கணவரின் "பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஆபாச கடிதங்கள் அனுப்பிய மனைவி


டில்லி, பாலம் விகார் பகுதியில் வசிப்பவர், ராணுவ பிரிகேடியர், கே.ஜி.குத்திலாவின் மகன், ரோகித். டில்லி, நிதி பாக் என்ற இடத்தில் வசிக்கும், சப்னா அரோராவுக்கும், ரோகித்துக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.தம்பதியின் மண வாழ்க்கை இன்பமாக இருந்தபோது, தன் ரகசியங்கள், விருப்பங்கள் என, அனைத்தையும், மனைவி சப்னாவிடம், ரோகித் சொல்லியிருந்தார். அப்போது, தன், "இ-மெயில்' பாஸ்வேர்டையும், தெரிவித்திருந்தார்.இதற்கிடையே, கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், கடந்த ஓராண்டாக, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

விவாகரத்து இன்னும் கிடைக்காத நிலையில், புதிதாக திருமணம் செய்து கொள்ள விரும்பிய ரோகித், அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார்.இதை அறிந்த சப்னா, ரோகித்தின் திருமணத்தை தடுக்கும் வகையில், "தில்லாலங்கடி' வேலைகளில் ஈடுபட்டார். ரோகித்தின் இ-மெயில் பாஸ்வேர்டை அறிந்திருந்த சப்னா, அதை பயன்படுத்தி, ஆபாச இ-மெயில்களை அனுப்பினார். குறிப்பாக, ரோகித், யாரை திருமணம் செய்ய இருந்தாரோ, அந்தப் பெண்ணுக்கு, ஆபாச மெயில் அனுப்பி, அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.இதனால் பிரச்னை ஏற்படவும், இ-மெயில் குறித்து, ரோகித் விசாரிக்க துவங்கினார். தன், இ-மெயில் முகவரியில் இருந்து தான், ஆபாச தகவல்கள் அனுப்பப்பட்டன என்பதை அறிந்ததும், அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பாத நிலையில், ஆபாச இ-மெயில்களை யார் அனுப்பியிருக்க கூடும் என, யோசித்தார்.

அந்த செயலை செய்தது, தன் முன்னாள் மனைவி சப்னா என் பதை, பின் அறிந்ததும், அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். ரோகித் சார்பில், அவரின் தந்தை குத்திலா, பாலம் விகார், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்; சப்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவத்திற்குப் பின், "இ-மெயில் பாஸ்வேர்டை, இனிமேல் வரவிருக்கும் மனைவி உட்பட யாருக்கும் தெரிவிக்கக் கூடாது; அப்படியே தெரிந்து விட்டாலும், அடுத்த நொடியில், அந்த பாஸ்வேர்டை மாற்றி விட வேண்டும்' என்ற, உறுதியையும், ரோகித் எடுத்தார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"