எச்சரிக்கை - தடம் மாறும் குழந்தைகள்


முன்னர் வாலிப வயதில் இலைமறை காய்மறைவாக இருந்த அத்தனை விஷயங்களும் அம்பலத்துக்கு வந்துவிட்டது இப்போது. தொலைக்காட்சி, இணையம், செல்போன் எல்லாவற்றிலுமே விரல் நுனியில் உலகம் என்று எல்லாவற்றையும் பார்க்கும் வசதிகள் பெருகிவிட்டன.அதனால் பயமாக இருக்கிறது. சரியான நேரத்தில் முறையாக வழிகாட்டி வளர்க்கப்படும் பிள்ளைகளே எதிர்காலத்தில் சரியான பாதையில் வளர்ந்து நல்லவிதமாக வாழ்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.

1. ஐந்து வயது வரை இளவரசனாக, அல்லது இளவரசியாக வளர்க்க வேண்டும்
2. ஐந்து வயதிலிருந்து 12 வயது வரை அடிமையாக வளர்க்க வேண்டும்
3. 13 வயது முதல் 19 வயது வரை ராஜ குமாரனாக ,அல்லது ராஜ குமாரியாக வளர்க்க வேண்டும்.
4.20 வயதிலிருந்து தோழனாக, தோழியாக பழகவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

ஆனால் அப்போது குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தார்கள். இப்போது ஐந்து வயதுக் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற நம்மால் முடியவில்லை. ஆமாம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, பொது அறிவு வளர்ச்சி போன்றவை முற்காலத்தைவிட அதிகரித்திருக்கிறது. இளம் வயதிலேயே அதிகம் யோசிக்கிறார்கள், அதிகம் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களுக்கு இணையாக தெரிந்துகொண்டால்தான் அவர்களைக் கையாள முடியும்.

ஆகவே பழைய காலம் போல் வளர்க்க முடியாது என்னும் நடைமுறை தெரிகிறது இருந்தாலும் இன்னமும் அதிக கவனம் எடுத்துக்கொன்டு அவர்களின் கவனம் வேண்டாத தீய வழக்கங்களை நாடாத அளவுக்கு , அவர்களுக்கு புரியவைத்து, அவர்களுடன் கலந்து பேசி , அவர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இணையத்தில் மேய அவர்களை அனுமதிக்காமல் இருந்தாலோ, செல்போன் போன்ற நவீன கருவிகளை உபயோகிக்க அனுமதி அளிக்காமல் இருந்தாலோ, திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காமல் இருந்தாலோ தவிர்த்துவிடலாம் என்னும் குறுகிய மனோபாவத்தை விட்டுவிட்டு, எல்லாவற்றுக்கும் அவர்களை அனுமதித்து, அப்படி அனுமதிக்கும்போதே அவற்றிலுள்ள தீயவைகளைச் சுட்டிக் காட்டி அவற்றினால் வரும் கெடுதல்களை எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்கி, இணையம் போன்ற நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் எப்படி நற்பலன்களைப் பெறலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முன்னேற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

இந்த உலகத்தில் தீமைகள் நிறைந்த உலகத்தில்தானே நம் பிள்ளைகள் வாழவேண்டும்? அப்படியானால் இந்த உலகத்தில் வாழ முறையான ,சரியான வழியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"