பெண்களை ரகசியமாக போட்டோ எடுத்த ஐபிஎஸ் அதிகாரி


காபி ஷாப்புக்கு வந்திருந்த பெண்களை திருட்டுத்தனமாக செல்போனில் படம் எடுத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு தர்ம அடி கிடைத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

பெங்களூரின் முக்கிய வர்த்தக பகுதியான கன்னிகாம் ரோடு பகுதியிலுள்ள காபி ஷாப் ஒன்றில் திங்கள்கிழமை 30 வயது மதிக்கத்தக்க இரு தோழிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து நாற்காலியில் இருந்த ஒரு நபர் தனது செல்போனில் ரகசியமாக இந்த பெண்களை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

எதேர்ச்சையாக ஒருவர் பார்த்துவிட்டார். உடனடியாக எழுந்து சென்று அந்த நபரின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு எங்களை எப்படி படம் எடுக்கலாம் என்று தகராறு செய்துள்ளார். இதை பார்த்த காபி ஷாப்புக்கு வந்த வாடிக்கையாளர்களும், சாலையோரம் நடந்து சென்றவர்களும் சேர்ந்து செல்போன் நபருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அதற்குள் தகவல் அறிந்து போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர்.

போலீசார் வந்ததும், செல்போன் நபர், தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு சகஜமாக பேச முயன்றார். ஆனால் சீருடை இன்றி, சாதாரண உடையில் இருந்த அவரது பேச்சை நம்பாத போலீசார் அந்த நபரை பிடித்து சென்று லாக்-அப்பில் தள்ளினர். ஆனால் விசாரணையின்போது அவர் உண்மையிலேயே ஐபிஎஸ் அதிகாரிதான் என தெரிந்து கொண்ட போலீசார் அதிர்ச்சியாகிவிட்டனர்.

உடனடியாக அந்த அதிகாரியிடம் மன்னிப்பு !!! கேட்டுவிட்டு லாக்-அப்பில் இருந்து திறந்து வெளியே விட்டு விட்டனர். காபி ஷாப் நிர்வாகிகள் நடந்த சம்பவத்தை உறுதி செய்தாலும், காவல் நிலையத்தில் குற்றவாளி இல்லை. இதுகுறித்து மீடியாக்களில் செய்தி கசிந்ததால் போலீசார் இக்கட்டில் சிக்கியுள்ளனர். மாநில போலீஸ் டிஜிபி லால்ருக்குமா பச்சாவோ இதுபற்றி கூறுகையில், முறைப்படியான புகார் அளிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறை தயங்காது என்றார்.

குற்றசாட்டுக்கு உள்ளான ஐபிஎஸ் அதிகாரி, தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். முறைப்படியான புகார் வரும்வரை அந்த அதிகாரி பெயரை வெளியிட வேண்டாம் என்று மீடியாக்களை காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஐபிஎஸ் அதிகாரியே பெண்களை திருட்டுத்தனமாக படம் எடுத்த சம்பவம் நடந்துள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"