுகள் என்பவைதான் அந்த மூன்றும்.

பங்கு சார்ந்த முதலீட்டில் அதிகபட்சமாக ஒருவர் 50 சதவிகிதம்தான் முதலீடு செய்ய முடியும். அதேசமயத்தில், கடன் சார்ந்த இரண்டு வகையான முதலீட்டிலும் 100 சதவிகிதம்கூட செய்யலாம். எதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆட்டோ சாய்ஸ் ஆப்ஷன். வயதைப் பொறுத்து திட்டத்திற்கான சதவிகிதம் ஆட்டோமெட்டிக்காக நிர்ணயிக்கப்படும்.

எனக்கு ரிஸ்க் எடுப்பது பிடிக்காது. பங்கு சார்ந்த முதலீடே எனக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள், இத்திட்டத்தில் முழுக்க முழுக்க அரசாங்க பாண்டு அல்லது கார்ப்பரேட் பாண்டு அல்லது இரண்டிலும் கலந்து முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் 50 சதவிகிதத்தைப் பங்கு சார்ந்த முதலீட்டிலும், மீதியை கடன் சார்ந்த திட்டத்திலும் முதலீடு செய்யலாம்.

பி.பி.எஃப். (பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்)
பி.பி.எஃப். மக்கள் பரவலாக அறிந்த ஒன்று. பொதுமக்களுக்காக மத்திய அரசாங்கம் செயல் படுத்தும் திட்டமாகும். பல பொதுத்துறை வங்கிகள் மூலமும், ஓரிரு தனியார் வங்கிகள் மூலமும் மற்றும் அஞ்சலகங்கள் மூலமும் இத்திட்டத்தில் மக்கள் கணக்கை துவக்கிக்கொள்ளலாம்.

இது 15 வருட திட்டமாகும். அதற்கு மேலும் கணக்கைத் தொடரலாம்.

இந்தக் கணக்கைத் துவக்குவது எளிது. தற்போது ஆண்டுக்கு 8.8 சதவிகித வட்டி கேரன்டி-ஆக தரப்படுகிறது. போடும் பணம், அதிலிருந்து வரும் வட்டி மற்றும் வெளியே எடுக்கும் பணம் என அனைத்திற்கும் வரி விலக்கு உண்டு. ஒருவரின் பி.பி.எஃப். அக்கவுன்டை கோர்ட்கூட அட்டாச் செய்ய முடியாது. ஒவ்வொருவரும் ஒரு அக்கவுன்ட்தான் வைத்துக்கொள்ள முடியும். ஆண்டிற்கு உச்சபட்சமாக

ரூ.1 லட்சமும், குறைந்தபட்சமாக ரூ.500-ம் முதலீடு செய்யவேண்டும். மாதத்திற்கு ஒருமுறைதான் முதலீடு செய்ய முடியும்.


 இப்படி பல வசதிகள் கொண்ட இத்திட்டம் ஒவ்வொருவரின் ஓய்வுக்கால முதலீட்டுக் கூடையில் அவசியம் இடம் பெறவேண்டும். இதற்குமேல் தேவைப்படும் முதலீட்டை பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம். ஓய்வுக்காலத்தில் ஒருவர் இத்திட்டத்தில், வரிச் சலுகைக்காக முதலீடும் செய்யலாம்; அதேசமயத்தில், டாக்ஸ் ஃப்ரீயாக, திட்டம் துவங்கி 15 வருடம் ஆகியிருக்கும்பட்சத்தில், பணத்தை எடுத்துக்கொள்ளவும் செய்யலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"