பணத்தை சேமிக்க கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்


எந்த ஒரு விஷயமும் இலக்குடன் செய்யும்போதுதான் உத்வேகம் இருக்கும். அதே உத்வேகம் பொருளாதார விஷயத்திலும் இருக்க வேண்டும். இருபது வயதாகும்போது, இன்னும் ஐந்து ஆண்டுக்குள் இரண்டு லட்சம் ரூபாய் சேமிக்க வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு சேமிக்க வேண்டும்.

நமக்குத் திருமணம் ஆகும்போது திருமணச் செலவுக்கு பெற்றோரை எதிர்பார்க்காமல், நம் செலவில் நடத்த வேண்டும் என்பது போன்ற இலக்குகளை உருவாக்கிக்கொண்டு சேமிக்க வேண்டும்.ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலும், அதில் நூறு ரூபாயாவது சேமிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். நம் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க செலவுகளும் அதிகரிக்கத்தான் செய்யும். அதேபோல, வருமானம் அதிகரிக்கும்போது சேமிப்பையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

பி.பி.எஃப். கணக்குத் தொடங்குங்கள்:
வேலை கிடைத்ததும் உங்கள் பெயரில் ஒரு பி.பி.எஃப். (பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்) கணக்கைத் தொடங்குங்கள். நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றது மட்டுமல்லாமல், வரிச்சலுகையும் கிடைக்கும். வங்கிச் சேமிப்புக் கணக்கை போன்று நினைத்த நேரத்தில் போட்ட பணத்தை எடுக்காமல், குறிப்பிட்ட காலம் வரை பணம் பி.பி.எஃப். கணக்கில் இருக்கும். சேமிக்கும் பழக்கத்தை, இது கட்டாயப்படுத்தும். மேலும் இளம் வயது என்பதால் உங்கள் வருமானத்தில் எஸ்.ஐ.பி. முறையில் கொஞ்சம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற ஒழுங்கை பின்பற்றினால், எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

வீட்டுக் கடன்:
உங்கள் வேலை நிரந்தரமாகும் வரை பொறுத்திருந்து, அதன்பிறகு வீடு கட்டுவதுதான் நல்லது. இதற்காக ஒரு தொகையை சேமித்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே நிலம் இருந்தால்... அதில் வீடு கட்டுவதற்கு ஆகும் செலவு எவ்வளவு ஆகும் அல்லது புதிதாக நிலம் வாங்கித்தான் வீடு கட்ட வேண்டும் என்றால் நிலத்துக்கும், வீடு கட்டுவதற்கும் ஆகும் செலவு எவ்வளவு என்பதையெல்லாம் கணக்கிட்டுக் கொண்டு சேமிக்க வேண்டும். வீட்டுக் கடன் வாங்குவது வரிச் சேமிப்புக்கு மட்டுமல்லாமல் உங்கள் பெயரில் ஒரு சொத்தாகவும் வளர்ந்து நிற்கும்.

கிரெடிட் கார்டைத் தவிருங்கள்:
கையில் பணம் இருந்து செலவு செய்தால் மட்டுமே... கணக்குப் பார்த்து செலவு செய்வோம். ஆனால், கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது பார்க்கும் பொருளை எல்லாம் வாங்க வேண்டும் என்கிற ஆசை உங்களை கடனில் தள்ளிவிடும். எனவே, கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை தவிர்த்து 'டெபிட் கார்டு' பயன்படுத்துங்கள்.

லைஃப் இன்ஷூரன்ஸ்: 
வாழ்வில் மற்ற எந்தவித சேமிப்பை செய்ய மறந்தாலும்... உங்கள் பெயரில் காப்பீடு எடுத்துக் கொள்வது மிக முக்கியம். குறைந்த வயதில் காப்பீடு போடும்போது... அதிக தொகைக்கான கவரேஜ் குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும். எனவே, பணிக்குச் சேர்ந்தவுடன் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம்... லைஃப் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வதுதான். ஏஜென்ட் சொல்லும் பல பாலிசிகளை எடுத்துவிடாமல் உங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பாலிசியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.எதிர்காலம் சிறக்கட்டும்!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"