பல பெண்களை மணந்து உல்லாச வாழ்க்கை நடத்திய ரெயில்வே அதிகாரி கைது !


சென்னையில் நர்சு, துணை நடிகை உள்பட பல பெண்களை மணந்து உல்லாச வாழ்க்கை நடத்தியதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனி பகுதியில் வசிப்பவர் ஸ்ரீதேவி (வயது 35). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்க்கிறார். இவருக்கு 7 வயதிலும், 5 வயதிலும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் பெயர் சிவமணி (44). இவர் ரெயில்வே அதிகாரியாக உள்ளார்.

கடந்த 2 வருடங்களாக சிவமணி திடீரென்று காணாமல் போய் விட்டார். கணவரை நர்சு ஸ்ரீதேவி பல இடங்களில் தேடிப்பார்த்தார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரை காணவில்லை என்றும், கண்டுபிடித்து ஒப்படைக்கும்படியும் ஸ்ரீதேவி அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம் மேற்பார்வையில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் நித்தியகுமாரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, அதிகாரி சிவமணியை தேடி வந்தனர்.

இதற்கிடையில் அதிகாரி சிவமணி மேலும் சில பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தெரியவந்தது.

சரஸ்வதி (30) என்ற பட்டதாரி பெண்ணை சிவமணி 2-வது திருமணம் செய்திருந்தார். 2 குழந்தைகளும் அவருக்கு இருந்தது. சரஸ்வதியை 2-வது திருமணம் செய்தது, ஸ்ரீதேவிக்கு தெரியாது. சரஸ்வதியை கண்டுபிடித்து போலீசார் விசாரித்தார்கள். சரஸ்வதி, சிவமணியை கணவர் என்று போட்டு ரேஷன் கார்டு வைத்துள்ளார். ஸ்ரீதேவியிடமும் அது போல் தனி ரேஷன் கார்டு உள்ளது.

சரஸ்வதி வீட்டில் வைத்து சிவமணியை மடக்கிப்பிடிக்க முயற்சித்தனர். ஆனால் சில மாதங்களாக சரஸ்வதி வீட்டுக்கு வருவதையும் சிவமணி தவிர்த்தார். செல்போனில் மட்டும் பேசினார். செல்போன் பேச்சை கண்காணித்து, சிவமணி சின்மயா நகரில் ஒரு வீட்டில் வசிப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சின்மயா நகரில் உள்ள குறிப்பிட்ட வீட்டுக்கு போய் போலீசார் கண்காணித்தபோது, அது ஷர்மிளா என்ற துணை நடிகையின் வீடு என்று தெரிய வந்தது. ஷர்மிளா கணவரை பிரிந்து வாழ்வதாகவும், அவருக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடித்தனர். சிவமணி, ஷர்மிளாவையும் பிடித்து விட்டார். அவரோடு, திருமணம் செய்து கொள்ளாமலே, சிவமணி வாழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ராஜபாண்டி என்ற படம் உள்பட சில படங்களிலும், சில டி.வி. தொடர்களிலும் ஷர்மிளா நடித்துள்ளார். தற்போது நடிக்கும் படம் ஒன்றில் சூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக, ஷர்மிளா திருச்சி சென்றுள்ளார். அவருடன் சிவமணியும் சென்றிருந்தார்.

நேற்று சென்னை திரும்பிய சிவமணியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். செக்ஸ் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, இது போல பல பெண்களுடன் வாழ்ந்து சுகம் அனுபவித்ததாக சிவமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் நேற்று இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

போலீஸ் நிலையத்தில் ஸ்ரீதேவி, சரஸ்வதி ஆகிய 2 மனைவிகளும், சிவமணியை கடுமையாக திட்டி தீர்த்தனர். நடிகை ஷர்மிளா சூட்டிங் முடிந்து சென்னை திரும்பியதும் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"