எச்சரிக்கை : தலையெழுத்தையே மாற்றும் ஜாமீன் கையெழுத்து...


கடன் என்று யார் முன்னாலும் கைகட்டி நிற்காமல் கம்பீரமாக வாழும் மனிதர்கள் கூட சில நேரங்களில், நண்பருக்காக போட்ட ஜாமீன் கையெழுத்தால் தலை குனிந்து நிற்கக்கூடிய சூழ்நிலை வந்து விடுகிறது .

பெரும்பாலும் சிக்கல் வருவது வங்கிகளில் வாங்கும் கடனுக்கு ஜாமீன் போடும்போதுதான்!ஜாமீன் கேட்கப்படுவதே, ஒருவேளை கடன் வாங்கியவர் அதைத் திரும்பச் செலுத்தாவிட்டால் வசூலிப்பதற்கு ஒரு ஆள் வேண்டும் என்பதால்தான். அதனால்தான் கடனை மீட்பதற்குத் தகுதி உள்ள ஆளைத்தான் ஜாமீன்தாரராக கடன் வழங்குபவர்கள் கேட்கிறார்கள்.

வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில்தான் பிரச்னை உருவாகிறது. அப்போது வங்கி, கடனாளியின் சொத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படுகிறது. அப்படி அவரிடம் சொத்து இல்லை என்கிறபோது, ஜாமீன் போட்டவர்தான் கையெழுத்திட்ட கடன் தொகைக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

மற்றொருவரின் வியாபாரக் கடனுக்காக ஒருவர் ஜாமீன் போட்டிருந்தால் யாருக்கு அதிக பொறுப்பு?
கடன் தொகைக்கு இருவருக்கும் சமமான பொறுப்பு உண்டு. கடன் செலுத்தப்படாவிட்டால், சர்ஃபேஸி (Sarfaesi) சட்டத்தின் மூலம் பிணையாகக் காட்டப்பட்ட சொத்தை பொது ஏலத்தின் மூலம் விற்க வாய்ப்பு உள்ளது.

ஜாமீன் கையெழுத்துப் போடுவதே தவறான செயலா..?
பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் ஒரு முறைதான் ஜாமீன் என்பது. ஆனால், யாருக்கு ஜாமீன் போட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். கடனாளி கடனைக் கட்டாத சூழ்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஜாமீன் போட்டவரும் ஆளாக வேண்டியிருக்கும்.

ஜாமீன் கையெழுத்து பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
கடனாளியிடம் இருந்து கடனை வசூலிக்கவோ அவருடைய சொத்துக்களை ஜப்தி செய்யவோ வழியே இல்லாத நிலையில், முதல்படியாக கடனை அடைக்குமாறு ஜாமீன்தாரருக்கு நோட்டீஸ் அளிக்கப்படும். அப்போது ஜாமீன்தாரர் கடனை அடைக்க முன்வரவில்லை என்றால், நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்படும். அப்போது கடன் மற்றும் வட்டியை ஜாமீன்தாரர் கொடுக்கவேண்டிவரும். கொடுக்கத் தவறினால், அவரது அசையும் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும். மாதச் சம்பளம் வாங்குபவராக இருந்தால், அவரது மாதச்சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு கொடுக்க வேண்டி வரும். அதுவும் போதவில்லை என்றால், அசையா சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"