மாணவர்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடிய புதுமையான தேடுயந்திரம்


தேடியந்திரம் (சர்ச் இஞ்சின்) என்றவுடன் நினைவுக்கு வருவது கூகிள் தான். ஆனால் இணைய உலகில் கூகிள் மட்டும் தான் தேடியந்திரம் என்று நினைத்துவிடக்கூடாது. சூப்பரான மாற்று தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. அவற்றில் கல்வியாளர்கள் கொண்டாடும் வோல்பிராம் ஆல்பா தேடியந்திரம் பற்றி பார்ப்போமா?

இது மாணவர்களுக்கான தேடியந்ந்திரம். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் முதல் ஆய்வு மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்தரக்கூடிய தேடுயந்திரம் . கணிதமும் ,அறிவியலும் தான் இதன் கோட்டை ! இணையத்தில் தேட இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துவதை விட சுவாரஸ்யமானது வேறு இருக்காது.

இந்த தேடியந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கமான அறியப்பட்ட கூகிள் போன்ற தேடியந்திரங்களில் இருந்து மாறுபட்டது என்பதால் இதன் அடிப்படைகளை அறிமுகம் செய்து கொண்டால் எளிதாக இருக்கும். முதல் விஷயம் இது அடிப்படையில் தேடியந்திரமே அல்ல; இது கம்ப்யூட்டேஷனல் இஞ்சின் அதாவது கணக்கீட்டு எந்திரம் என்று சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க கணிதவியல் சமன்பாடுகளை அடிப்ப்டையாக கொண்டது.

இதில் கூகுளில் தேடுவது போல எது பற்றியும் தேடலாம். ஆனால் கூகிளில் தேடும் போது முடிவுகள் பட்டியலிடப்படுவது போல் இதில் பட்டியல் எல்லாம் வராது. தேடலுக்கான பதில் அழகாக ஒரே பக்கத்தில் தோன்றும். அதாவது கூகிள் செய்வது போல தேடப்படும் குறிச்சொற்கள் தொடர்பான பொருத்தமான இணையதளங்களை பட்டியலிட்டு, உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளவும் என சொல்லாது. அதற்கு பதிலாக உங்கள் தேடலுக்கான தகவல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி தொகுத்து அளித்து அசத்துகிறது.

உதாரணம் ஒன்று பார்க்கலாம்; விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பற்றி நீங்கள் தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஐசக் நியூட்டன் பெளதீக விஞ்ஞானி எனும் அறிமுகத்துடன் துவங்கி, நியூட்டன் முழுப்பெயர், பிறந்த ஆண்டு, பிறந்த இடம் போன்ற சுயசரிதை விவரங்கள் மற்றும் நியூட்டனின் முக்கிய குறிப்புகள் அவரது விஞ்ஞான பங்களிப்பு ஆகியவை வந்து நிற்கும். இவை அனைத்தும் ஒரே பக்கத்தில் இடம்பெற்றிருப்பதோடு எல்லாமே ரத்தினச்சுருக்கமாக இருக்கும்.

நியூட்டன் பற்றி உங்களி தேடலின் நோக்கம் எதுவே அதற்கேற்ப இந்த விவரங்களில் இருந்து மேற்கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நியூட்டன் என்றால் விதிகள் இல்லாமலா? நியூட்டனின் பிரபலமான மூன்று விதிகள் உட்பட, கால்குலஸ், பூவியூர்ப்பு விசை என அவரது முக்கிய பங்களிப்பு குறித்தும் சுருக்கமான குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் தேவையானதை கிளிக் செய்தால் மேற்கொண்டு விரிவாக தெரிந்து கொள்ளலாம். நியூட்டன் எழுதிய புத்தகம் முதல் கொண்டு அவரது குடும்ப வாரிசுகள் பற்றிய தகவல்களையும் இடையே பார்க்கலாம். நியூட்டன் புகைப்படம் மற்றும் அவரது வாழ்ந்த காலத்தின் வரைபட விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய விஷயம், பத்தி பத்தியாக படிக்கும் தேவை இல்லாமல் நேர்த்தியான சில வரி குறிப்புகளில் நியூட்டனை அறிமுகம் செய்கிறது . ஒரு கட்டுரைக்காக நியூட்டன் பற்றி தகவல் தேவை என்றால் இந்த ஒரே பக்கத்தில் தெரிந்து கொண்டு விடலாம். இல்லை நியூட்டனின் தேற்றங்கள் மற்றும் கோட்பாடுகள் பற்றி அறிய வேண்டும் என்றாலும் அதற்குறியை இணைப்புகளை கிளிக் செய்து விரிவான ஆய்வில் ஈடுபடலாம்.

இப்படி எந்த தலைப்பை கிளிக் செய்தாலும் அதற்குறிய தகவல்களை , இந்த தேடியந்திரம் தேடி அலசி சாறுபிழிந்து நமக்கு தருகிறது. தேடப்படும் பொருளுக்கு ஏற்ப தகவல்கள் தோன்றும் விதமும் மாறுபடுவதை பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, பைத்தான் எனும் மலைப்பாம்பு பற்றி தேடும் போது, அதன் இதயம் 19 கிராம் எடை கொண்டது மனித இதயம் 300 கிராம் எடை கொண்டது எனும் சுவாரஸ்யமான தகவல் இடம்பெற்றுள்ளது. மலைப்பாம்பின் ஆயுட்காலம், அதன் அறிவியல் பெயர் போன்ற விவரங்களையும் காணலாம். இதே போல மொழி தொடர்பான தகவல் வரக்கூடிய இடத்தில் குறிப்பிட்ட அந்த சொல் எந்த காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது போன்ற விவரத்தையும் பார்க்கலாம்.

அதோடு எந்த விஷ்யம் பற்றி தேடினாலும் அந்த சொல் பல அர்த்தங்களை கொண்டிருந்தால் அவை பற்றியும் துவக்கத்திலேயே குறிப்பிடப்பட்டு , அதில் மிகவும் பிரபலமானதை முன்வைக்கிறது. உங்கள் தேவைகேற்ப மாற்று பரிந்துரைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். எளிய உதாரணம் பைத்தான் பற்றி தேடும் போது அது மலைப்பாம்பாக தான் இருக்க வேண்டும் என்றில்லை, அது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழியான பைத்தானையும் குறிக்கலாம்.

சாதாரண அல்ஜீபாரா பார்முலாவின் துவங்கி, ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையை பற்றி இதில் தேடிப்பார்த்தால் ,அதற்கு முன் வைக்கப்படும் விரிவான பதில்கள் எளிதாக புரியும் வகையில் அமைந்திருக்கும். தேவைப்படும் இடங்களில் தகவல்களை வரைபடமாகவும் விளக்கி காட்டும்.

சமன்பாடுகளையும் , கணித விவரங்களையும் இது கற்றுத்தரும் விதம் அற்புதம். அல்ஜீப்ராவில் சந்தேகம் என்றாலோ அல்லது வீட்டுப்பாடத்தில் உதவி தேவை என்றாலோ வோல்பிராம் ஆல்பாவை பயன்படுத்திப்பாருங்கள். இது கூகிளை விட மேம்பட்டது.விக்கிபீடியாவை விட நம்பகமானது. இந்த தேடியந்திரத்துக்கு பழகி கொண்டீர்கள் என்றால், ஐ.ஐ.டி அல்லது எம்.ஐ.டியில் மேற்படிப்பு படிக்கும் போது ஆழமான தகவல்களை தேடவும் உதவியாக இருக்கும்.

இந்த தேடியந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று இதன் முகப்பு பக்கத்திலேயே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்து பார்த்தால், ஒவ்வொரு தலைப்பிலும் இந்த தேடியந்திரம் தரக்கூடிய விவரங்களின் ஆழமும் பரப்பும் ,நேர்த்தியும் வியக்க வைக்கும். !.

இணையதள முகவரி: http://www.wolframalpha.com/

மேலும் சில தேடியந்திரங்களில் முக்கியமானதாக ஸ்வீட்சர்ச் (http://www.sweetsearch.com/ ) மற்றும் ரெப்சீக் ( http://www.refseek.com/) ஆகியவற்றை குறிப்பிடலாம். 

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"