சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதல்முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்., 4ல் துவங்கி, 23ம் தேதி வரை நடந்தது. இதை, 10.84 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவை,இன்று ஜுன் 4, நண்பகல் 1:30 மணிக்கு, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா வெளியிடுகிறார்.மதிப்பெண் சான்றிதழ் 21ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும்.தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் விண்ணப்பங்களை 5ம் தேதி முதல் 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக, மதிப்பெண்களுடன் கூடிய விவரப் பட்டியல், "சிடி" ஆகியவை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு முன்கூட்டியே அனுப்பப்படும். இந்த முறையால், முடிவு விவரம், "லீக்" ஆனதால், இவற்றை அனுப்புவதை, பிளஸ் 2 தேர்வு முடிவில் தேர்வுத்துறை நிறுத்தியது. மாறாக, அந்தந்த பள்ளிகள், இணையதளம் மூலம் முடிவை பார்க்க அறிவுறுத்தியது.
புதிய முறை:
இதில், பெரும் குளறுபடி நடந்தது. தேர்ச்சி விவரங்களை அறிய முடியாமல், கலெக்டர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் திண்டாடினர். இதை கருத்தில் கொண்டு, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், புதிய ஏற்பாட்டை தேர்வுத்துறை செய்துள்ளது. அதன்படி, மாவட்ட வாரியான தேர்ச்சி விவரங்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேசிய தகவல் மையம் (நிக்) மூலம், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா அறிவித்துள்ளார்.
இயக்குனர் அறிவிப்பு:
தேர்வு முடிவை இணையத்தில் பார்க்கலாம். இணையதள வசதி கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர், தனித்தனியாக வழங்கப்பட்டுள்ள, "யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு" பயன்படுத்தி, பள்ளி மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து, வெளியிடலாம். இந்த வசதி இல்லாதவர்கள், அருகில் உள்ள வேறு பள்ளியில், தங்களுக்கான, "யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டை" பயன்படுத்தி, தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்யலாம்.
மறுகூட்டல்:
அனைத்துப் பாடங்களுக்கும் மதிப்பெண் மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர், 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மண்டல தேர்வுத் துறை துணை இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.கட்டணம் எவ்வளவு?
பழைய மற்றும் புதிய பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் கீழ், மொழிப் பாடங்களுக்கு 305 ரூபாய்; இதரப் பாடங்களுக்கு 205 ரூபாய். பழைய ஓ.எஸ்.எல்.சி., திட்டத்திற்கும், இதே கட்டணம் பொருந்தும். மெட்ரிக் பாடத் திட்டத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் 305 ரூபாய். ஆங்கிலோ இந்திய பாடத்திட்டத்திற்கு, மொழிப்பாடத்திற்கு 205 ரூபாயும், இதரப் பாடங்களுக்கு 305 ரூபாயும் செலுத்த வேண்டும். இவ்வாறு வசுந்தரா அறிவித்தார்.
மதிப்பெண் பட்டியல்: பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, 21ம் தேதி, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம், மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். தனித் தேர்வர், தாங்கள் தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
கீழே உள்ள இணையத் தளங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை காணலாம்.
இணையதள முகவரி # 1
இணையதள முகவரி # 2
இணையதள முகவரி # 3
இணையதள முகவரி # 4
இணையதள முகவரி # 5