தமிழர் திருமணங்களின் பாரம்பரிய பொன்னுருக்கல் நடைமுறை


திரு என்பது தெய்வத்தன்மை எனவும் மணம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு திருமணம் என்றால் மேன்மையுடன் கூடிய தெய்வகடாட்சம் பொருந்திய இணைதல் எனக் கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்து தமிழர்களின் இந்துத் திருமணங் களில் ஆகம மரபுச் சடங்குகளுடன் பல சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுவது வழக்கமாகும். அதுமாத்திரமல்லாமல் இந்துத் திருமணச் சடங்குக்கு முன்னரும் பின்னரும் பல சடங்குகள் நடத்தப்படுவது தமிழர்களின் மரபாகும்.

மூத்தோர்கள் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வளரவேண்டும் என திருமணச்சடங்கன்று மணமக்களை வாழ்த்துவார்கள். தமிழர்தம் பண்பாட்டில் திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிராகும். அந்தத்திருமணத்தின் பாரம்பரிய அடையாளமாகத்திகழும் தாலியை செய்வதற்கு பயன்படுத்தப்படும் தங்க நாணயத்தை உருக்குவதற்குரிய சுபநாளாக பொன்னுருக்கல் கருதப்படுகிறது.

இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தைப் பார்த்து பொது இடங்களில் பெண் பார்ப்பது பெரும்பாலும் நம் நாட்டில் உள்ள வழக்கமாகும். இந்த வழக்கத்தை யாழ்ப்பாணத்து மக்களும் பின்பற்றுகிறார்கள். பின்னர் இரு வீட்டார்களும் திருமணத்தை உறுதிப்படுத்துவதற்காக உறவினர்கள் மற்றும் தாம்பூலம், பழம், பலகாரத் தட்டுகளுடன் மற்றைய வீட்டுக்குச் செல்வர். இதை சம்பந்தக் கலப்பு எனச் சிறப்பாக கூறுவார்கள். இதன் பின்னர் இரு வீட்டாரும் இணைந்து சோதிடரிடம் திருமண நாளைக் கேட்டு நிச்சயிப்பார்கள். அத்துடன் திருமணநாளுக்கு முன்பு ஒரு சுப நாளை பொன்னுருக்கலுக்கும் நிச்சயிப்பார்கள்.

திருமண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்காக நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். அவ்வாறு பொன்னுருக்கலை செய்ய இயலாதவர்கள் ஆசாரி வீட்டில் செய்யலாம். நம் நாட்டில் கிராமப் புறம் தவிர்த்த நகரப்புறப் பகுதிகளில் பெருமளவானோர் ஆசாரி வீடு அல்லது நகைக் கடையில் பொன்னுருக்கலை நடத்துவது தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும் நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள்.

குறித்த சுப நாளில் மணமகன் வீட்டு வாசலில் நிறைகுடம் வைத்து, அருகில் குத்து விளக்குகள், பன்னீர்ச் செம்பு, விபூதி, குங்குமம் மற்றும் சந்தணம் ஆகியவற்றை வைக்க வேண்டும். நிறைகுடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப் பெற்று இருப்பதோடு நிறைகுடத்தை மங்களத்தின் அறிகுறியாகவும் இந்துக்கள் போற்றுகின்றார்கள்.

பொன்னுருக்கும் இடத்தில் நிறைகுடம் வைப்பதற்குத் தேவையான பொருட்களுடன் மஞ்சள் துண்டு, சட்டியொன்றில் தண்ணீர், தேங்காய் உடைக்கும் கத்தி மற்றும் சாம்பிராணியும் தட்டும், கற்பூரத் தட்டும் கற்பூரம் முதலிய பொருட்களும் முக்கியமாகத் தேவைப்படுவனவாகும்.பொன் அல்லது தங்கம் என்பது அரிய வகை உலோகமாகக் கருதப்படுகிறது. இவ்வுலோகம் மென்மையான மஞ்சள் நிறத்தில் இருப்பதோடு விரும்பியவாறு வார்க்கக்கூடிய தன்øயும் கொண்டது. இந்த உலோகம் அத என்ற குறியீட்டினால் குறிக்கப்படுவதுடன், இதன் அணு எண் 79 ஆகும்.

காலம்காலமாக தங்கத்தைக் கொண்டு பலவிதமான ஆபரணங்கள் உருவாக்கப் படுகின்றன. நகைகள் செய்யும்போது 22 காரட் தங்கம் பயன் படுத்தப்படுவதுடன் அதில் 91.7மூ தூய தங்கமும் உள்ளடக்கப் பட்டிருக்கும். தங்கத்தின் பாவனை தொடர்பான ஆரம்ப காலம் கி.மு 4000 ஆம் ஆண்டு என நம்பப்படுகிறது. அந்த வகையில் தமிழர் பாரம்பரியங்களில் ஒன்றான பொன்னுருக்கலிலும் தங்கம் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது.

திருமாங்கல்யம் அல்லது தாலி செய்வதற்கு பயன்படுத்தப்படும் தங்க நாணயத்தை கடவுள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து, அதன் பின்னர் பொன்னுருக்கலுக்கு பயன்படுத்தும் பழக்கம் தமிழர்களிடையே உள்ளது. பொன்னுருக்கும் ஆசாரியர் கும்பம் வைத்து, விளக்கேற்றி தூபதீபம் காட்டி பொன்னை உருக்க ஆரம்பிப்பார். இதற்காக புதுத் திருகணை, புதுச் சட்டி, உமி மற்று சிரட்டைக் கரி ஆகியவற்றைப் பயன்படுத்துவார்.

ஆசாரியார் பொன்னை உருக்கிய பின்னர் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் ஆகியவற்றை வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தை வைத்து, அந்தத் தட்டை மணமகனிடம் கொடுப்பார். மணமகன் அந்தத் தட்டுடன் சாமி அறைக்குச் சென்று வணங்கி, பொன்னுருக்கலுக்கு வந்திருக்கும் சபையோருக்கும் அதை காண்பிக்க வேண்டும். அந்த உருக்கிய தங்கத்தை வைத்து மணமக்களின் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் அவர்களின் வயதா, அனுபவமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது சக்தியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.பொன்னுருக்கிய தங்கத்தைத் தாலி செய்வதற்கு ஒப்படைப்பதோடு, குறித்த நாளில் இரு வீடுகளிலும் கன்னிக் கால் ஊன்ற வேண்டும். இரு வீடுகளிலும் தனித் தனியே ஈசான மூலையில் (வட கிழக்கு மூலையில்) மூர்த்தங்கள் அல்லது கன்னிக் கால் நடுதல் வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு முள் முருங்கையை பயன்படுத்துவார்கள்.முருங்கைத் தடி நேராக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். இதன் காரணமாக நிறைந்த நேரான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தமிழர் பாரம்பரியத்தில் பொன்னுருக்கல் நிகழ்வில் தெரிந்தோ தெரியாமலோ முள்முருங்கைக்கு முக்கியமான இடம் உள்ளது. இதற்கு இரண்டு விதமான காரணங்கள் பெரியோர்களால் முன்வைக்கப்படுகின்றன.

நம் புராணங்களின்படி இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் உள்ளன. எனவே அந்த இந்திரனை திருணத்திற்கு சாட்சியாக கொள்ளும்போது ஆயிரம் கண்களுக்கு ஒப்பான முள் முருங்கையை பயன்படுத்துகிறார்கள் என்பது ஒன்று. இரண்டாவது முள்முருங்கை என்பது காலநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுத்து செழித்து வளரக்கூடிய ஒருவகைத்தாவரம். எனவே திருமண பந்தத்தில் இணையும் கணவன், மனைவி ஆகிய இருவரின் வாழ்வும் முள்முருங்கை போல் செழித்து வளர்ச்சியடையும் என்பது நம்பிக்கை.

முள்முருங்கைத் தடியின் மேல் மாவிலை கட்டி, இடையில் மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு காசு முடித்து கட்ட வேண்டும். அத்தடியை நிலத்தில் நட்டு, அதற்கு தேங்காய் உடைத்து, சாம்பிராணி மற்றும் கற்பூரம் காட்ட வேண்டும். அதன் அடியில் நவதானியம் இட்டு, நீர், பால் ஊற்ற வேண்டும். இந்நிகழ்ச்சியில் மூன்று சுமங்கலிப் பெண்கள் பங்கேற்பார்கள். இக்கன்னிக்கால் நடுதல் இரு வீடுகளிலும் நடைபெறும்.பொன்னுருக்கல் தினத்தன்று வந்தவர்களுக்கு உணவு கொடுத்து உபசரிக்க வேண்டும். இதன் பின்னர் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணிற்கு உணவு கொண்டு சென்று கொடுப்பதும் வழக்கமாகும்.

இந்த நாளில் இருந்து திருமண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பதும் மணமக்கள் வெளியில் செல்லக் கூடாது என்பதும் சம்பிரதாயமாகும்.குறித்த நன்னாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்கு உரிய பலகாரங்களைச் செய்யவும் திருமணப் பந்தல் போடவும் தொடங்குவார்கள். இதற்கு பின்னர் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை இரு வீட்டாரும் எந்தவிதமான தூக்ககரமான நிகழ்ச்சிகளிலும் பங்குபற்ற மாட்டார்கள். இவ்வாறு தமிழர்களின் இந்து திருமணங்களில் பொன்னுருக்கல் இன்றியமையாத ஒரு சுப நிகழ்வாகக் கருதப்படுகின்றது.

யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் மற்றைய பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் இடையில் சில பல ஒற்றுமைகளும் சில பல வேற்றுமைகளும் காணப்படுகின்றன. பல இடர்பாடுகளையும் பல துன்பங்களையும் கடந்து வந்தாலும்கூட, யாழ். குடாநாட்டு மக்கள் தம் மண்ணின் மரபைத் தம்மால் முடிந்தவரை தொடர்ந்து பேணி வருகிறார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"