ஆபாசப் பட நடிகையைக் கொன்று உடலை நாய்க்குப் போட்ட பிரேசில் கால்பந்து வீரர்!


பிரேசில் நாட்டுக் கால்பந்து வீரர் ப்ரூனோ செளசா, அவரது மனைவி உள்ளிட்ட 6 பேரை பிரேசில் நாட்டு போலீஸார் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். ப்ரூனோ தனது காதலியான ஆபாசப் பட நடிகை எலீசா சமுடியோவைக் கொடூரமாகக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கி நாய்க்குப் போட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் பிளமிங்கோ கால்பந்து கிளப் அணியில் கோல்கீப்பராக இருப்பவர் ப்ரூனோ. வளரும் வீரரான இவர் அந்த நாட்டில் பிரபலமானவர். சமீபத்தில்தான் இவர் இத்தாலியின் ஏசி மிலன் அணிக்கு பெரும் தொகைக்கு ஒப்பந்தமாகியிருந்தார். இந்தநிலையில்தான் காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் சிக்கிக் கைதாகியுள்ளார்.

25 வயதான ப்ரூனோவின் காதலிதான் எலீசா சமுடியோ. இவர் ஆபாசப் பட நடிகையாவார். பல ஆண்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டவர். எலீசாவுக்கும், ப்ரூனோவுக்கும் இடையே கடந்த ஆண்டு நட்பு ஏற்பட்டது. ஒரு பார்ட்டியில் வைத்து எலீசாவை சந்தித்தார் ப்ரூனோ. அந்த முதல் சந்திப்பிலேயே இருவரும் உறவு வரைக்கும் போய் விட்டனர். அதில் கர்ப்பமடைந்தார் எலீசா.

ஆனால் அந்தக் குழந்தையை ப்ரூனோ விரும்பவில்லை. இதனால் அபார்ஷனுக்கு வற்புறுத்தி வந்தார். ஆனால் அதற்கு எலீசா சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் ப்ருனோ தொடர்ந்து தன்னை தொல்லைப்படுத்தி வருவதாக கடந்த அக்டோபர் மாதம் போலீஸில் புகார் கொடுத்தார் எலீசா. தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், கருக் கலைப்பு மருந்துகளை வலுக்கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றியதாகவும் அவர் புகாரில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு எலீசாவுக்குக் குழந்தை பிறந்தது. மேலும் இந்தக் குழந்தைக்குத் தந்தை ப்ரூனோதான் என்பதை நிரூபிக்கும் முயற்சிகளிலும் எலீசா தீவிரம் காட்டினார். இதனால் கோபமடைந்த ப்ரூனோ, முன்னாள் உளவுப் போலீஸ் அதிகாரியான லூயிஸ் அபரெசிடோ சான்டோஸ் என்பவரை அணுகி, எலீசாவைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ப்ரூனோ.

இதையடுத்து ரியோடி ஜெனீரோ நகரிலிருந்து எலீசாவைக் கடத்தியுள்ளார் லூயிஸ். அவரை பெலோ ஹாரிசான்டே என்ற நகருக்குக் கொண்டு சென்று அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார் லூயிஸ்.

அவரது சத்தம் வெளியில் கேட்கக் கூடாது என்பதற்காக மியூசிக் சிஸ்டத்தை எந்த நேரமும் சத்தத்துடன் ஒலிக்க வைத்துள்ளார். பல்வேறு வகையில் எலீசாவைக் கொடுமைப்படுத்தியுள்ளார் லூயிஸ். அதன் பின்னர் எலீசாவைக் கொலை செய்தார் லூயிஸ். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.


அசில் சில உடல் பாகங்களை தனது வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குப் போட்டுள்ளார். மீத உடல் பாகங்களை வீட்டில் புதைத்து அதை கான்க்ரீட் வைத்து பூசி விட்டார்.

இந்தக் குற்றச் செயலைத் திட்டமிட்டவர் ப்ரூனோ என்று போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கொடூரக் கொலைக்கு ப்ரூனோவின் மனைவி டேயனும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து ப்ரூனோ, மனைவி டேயன், லூயிஸ் உள்பட மொத்தம் 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

எலீசா கொலை செய்யப்பட்டபோது அங்கு ப்ரூனோவும் இருந்துள்ளார். தனது காதலி துடிக்கத் துடிக்கச் சாவதை அவர் பார்த்து ரசித்துள்ளார். எலீசாவின் கழுத்தை ப்ரூனோதான் நெரித்துக் கொன்றார் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். அவருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த பிரேசில் கால்பந்துக் கோப்பைப் போட்டியின்போது பிளமிங்கோ அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் ப்ரூனோ. மேலும் அடுத்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது பிரேசில் தேசிய அணியில் இடம் பெறும் வாய்ப்பும் அவருக்கு இருந்தது. தற்போது அத்தனையும் பாழாகி விட்டது.

பிரேசில் நாட்டின் முன்னணி வீரராக உருவெடுத்து வந்த ப்ரூனோ இப்படிக் கொடூரமான கொலை வழக்கில் சிக்கிக் கைதாகியுள்ளது அந்த நாட்டு கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"