காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சாசன பிரிவு 370  • நாட்டின் பிற மாநிலத்தவர், ஜம்மு - காஷ்மீரில் நிலம், சொத்துகள் வாங்க முடியாது.
  • ஜம்மு - காஷ்மீர் பகுதியை, 1947ல், இந்தியாவுடன் இணைப்பதற்காக, அப்போதைய மன்னர் ஹரிசிங் வேண்டுகோளின் படி, அரசியல் சாசன சிறப்பு பிரிவு, 370 ஏற்படுத்தப்பட்டது.
  • ஒட்டுமொத்த இந்திய சட்டம், இங்கு செல்லுபடியாகாது. ராணுவம், வௌ?யுறவு, தகவல் தொடர்பு போன்ற சட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
  • புதிதாக சட்டம் ஏதும் நிறைவேற்ற வேண்டுமானால், மாநில அரசின் ஒப்புதல் அவசியம்.
  • இந்த பிரிவை திருத்த வேண்டுமானால், அரசியல் நிர்ணய சபையை கூட்டம் வேண்டும்.
  • மாநில சட்டசபையின் ஒப்புதல் படியே, எந்த சட்டமும் இந்த மாநிலத்தில் செல்லுபடியாகும்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் இந்த பூமியை இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரித்துத் தந்துவிட்டு வெளியேறிய போது, இங்கிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் ஏதேனும் ஒரு நாட்டோடு இணைந்தன. ஜம்மு - காஷ்மீரில் வினோதமான நிலை ஏற்பட்டது. அங்கே குடிமக்களில் பெரும் பான்மையோர் முஸ்லிம்களாக இருக்க, மகாராஜாவானவர் இந்துவாக இருக்க, முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது.

1947 அக்டோபர் 26 அன்று இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டனுக்கு ஜம்மு - காஷ்மீரின் மகாராஜா ஹரிசிங் எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டார்; “எந்த நாட்டோடு இணைவது அல்லது தனித்து நிற்பது இரு நாடுகளுக்கும் மற்றும் எனது அரசிற்கும் நல்லதில்லையா என்று முடிவு செய்ய எனக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது.” இத்தகைய மனோநிலையில் இருந்த அந்த மகாராஜா பாகிஸ்தானை அணுகி அதனுடன் “தற்போதைய நிலையைத் தொடரும் ஒப்பந்தம்” ஒன்றை உருவாக்கியிருந்தார்.

ஒருபுறம் இப்படியொரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்த பாகிஸ்தான் அரசு மறுபுறம் ஜம்மு - காஷ்மீரைத் தன்னோடு கட்டாயப்படுத்தி இணைக்க மறைமுக வேலைகளில் இறங்கியது. ஹரிசிங் தனது கடிதத்தில் தொடர்ந்து கூறியது போல “நவீன ஆயுதங்களைத் தாங்கிய பழங்குடி மக்களின் பெரும் ஊடுருவல்” பாகிஸ்தானிலிருந்து வந்தது.இந்தச் சூழலில்தான் இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார் ஹரிசிங்.

அந்த உதவியை அந்த சமஸ்தானத்திற்கு இந்திய அரசு வழங்க வேண்டுமென்றால் அது இந்தியாவோடு இணைய ஒப்புக் கொண்டிருக்க வேண்டுமென்பது எளிய யதார்த்தம்.இதைப் புரிந்து கொண்டிருந்த ஹரிசிங் இந்தக் கடிதத்தோடு அப்படியொரு “இணைப்புப் பத்திரத்தை”யும் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார்.

இந்த ஏற்பாட்டிற்கு ஜம்மு - காஷ்மீர் மக்களின் ஆதரவும் உண்டு எனக் காட்டும் வகையில் அவர்களது தலைவராகிய ஷேக் அப்துல்லாவைக் கொண்டு ஓர் இடைக்கால அரசை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஆங்கிலேயே சாம்ராஜியத்திற்குள் தனி சமஸ்தானமாக இருந்தவர்கள். இந்துக்களை ஆகப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவோடு இணைவது எனும்போது அங்கிருந்த முஸ்லிம் மக்கள் நெஞ்சில் எங்கே தாங்கள் இனி இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவோமோ எனும் சந்தேகம் எழுந்திருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இந்தியாவிலிருந்த இந்துத்துவா வாதிகளின் பேச்சுக்களும், செயல்களும் அப்படித்தான் இருந்தன. பிரிவினையை ஒட்டி நடந்த கொடூரமான மதக் கலவரங்கள் ரத்த சாட்சியாய் இருந்தன.எனவே, அந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் “இணைப்புப் பத்திரத்தில்” ஒரு முக்கியமான சரத்து இருந்தது.

அது: “இங்குள்ள அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக இந்த அரசுக்கு இந்திய சட்டமன்றம் சட்டம் செய்யலாம் என்பதை நான் ஏற்கிறேன்”. இது மகாராஜா ஹரிசிங்கின் ஒப்புதல். அங்குள்ள அட்டவணையில் நான்கு விஷயங்கள் குறிப்பிடப்பட்டன. அவை: “1. பாதுகாப்பு, 2. வெளிவிவகாரம், 3. தகவல்தொடர்பு, 4. துணை விஷயங்கள்”. இதன் அர்த்தம் இந்த நான்கு விஷயங்கள் தவிர இதரவை பற்றி ஜம்மு - காஷ்மீர் அரசுதான் சட்டம் செய்யலாம் என்பதாகும். இப்படிப்பட்ட விரிந்த மாநில சுயாட்சியை நிபந்தனையாகக் கொண்டுதான் இந்தியாவோடு இணைய ஒப்புக் கொண்டார் ஹரிசிங்.

இத்தகைய “இணைப்புப் பத்திரத்தை” மறுநாள் ஏற்றுக் கொண்டுதான், அன்றே காஷ்மீருக்குத் தனது படைகளை அனுப்பியது இந்திய அரசு. தலைநகரம் ஸ்ரீநகர் உள்ளிட்ட பெரும்பகுதி காப்பற்றப்பட்டது.

இதிலிருந்த இந்தச் சரத்தைக் கணக்கில் கொண்டுதான் இந்திய அரசியல் சாசனத்தில் பிரிவு 370 உருவாக்கப்பட்டது. அதில் “இணைப்புப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் அந்த மாநில அரசின் ஒப்புதலோடான விஷயங்கள்” பற்றி இந்திய அரசு சட்டங்கள் செய்யும் என்று குறிப்பாகச் சுட்டப்பட்டது. இந்திய அரசியல் நிர்ணய சபை 1949 அக் டோபரில் இதை ஏற்றது என்பது சுதந்திர இந்தியாவின் அரசியல் நேர்மையை, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் தன்மையை எடுத்துக் காட்டியது.இணைப்பை பலப்படுத்தியது

பிரிவு370-ஐ பொறுத்தவரை நேரு மட்டுமல்லாது படேலும் ஆதரித்தார் என்பதே சரித்திரம்.இது பற்றிய விபரங்களை திரு. ஏ.ஜி. நூரனி “பிரிவு 370 : ஜம்மு - காஷ்மீரின் அரசியல் சாசன வரலாறு” எனும் நூலில் தந்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரில் 1951ல் நடந்த தேர்தலில் ஷேக் அப்துல்லாவின் “தேசிய மாநாடு” கட்சி பெருவெற்றி பெற்றது.

1952 ஜூலையில் மத்திய அரசோடு ஷேக் ஒப்பந்தத்திற்கு வந்தார், அதன் மூலம் பிரிவு 370 இரு தரப்பாலும் உறுதி செய்யப்பட்டது. இப்படியாக நமது அரசியல் சாசனத்தில் இடம் பெற்றது சரித்திரப்புகழ் பூத்த இந்தப் பிரிவு. இதன் மூலம் அந்த மாநில மக்களுக்குத் தரப்பட்ட விரிவான சுயாட்சிதான் இந்தியாவுடனான அதன் இணைப்பை பலப்படுத்தியது, பிரிவினைவாதிகளின் கரங்களைக் கட்டுப்படுத்தியது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"