பாலியல் தொழிலுக்கான மொத்த அடையாளம்


மும்பையின் அடையாளங்களில் ஒன்று காமாத்தி புரா. பல பெண்களின் கண்ணீர் கதைகளை கொண்ட அந்த `கண்ணீர் தேசத்திற்குள்’”சும்மா வேணா போய் ரவுண்ட் அடிச்சிட்டு வாங்க.. ஆனா படம் எடுக்க முடியாது. அப்படி எடுத்து மாட்டிக்கிட்டீங்கன்னா கேமராவும் உங்களுக்கு சொந்தமில்ல.. நீங்களும் உங்களுக்கே சொந்தமில்ல” என தகவல் சொன்னவர்கள் கிளம்புவதற்கு முன் ‘சிவப்பு விளக்கு’ எச்சரிக்கை செய்திருந்ததால் கொஞ்சம் `பேஸ்மெண்ட்’ வீக்’கானாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கிளம்பினோம்.

மும்பையின் மையப்பகுதியில் இருக்கும் `மும்பை சென்ட்ரல்’ மற்றும் `க்ராண்ட் ரோடு’ என்ற ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கிறது காமாட்டிபுரா.

அது ஒரு சின்ன தெரு தான். ஆனால் அதை சுற்றி இருக்கும் பல தெருக்களில் குடிசைத் தொழில் போல் விபச்சாரம் நடைபெறுகிறது என்றாலும் காமாட்டி புரா மட்டுமே மும்பை பாலியல் தொழிலுக்கான மொத்த அடையாளமாக பெயர் பெற்றுவிட்டது.

வரிசையாக கவர்ச்சி உடையில், அடிக்கும் கலரில் உதட்டுச்சாயத்தை பூசி கொண்டு நின்று கொண்டிருக்கும் பெண்கள் கண்களால் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சிலரை கையைப்பிடித்து இழுத்து கூப்பிட்டு பேரம் பேசினார்கள். நமக்கும் அழைப்பு வந்தது.. நிற்காமல் நகர்ந்து கொண்டிருந்தோம். நின்று பேரம் பேசினீர்கள் என்றால் உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து விடுவார்கள்.

உள்ளே போனப்பிறகு “பொண்ணு பிடிக்கல” என்று முரண்டு பிடிப்பவர்களை நாலு போடு போட்டு பணத்தை பறித்துக்கொண்டு விரட்டி விடுகிற கதையும் உண்டு. ப்ரோக்கர்கள் ப்ளஸ் திருடர்கள் இருபக்கமும் நின்று கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

திடிரென நம்மை நெருங்கிய ஒரு புரோக்கர் நம் முகத்தை வைத்து தமிழ்நாடு என்று தெரிந்து கொண்டு பேச ஆரம்பித்தார். “சார் எங்கிட்ட எல்லா ஸ்டேட் பொண்ணுங்களும் இருக்கு சார்.

350 ரூபா தான் சார். ஏஸி இருக்கு. ஒரு ப்ராப்ளமும் இல்ல. நீங்க வந்து பாருங்க. பிடிக்கலைன்னா வேணாம்.. கம்பல் இல்ல சார்..” என்று இந்தி கலந்த தமிழில் நச்சரிக்க ஆரம்பித்தார்.

” அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்லணே..” என்றதும் ”சரி இது என்கார்டு.. எப்ப வேணும்னாலும் வாங்க” என்று விசிட்டிங்க் கார்ட்டை கையில் தினித்தவரிடம் அவரைப்பற்றி பேச்சுக்கொடுத்தோம்..

”என் பெயர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தஞ்சாவூர் பக்கம். ரொம்ப வருசத்துக்கு முன்னமே பம்பாய் வந்து செட்டில் ஆகிட்டதால ஊர் பக்கம்லாம் போய் ரொம்ப நாளாச்சு சார்.

லேடீஸ் டான்ஸ் பார்ல வேலை பார்த்தேன். நல்லா காசு கிடைக்கும். ஆனா இப்போ அத மூடிட்டதால இந்த வேலைக்கு வந்தேன். கஸ்டம்ர்கள பிடிச்சு கொடுத்தா ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா தேரும்.

இப்படி புரோக்கர் வேலை பார்க்கோமேனு சில நேரம் வருத்தமாத்தான் இருக்கும். ஆனா என்ன பண்ண.. அம்மா வீட்டு வேலைக்கு போகுது. அப்பா வாட்ச்மேன். அண்ணன் அண்ணி எல்லாம் இருக்காங்க.

நான் இந்த வேலை பார்க்குறது வீட்ல யாருக்கும் தெரியாது சார். ஹோட்டல்ல வேல பார்க்கேனு சொல்லிருக்கேன். என்னைக்காவது மாட்டிக்குவேனோனு பயமா இருக்கு.

ஆனா லைஃப்ப ஓட்டணுமே.. இதுலயே பழகிட்டதால வேறு வேலைக்கு போக தோணல சார்” என்று தன் வரலாறு சொல்லி முடித்துவிட்டு, ’’வாங்க சார்.. பொண்ணுங்கள பாருங்க..” என்று மீண்டும் தனது பிஸினசுக்குள் இறங்கியவரிடமிருந்து சிரித்து விட்டு நகர்ந்தோம்.

அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றால் ‘காங்கிரஸ்(!) ஹவுஸ்’ என்ற தெரு உள்ளது. இங்கிருக்கும் விபச்சார விடுதிகள் கொஞ்சம் காஸ்ட்லியானவை என்பதால் பெண்கள் வெளியே நின்று அழைப்பதில்லை.

மாறாக புரோக்கர்கள் மட்டுமே வரிசையாக நிற்கிறார்கள். டாக்ஸிக்குள் தலையை விட்டு நம்மை அழைக்கிறார்கள். இரண்டாயிரம் ரூபாயில் ஆரம்பித்து பத்தாயிரம் முப்பதாயிரம் என பெண்களுக்கு ஏற்ப ரேட் ஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

சிலவருடங்களுக்கு முன்பு மகாராஷ்ட்ரா அரசு ’லேடீஸ் டான்ஸ் பார்’களை மூடியதால் அந்த தொழிலில் இருந்த பெண்கள் பலர் இப்போது வேறு வழியின்றி விபச்சாரத் தொழிலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் இங்கு தான் தொழிலில் ஈடு பட்டிருக்கிறார்கள்.

அதேபோல் பெரும்பாலும் பாலியல் தொழிலுக்கு கடத்தி வரப்படும் பெண்கள் இந்த விடுதிகளில் தான் விற்கப்படுகிறார்கள் தமிழ் பெண்கள் உட்பட. இங்கு சக்கையாக பிழிந்த பிறகு லோக்கல் விடுதிகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இங்கிருக்கும் விடுதிகள் அமைதியாகவும் மர்மமாகவும் அச்சமூட்டும் வகையில் இருக்கின்றன. சமீபத்தில் கப்பல் வேலைக்காக தமிழகத்திலிருந்து மும்பை வந்த தனது நண்பர்கள் சிலர் சபலப்பட்டு இந்த விடுதிக்குள் நுழைந்ததாகவும், அவர்களை சிலர் அடித்து பணத்தை பறித்துக்கொண்டு விரட்டிய சம்பவம் நடந்ததாக சொல்கிறார் மும்பை தமிழரான தினகரன்.

அங்கிருந்து சில நிமிட தூரத்தில் `பீலா ஹவுஸ்’(மஞ்சள் வீடு) என்று அழைக்கப்படும் தெருவுக்குள் நுழைந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.

இளம்பெண்களோடு சிறுமிகளும் நின்று கொண்டு அழைப்பு விடுக்கிறார்கள். நமக்கு நெஞ்சம் பதைபதைக்கிறது. இளைஞர்கள், பெருசுகள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரு பக்கம் பேரம் நடந்து கொண்டிருக்கிறது.

பெருவாரியாக இங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பெங்காலிகளாகவும், நேபாள், உ.பி, பிஹார், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

குழந்தை குட்டி என்று குடும்பத்தோடு அங்கேயே வாழ்பவர்களும் உண்டு. தொழிலுக்கு தொந்தரவில்லாமல் இருக்க அங்கு பிறக்கும் குழந்தைகள் படிப்பதற்காக இரவு பள்ளிகளை என்.ஜி.ஓ.க்கள் நடத்துகின்றன..

மனதளவில் இந்த தொழிலை சகித்துக்கொள்ள கற்றுக்கொண்டவர்களை மட்டுமே வெளியில் நின்று வாடிக்கையாளர்களை அழைக்கும் பணிக்கு அனுப்புகிறார்கள். உள்ளறைக்குள் அழைத்து வரப்படும் வாடிக்கையாளர்களுக்காக பல பெண்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிக்கினால் பென்டெடுத்துவிடுவார்கள் என்ற சூழலில் மறைவாய் நின்று சில படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். பயந்தது போலவே புரோக்கர் ஒருவர் நம்மை பார்த்துவிட்டு ” போட்டோ கீச்ராரே.. பக்கடோ..” (படம் புடிக்கிறான்.. புடிடா..) என்று சகாக்களுக்கு சவுண்ட் விட்டுக்கொண்டு நம்மை விரட்ட அங்கிருந்து ஓடி தப்பித்தோம்.

பெருவாரியாக இங்கு வரும் வாடிக்கையாளர்கள் உ.பி. பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து மும்பையில் கட்டிட வேலைகள் உள்ளிட்ட கூலி வேலைகளுக்காக அழைத்து வரப்படும் இளைஞர்களாகவே இருக்கிறார்கள்.

அவர்கள் குடும்பத்தை விட்டு மும்பையில் தனிமையில் இருப்பதுவும், 50 ரூபாயில் இருந்து பெண்கள் கிடைப்பார்கள், போலீஸ் தொந்தரவு இருக்காது போன்ற காரணங்களால் அவர்கள் இந்த விடுதிகளுக்கு வருகிறார்கள்.

அந்த தெருவில் இரண்டு தியேட்டர்கள் இருக்கின்றன. வெளியே போஸ்டர்கள் ஏதாவது ஒட்டப்பட்டிருக்கும்.. உள்ளே பெருவாரியாக ’பிட்டு’ படங்கள் ஓடும். முதலில் திரையரங்குக்குள் நுழைந்து அதை பார்த்த போதையோடு பாலியல் தொழிலாளிகளிடம் செல்கிறார்கள்.

”மும்பை பெண்களை காமுகர்களிடமிருந்து காப்பாற்றும் `எல்லை தெய்வங்களாக’ நிற்கிறார்கள் காமாட்டிபுராவில் இருக்கும் பெண்கள்.

அவர்கள் இல்லையென்றால் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பலமடங்காகி விடும்” என்று சொல்கிறார்கள்.அதில் உண்மையுண்டு. என்.ஜி.ஓ.க்களின் தீவிரமான எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் ’காண்டம்’ போட்டால் மட்டும் தான் செக்ஸ் என்பதில் அந்த பெண்கள் உறுதியாக இருந்தாலும் சிலர் எய்ட்ஸில் சிக்கி இறந்து போகிறார்கள். `

தாங்கள் அழகாக நின்ற அதே தெருவின் ஓரத்தில் ஒருநாள் அநாதைப் பிணமாக செத்துக்கிடந்த பல ’தெய்வங்களின்’ கண்ணீர் கதைகளை சுமந்து நிற்கின்றன ஒவ்வொரு விடுதிகளும்..

1795 காலகட்டத்தில் கட்டுமான பணிகளுக்காக ஆந்திராவிலிருந்து அழைத்து வரப்பட்ட கூலித்தொழிலாளிகள் வாழ்ந்த பகுதி காமாத்தி புரா. இந்தியில் `காம்வாலி’ என்றால் வேலைக்காரி என்று அர்த்தம்.

அந்த அடிப்படையிலேயே அந்த பகுதிக்கு காமாத்திபுரா என்ற பெயர் புழக்கத்திற்கு வந்தது. பிற்பாடு 1880 பிரிட்டிஷ் ஆட்சியில் அந்த பகுதி ராணுவ பாதுகாப்பு வளையமாக்கப்பட்டிருந்தது.

ராணுவ வீரர்களின் செக்ஸ் வெறியை தீர்த்துக்கொள்ள அங்கிருந்த பெண்கள் தள்ளப்பட்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து அவர்கள் நடையைக் கட்டிய பிறகு அவர்களின் இடத்தை இந்திய பணக்காரர்கள் பிடித்துக்கொண்டதால் வேறு வழியின்றி அந்த பெண்கள் அதே தொழிலை தொடர்ந்தார்கள்.. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தெருவில் பாதிவரை விபச்சாரவிடுதிகளும், மீதி குடும்பங்கள் வாழும் குடியிருப்புகளும் என விநோதமாக இருக்கிறது காமாத்தி புரா.

பெருவாரியாக இங்கு குஜராத்தி, மார்வாடிகள் இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் அந்த விடுதிகளின் வழியாகவே பள்ளிக்கு செல்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

தாங்கள் எந்த பகுதியிலிருந்து வருகிறோம் என்பதை சொல்ல சங்கடப்படும் மனநிலை அந்த குழந்தைகளிடம் இருக்க கூடும். ஆனால் மும்பையின் வாழ்விட நெருக்கடி எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வைக்கிறது.

தற்போது காமாத்தி புராவின் நில மதிப்பு ஒரு சதுர அடிக்கு தோராயமாக 30 ஆயிரம் என்கிறார்கள். நிலங்களின் மதிப்பு கூடுவதால், இவ்வளவு நாட்கள் அதை வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்த நில உரிமையாளர்கள் இப்போது விடுதிகளை மூடிவிட்டு காம்ப்ளக்ஸ், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

பல கிரிமினல்களின் புகழிடமாக திகழ்வதால் காமாத்தி புராவை மூடும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு செயல்படுத்த கூடும் என்ற கருத்தும் இருக்கிறது, அப்படியே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டினாலும் அப்போதும் விபச்சாரம் தான் நடக்கும்..

என்ன கொஞ்ச காஸ்ட்லியான விபச்சாரவிடுதிகளாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் பல வருடங்களாக அங்கேயே தங்கள் வாழ்வை தொலைத்த பெண்கள் காமாத்தி புராவை மூடினால் எங்கு செல்வது.. என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

அந்த பெண்களின் மறுவாழ்வுக்காக எதையும் செய்யாமல் அரசு காமாத்தி புராவை முடினால் அது பிரயோஜனமற்றதாகவே இருக்கும்.

மும்பையிலிருந்து பாலா


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"