இன்ஷூரன்ஸ் பாலிசி – தவிர்க்க‍ வேண்டிய தவறுகள்!!


ஒருவர் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசிகூட இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறோ; அதைவிட பெரிய தவறு, அளவுக்கு அதிகமான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருப்பது. நிறைய இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதன் மூலம் ஒருவர் தனது வாழ்க்கையை வலிமையாக காப்பீடு செய்திருப்பதாக நினைக்கிறார். ஆனால், அவர் பணம் எந்த பிரயோஜனமும் இல்லாமல் வீணாக போய்க் கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரிவதே இல்லை.

முதலீடல்ல..
”இன்ஷூரன்ஸ் தொடர்பான குழப்பங்கள் மக்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது ஒருவரின் வருமானம் தடைபடும் நிலையில், அவரைச் சார்ந்தவர் கள் தொடந்து பணப்பலன்களை அனுபவிக்க மட்டும்தான். ஆனால், நம் மக்களில் பலர் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஒரு முதலீடாகவே பார்க்கிறார்கள். இதனால் நிறைய பாலிசிகளை எடுத்துத் தள்ளுகிறார்கள்.

ஒருவர் எத்தனை பாலிசி எடுக்கிறார் என்பதைவிட எதற்காக பாலிசி எடுக்கிறார், அதில் எவ்வளவு கவரேஜ் கிடைக்கிறது என்று பார்ப்பதே முக்கியம். இதற்கு இன்ஷூரன்ஸ் பற்றிய நமது புரிதலை முதலில் மாற்றி, சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் குழப்பங்கள் தீரும்.

பொருளாதார மதிப்பு 
இன்ஷூரன்ஸ் திட்டங்களில் இறங்கும் முன், முதலில் நமது பொருளாதார மதிப்பு ‘எக்கனாமிக் வேல்யூ’ என்ன என்று தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். நமது வருமானம், நம்மைச் சார்ந்தவர்கள், அவர்களது தேவை, நமது சொத்து மதிப்பு, எவ்வளவு ரூபாய் வரை பிரீமியம் செலுத்த முடியும் என்பது போன்ற விஷயங்களை அவசியம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக, ஆண்டு வருமானத்தைப் போல 15 முதல் 20 மடங்கு தொகைக்கு காப்பீடு செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும். அதேநேரத்தில், புதிதாக வேலைக்குச் சேரும் நிலையில் மூன்று அல்லது நான்கு மடங்கு தொகைகளிலிருந்து தொடங்குவதுதான் சரியானது.

டேர்ம் இன்ஷூரன்ஸ்
பாலிசி முதிர்வின்போது பணம் திரும்பக் கிடைக்கும் பாலிசிகளில், பிரீமியம் அதிகமாகவே இருக்கும். ஆனால், அதற்கு ஏற்றாற்போல் முதிர்வுத் தொகை லாபகரமாக இருக்குமா? என்றால் இருக்காது. இதுபோன்ற பாலிசிகளில் சுமார் 5 முதல் 6 சதவிகிதம்தான் வருமானத்தை எதிர்பார்க்க முடியும். தபால் அலுவலகச் சேமிப்பு தரும் லாபத்தைவிட இது குறைவு.

பாலிசி எடுப்பதன் நோக்கம் அதிக இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பதே. குறைந்த பிரீமியத்தில் அதிக இழப்பீடு பெற வாய்ப்பளிக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்களை எடுப்பதுதான் சரியானது. ஒருவரின் ஆண்டு வருமானத்தில் சுமார் 5% அளவுக்கும் பிரீமியம் செலுத்தும் அளவுக்கு பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. எண்டோவ்மென்ட், யூலிப் பாலிசிகளில் முதலீட்டு நோக்கில் பணம் போட்டு காத்திருந்து குறைவான வருமானத்தைப் பெறுகிறார்கள் பலர்.

இன்னும் சிலர் சென்டிமென்டில் சிக்கி குழந்தைகள் பெயரில் அல்லது குழந்தைகள் பெயரில் உள்ள பாலிசிகளை எடுக்கிறார்கள். அதுவும் தவறுதான். குடும்பத்தில் யார் வருமானம் ஈட்டுகிறார்களோ அவர்களின் பெயரில்தான் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். இந்த பாலிசிகளுக்கு பதில், குறைந்த பிரீமியத்தில் டேர்ம் பிளான் எடுத்துவிட்டு மீதிக்கு பி.எஃப்., பி.பி.எஃப், ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற வற்றில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பார்க்க முடியும் என்பதில் சந்தேகமே வேண்டாம். உங்களின் தேவைகளையும் எளிதில் நிறை வேற்றிக்கொள்ள முடியும்.

இன்னும் சிலர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பென்ஷன் பாலிசிகளை எடுக்கிறார்கள். இவையும் குறைந்த வருமானத்தை தருபவையாகவே இருக்கின்றன. அவற்றுக்குப் பதில் டாப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.

எத்தனை பாலிசிகள்?
ஒருவர் இத்தனை பாலிசிகள் தான் எடுக்கலாம் என்று எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால், ஒருவரது ‘எக்கனாமிக் வேல்யூ’ அடிப்படையில் ஒரே ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசிகூட எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு, கடன் வாங்குவது மற்றும் இதர பொறுப்புகளின் அடிப்படையில் பாலிசி கவரேஜ் தொகை அதிகரித்துக் கொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் என்பது நமது குடும்பத்தைப் பாதுகாக்கும் ஒரு கவசம். முதலீடு என்பது நம் பணத்தைப் பெருக்கும் ஆயுதம் என்கிற வகையில் அணுக நாம் கற்றுக் கொண்டால் மட்டுமே நம் தேவைக்கு ஏற்ப டேர்ம் பிளான் மட்டும் எடுத்துவிட்டு, இதர முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து, நல்ல பலனைக் காண முடியும்”.

எந்தெந்த பாலிசிகளுக்கு கடன் கிடைக்கும்?
இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது நம் உயிருக்குப் பாதுகாப்பு தரும் இன்றியமையாத விஷயம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நமக்கு அவசரமாகப் பணம் தேவை ப்படும் சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்து உதவுகிற நண்பனாகவும் இன்ஷூரன் ஸ் பாலிசிகள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது.

இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்து கடன் வாங்க என்ன வழி முறை? 
இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் கடன் வாங்குபவர்கள் பாலிசி எடுத்துள்ள கிளை அலுவலகத்தில் கடனுக்கான விண்ணப்பத்தைத் தெளிவாகப் படித்துப் பார்த்துவிட்டு, அதில் கேட்கப்பட்டுள்ள பாலிசி தாரர்களின் விவரங்கள், பாலிசியின் விவரம் மற்றும் வங்கிக் கணக்கு பற்றிய விவரங்கள் போன்றவற்றை பூர்த்தி செய்து அதனுடன் ஒரிஜினல் பாலிசி பத்திரத்தைச் சேர்த்துத் தந்தால், சில நாட்களில் கடன் கிடைத்து விடும்.

வட்டி எவ்வளவு?
இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்து வாங்கும் கடனுக்கு தற்போது 9% வட்டி (மாறுதலுக்கு உட்பட்டது) வசூலிக்கப்படுகிறது. மற்ற எந்த கட னுக்கான வட்டியோடு ஒப்பிட்டாலும் இந்த கடனுக்கான வட்டி விகிதம் மிகக் குறைவு. இந்த கடனுக்கான வட்டியை ஆறு மாதத்தி ற்கு ஒருமுறை எல்.ஐ.சி.யின் எந்த கிளையில் வேண்டுமானாலும் கட்டலாம்.

எப்போது கடன் கிடைக்கும்?
பொதுவாக பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகளில் கடன் கிடைக்கும். மூன் று ஆண்டுகளுக்கான மொத்த பிரீமி யமும் செலுத்தியிருக்க வேண்டியது அவசியம். ஒருவர் எத்தனை பாலிசி வைத்திருக்கிறாரோ, அத்தனை பாலிசிகள் மூலமும் (கடன் பெறும் தகுதி இருந்தால்) கடன் பெறலாம்.

எதற்கெல்லாம் கடன் வாங்கலாம்?
பாலிசிகளில் கடன் வாங்கும் போது குறிப்பிட்ட காரணத்திற்காகத் தான் கடன் வாங்க வேண்டுமென்றில்லை. பாலிசிதாரர் தன் தேவைக்கேற்ப, தகுதி இருந்தால் எந்த காரணத்திற்கு வேண்டுமானாலும் கடன் வாங்கலாம்.

திரும்ப செலுத்தாவிட்டால்..?
மற்ற கடன்களைப்போல, இதில் கட னை திரும்பக் கட்டச் சொல்லி கெடு பிடி செய்ய மாட்டார்கள். ஆனால், ஆறு மாதத்திற்குள் பாலிசி கடனுக்கான வட்டியைக் கட்டுவது அவசியம். அப்படி கட்டாமல் விட்டால் வட்டி குட்டி போட்டு கூட்டு வட்டியாக மாறிவிடும். தவிர, பாலிசி முதிர்வடையும் போது கடன் தொகையையும், கடனுக்கான வட்டியையும் பிடித்தது போக மீதமுள்ள தொகையைத்தான் பாலிசிதாரருக்கு தருவார்கள். பாலிசி முதிர்வுத் தொகையை விட கட்ட வேண்டிய கடன் தொகை அதிகமிருந்தால் பாலிசிதாரருக்கு எந்தப் பணமும் கிடைக்காது. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

தனியார் வங்கி தரும் கடன்!
எல்.ஐ.சி. மட்டுமல்ல, எந்த இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்தின் பாலிசியாக இருந்தாலும் அதன் மேல் கடன் தருகிறது ஹெச்.டி.எஃப்.சி. வங்கி.

”எங்கள் வங்கியில், கடன் பெறத் தகுதி கொண்ட அனைத்து வகையா ன இன்ஷூரன்ஸ் நிறுவனங்க ளின் பாலிசிகளுக்கும் கடன் தருகிறோம் . இப்போதைக்கு எண்டோவ்மென்ட் பாலிசி, யூனிட் லிங்க்டு (டெப்ட் ஃப ண்ட்) பாலிசிகளுக்கு மட்டும் கடன் தருகிறோம். பாலிசி எடுத்து மூன்றாண்டு காலம் முடிந்த பிறகு சரண்டர் தொகையில் 80% வரை கடன் தருகிறோம்” என்று சொல்லும் இந்த வங்கி 13.75% முதல் 14.75% வரை வட்டி வாங்குகிறது. குறைந்த பட்சம் 2 – 2.5 லட்சம் வரை சரண்டர் வேல்யூ இருந்தால் மட்டுமே இந்த வங்கியிலிருந்து பாலிசிகள் மூலம் கடன் கிடைக்கும்.”

ஒருவர் எதற்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்..? 
தனக்குப் பிறகு தன் குடும்பத்தினருக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கடி எதுவும் வந்து விட க்கூடாது என்பதற்காகத்தானே? இவ்வளவு அக்கறையோடு பாலிசி எடுப்பவர்களில் சிலர், கடைசியில் ஒரு விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள். தனக்குப் பிறகு பாலிசித் தொகை யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான நாமினியை நியமிக்காமல் விட்டுவிடுகிறார்கள். அல்லது தவறான நபரை நியமித்து விடுகிறார்கள்! விளைவு பாலிசி எடுத்த நோக்கமே நிறைவேறாமல் திசை மாறி, குடும்பத்தில் குழப்பத்துக்கு வித்திட்டுவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர்க்க நாமினியை நியமிக்கும் போது, எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்…

யாரை நியமிக்கலாம்?
உங்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், ஏன் ரத்த சம்பந்தம் அல்லாத நண்பர்களைக்கூட நாமினியாக நியமிக்கலாம். ஆனால், நாமினியாக நீங்கள் நியமிப்பவரின் பெயர் தெளிவாக இருக்க வேண்டும். வயது, முகவரி, பாலிசிதாரருக்கு என்ன உறவுமுறை போன்ற விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். நீங்கள் நியமிக்கும் நாமினி மைனராக இருந்தால் அவருக்கு காப்பாளர் ஒருவரையும் நியமிக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி?
வங்கிச் சேமிப்பு கணக்கு, பி.எஃப். போன்றவைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகளை நியமிப்பது போல இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் போதும், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை நாமினியாக நியமிக்கலாம். அப்படி ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நியமிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எவ்வளவு சதவிகிதம் பாலிசி தொகை கொடுக்க வேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டால் எதிர்காலத்தில் இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பிரச்னை இருக்காது.

நாமினி இறந்துவிட்டால்?
பாலிசிதாரர் உயிரோடு இருக்கும்போதே நாமினியாக நியமிக்கப்பட்ட நபர் இறந்துவிட்டால் புதிதாக இன்னொருவரை நாமினியாக நியமிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து கொடு த்தால் போதுமானது.

நாமினி அல்லாத பாலிசி?
ஒருவேளை யாருமே நாமினியாக நியமிக்கப்படவில்லை எனில், இழப்பீட்டுத் தொகை பாலிசிதாரரின் சட்டப்படியான வாரிசுகளுக்கு கிடைக்கும். ஆனால் அவர்கள் உரிய சான்றிதழ்கள் எல்லாம் கொடுத்து கிளைம் தொகையை வாங்க சிறிது காலதாமதமாகும். இதைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே யாராவது ஒரு வரை நாமினியாக நியமித்து விடுவதே நல்லது.

உரிமை மாற்றம்!
நாமினிக்கும் உரிமை மாற்றத்திற்கும் (அசைன்மென்ட்) வேறுபாடு உள்ளது. நாமினி என்பவர் பாலிசிதாரரின் மறைவுக்குப் பிறகு அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளும் உரிமையுடையவர். ஆனால், பாலிசி பத்திரத்தை வைத்து வங்கியில் கடன் வாங்கும்போது, வங்கி ஒரு கேரன்டிக்காக பாலிசி பத்திரத்தை வாங்கிக் கொள்ளும். இதையே ‘உரிமை மாற்றம்’ என்கிறோம்.

வங்கியிலிருந்து வாங்கிய கடன் முழு மையாக திருப்பிக் கட்டப்படும் வரை பாலிசியின் மீதான முழு உரிமையும் வங்கிக்கே உண்டு. கடன் முழுவதும் கட்டப்படாத நிலையில் பாலிசிதாரர் மறைந்துவிட்டால் இழப்பீடு அவரது குடும்பத்துக்கு கிடைக்காது; வங்கிக்கே சேரும்! இன்னொரு முக்கியமான விஷயம் உரிமை மாற்றம் கொடுக்கும்போது நாமினி செயல் இழந்து போகும்!

இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.175 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை?
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: 
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"