325 லிட்டர் தாய்ப் பாலை தானம் தந்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!

அமெரிக்காவில் உள்ள வடக்கு டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் 86 கேலன்கள் ( 325.54 லிட்டர்) தாய்ப் பாலை தானமாக கொடுத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை இடம் பெறச் செய்துள்ளார்.

அலிசியா ரிச்மேன் என்ற 28 வயதுடைய அந்தப் பெண் க்ரன்பரி நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2012ம் ஆண்டு மார்ச் வரை கிட்டத்தட்ட 86 கேலன் தாய்ப்பாலை வடக்கு டெக்சாஸில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு தானமாக கொடுத்திருக்கிறாராம்.

அலிசியாவிற்கு 19 மாதத்தில் ஆண்குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு தேவையான பால் போக மீதமுள்ள பாலைத்தான் பம்ப் செய்து தானமாகக் கொடுத்துள்ளார். இதன் மூலம் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், தாய்ப் பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் அது பேருதவியாக இருந்துள்ளது. இதற்காகவே அவருடைய பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இது கடவுள் தனக்கு அளித்த வரம் என்று கூறியுள்ள அலிசியா, தாய்ப்பால் தனக்கு அதிகமாக சுரப்பதனால்தான் அது கிடைக்காத குழந்தைகளுக்கு தானமாக தரமுடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"