பிகினி உடை எப்போது பிறந்தது?


பிகினியை எல்லோருக்கும் தெரியும். பார்த்திருப்பீர்கள், ரசித்திருப்பீர்கள். ஆனால் அந்த உடை எப்போது பிறந்தது என்று தெரியுமா. 1946ம் ஆண்டு ஜூலை 5ம் தேதிதான் பிகினி பிறந்த தினமாகும்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உடை வடிவமைப்பாளர் லூயிஸ் ரியார்ட்தான் முதன் முதலில் பிகினி உடையை வடிவமைத்து இந்த நாளில் வெளியிட்டார். பாரீஸில் உள்ள பிரபலமான நீச்சல் குளமான பிஸின் மாலிட்டர் என்ற இடத்தில்தான் இந்த பிகினி உடையை முதன் முதலில் அவர் நீச்சல் குளத்தில் இறக்கினார்.

அப்போது பிரபலமாக இருந்த மிச்சலின் பெர்னார்டினி என்ற மாடல் அழகிதான் உலகின் முதல் பிகினி உடையை அணிந்து பெருமை பொங்க காட்சி அளித்தார். சரி, பிகினி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா…?

நீச்சல் உடையை முதன் முதலில் லூயில் ரியார்ட் அறிமுகப்படுத்திய வாரத்தின் தொடக்கத்தில் பசிபிக் கடலில் உள்ள பிகினி அடால் என்ற இடத்தில் அமெரி்ககா அணு ஆயுத சோதனையை நடத்தியிருந்தது. அந்த சோதனையை நினைவு கூறும் விதமாக தனது நீச்சல் உடைக்கு அவர் பிகினி என்று பெயர் வைத்து விட்டார்.

முதலில் தனது நீச்சல் உடையை அணிந்து போஸ் தருவதற்கு உரிய மாடல் அழகி கிடைக்காமல் கஷ்டப்பட்டாராம் ரியார்ட். காரணம், யாருமே அப்போது அந்த டூ பீஸ் உடையை போட்டுக் கொள்ள தயங்கினராம். இதையடுத்தே மிச்சலினை அணுகினார். அவரும் ஒத்துக் கொள்ளவே முதல் பிகினிக்கு ஏற்ற உடல் கிடைத்த சந்தோஷத்தை அடைந்தார் ரியார்ட்.

கிட்டத்தட்ட நிர்வாணம் என்று சொல்லக்கூடிய வகையில் மிச்சலின் அணிந்த பிகினி உடை இருந்தது. இருந்தாலும் அதை சற்றும் கூச்சமில்லாமல் போட்டுக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் முன்பு தோன்றினார் மிச்சலின்.

முதன் முதலில் அறிமுகமான அந்த நீச்சல் உடை எடுத்த எடுப்பிலேயே ஹிட் ஆகி விட்டது. ஆண்களும், பெண்களும் அந்த உடைக்கு பெருத்த ஆதரவு கொடுத்தனர். இந்த உடையைப் பாராட்டி கிட்டத்தட்ட 50,000 கடிதங்கள் வந்ததாம் ரியார்டுக்கு.

இருப்பினும் ஐரோப்பிய பெண்கள் அதற்கு முன்பே பிகினி போன்ற உடைகளை அணிந்து வந்தவர்கள்தான். 1930களில் குளிக்கப் போகும்போது மேலும், கீழும் மறைக்கும் வகையிலான துணிகளை அணிந்துதான் ஐரோப்பிய பெண்கள் குளிப்பார்களாம். அதேசமயம், அந்த உடை கவர்ச்சிகரமானதாக இல்லை. தொப்புள் தெரியாத வகையில், அந்த உடை இருக்குமாம். அமெரிக்காவிலும் கூட இரண்டாம் உலகப் போரின்போது நீச்சல் உடை போன்ற டூபீஸ் உடைகளை அமெரிக்கப் பெண்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

முதல் பிகினி உடையை ரியார்ட் அறிமுகப்படுத்திய பின்னர் ஐரோப்பிய நாடுகளில் அந்த உடையைப் போட்டுக் கொண்டு கடற்கரைகளில் குளிப்பது அதிகரித்தது.இருப்பினும் அமெரிக்காவில் 1960 வரை பொது இடங்களில் இதுபோன்ற டூ பீஸ் உடைகளைப் போட கடும்எதிர்ப்பு இருந்தது. அதன் பிறகுதான் படிப்படியாக நிலைமை மாறி அமெரிக்கர்களும் பிகினிக்குள் புக ஆரம்பித்தனர்.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"