குண்டு துளைக்காத ஆடைகளை கண்டுபிடித்த ரகசியம்!!


ஒரு துப்பாக்கிக் குண்டு எப்படித் தாக்கம் ஏற்படுத்துகிறது? குண்டு ஓர் இலக்கைத் தாக்கும்போது, பிரம்மாண்டமான விசை ஒரு சிறிய பரப்பில் (குண்டின் முனையில்) செலுத்தப்படுகிறது. அந்த விசைதான் சேதம் ஏற்படுத்துகிறது. அந்த விசையினால் கூர்த்த முனை உள்ள குண்டு உள்ளே செலுத்தப்படுகிறது. அந்த விசையை உள்வாங்கிக்கொண்டு அதைப் பரவச் செய்துவிட்டால் தாக்கம் பெரிதாக இருக்காது.

இதைக் கண்டுபிடிக்க 16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள். எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வந்தது இரும்புத் தகடுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், ஆஸ்திரேலியாவில், ஒரு சிறிய போராளிக் குழுவிற்கும், போலீசாருக்குமிடையே ஒரு ஹோட்டலில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது போராளிகள், விவசாயிகள் நிலத்தை உழுவதற்காகப் பயன்படுத்தும் கொழுக்களைக் கோர்த்துத் தயாரிக்கப்பட்ட புல்லட் ப்ரூஃப் ஆடைகளை அணிந்திருந்தார்கள்.

ஏர் முனைக்கு ஈடு எதுவுமே இல்லைதான். ஆனால் எடை? அந்த ஆடையின் எடை 44 கிலோ. இத்தனை பெரிய கனத்தைத் தூக்கிக்கொண்டு எப்படி ஓடுவது? ஒரே தகடாக வைத்து எடையைக் குறைக்க முயன்றார்கள். அப்படியும் 18 கிலோ வந்தது. ஒரே தகடுக்குப் பதில் செதில் செதிலாக அடுக்கினால் என்ன என்று யோசனை வந்தது. என்றாலும் 5 கிலோவிற்கு மேல் குறைக்க முடியவில்லை.

1881-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டோம்ஸ்டோன் என்ற ஊரில் ஒரு வியாபாரிக்கும் சூதாடிக்குமிடையே நடந்த வாக்குவாதம் தடித்து துப்பாக்கிச் சண்டையாக மாறியது. மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் சூதாடி, டாக்டரிடம் அழைத்து வரப்பட்டார். உடலில் குண்டு பாய்ந்திருக்கிறது. ஆனால் வெளியே ஒரு துளி ரத்தம் இல்லை. ஆச்சரியப்பட்டுப் போன டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்து குண்டை முழுமையாக வெளியே எடுத்தார். சட்டைப் பையில் வைத்திருந்த பட்டு கர்ச்சீப்பின் இழைகள் அந்தக் குண்டைச் சுற்றியிருப்பதைப் பார்த்தார். மனதில் ஒரு பொறி தட்டியது.

மறுபடியும் ஒரு சண்டை. இந்த முறை காயங்களுடன் ஒரு போலீஸ்காரரைத் தூக்கி வந்தார்கள். தொப்பியையும் தாண்டி குண்டு அவர் தலையைத் தாக்கியிருந்தது. ஆனால் கழுத்தில் இருந்த பட்டு ஸ்கார்ஃப்பைத் தாண்டி குண்டு உள்ளே போகவில்லை. இதையெல்லாம் வைத்து நெருக்கமாகப் பின்னப்பட்ட பட்டின் இழைகளுக்கு துப்பாக்கிக் குண்டின் வேகத்தைக் குறைக்கும் வலிமை உண்டென்று டாக்டர் ஒரு கட்டுரை எழுதினார்.

இதற்குப் பின் வெகுகாலத்திற்கு இறுக்கமாக நெய்யப்பட்ட பட்டை எழுபது எண்பது வரிசைகளாக அடுக்கிச் செய்யப்பட்ட குண்டு தாக்காத ஆடைகளே உருவாக்கப்பட்டு வந்தன. இப்போது பட்டுக்குப் பதில் கெவ்லார் என்ற செயற்கை இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த கெவ்லார் ஒரு பாலிமர்.

இதையும் தற்செயலாகத்தான் கண்டுபிடித்தார்கள். கண்டுபிடித்தவர் ஒரு பெண் விஞ்ஞானி. அவர் எதையெதையோ கலந்து ஒரு பாலிமரை உருவாக்க முயன்று கொண்டிருந்தார். சரியாக வரவில்லை. மறுநாள் சோதனைச் சாலையை சுத்தம் செய்யும்போது அதைத் தூக்கி வெளியே கொட்டப் போனார். கொஞ்சம் இருப்பா என்று அதை ஒரு டெக்னீஷியனிடம் கொடுத்து நூற்கச் சொன்னார். அதுதான் இந்த கெவ்லார். கடைசியில் ஒரு குப்பையால்தான் குண்டை தாங்கிப் பிடிக்க முடிந்தது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"