பொங்கலின் பாரம்பரிய விளையாட்டுக்கள்!!!


பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பான நிகழ்வுகள் நடைபெறும். அதிலும் கிராமப்பகுதிகளில் தான், பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடப்படும். அதிலும் அந்த விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரின் வீரத்தையும் மதிப்பிடும் வகையில் இருக்கும். எனவே பெரும்பாலானோர் பொங்கல் என்று வந்துவிட்டால், கிராமப்பகுதிகளுக்கு செல்ல ஆசைப்படுவர்.

இளவட்டக்கல்
அக்காலத்தில் இந்த விளையாட்டானது விளையாடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த விளையாட்டு மறைந்துவிட்டது. பொதுவாக இந்த இளவட்டக்கல் விளையாட்டானது, ஒவ்வொருவரின் வலிமையை வற்புறுத்தும் வகையில் இருக்கும். இதில் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் விளையாடுவார்கள். அதுமட்டுமின்றி, சிலர் இந்த விளையாட்டில் ஒரு குறிப்பிட்டக் கல்லை தூக்கும் பலசாலிக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் வாக்கு கொடுப்பர். ஏனெனில் அக்காலத்தில் வலிமையானவருக்கு தான் பெற்றோர்கள் திருமணம் முடித்து வைப்பார்கள். ஆனால் தற்போது இந்த விளையாட்டு மறைந்துவிட்டது என்பதைவிட, பலர் மறந்துவிட்டார்கள் என்று சொல்லலாம்.

கபடி
இந்த விளையாட்டு பல கிராமங்களில் இன்றும் நடைபெற்று வருகிறது. அதிலும் இந்த விளையாட்டில் பங்குபெறுவோர் நிச்சயம் வெற்றியைப் பெற வேண்டும் என்று மிகவும் பாடுபடுவர். ஏனெனில் இந்த விளையாட்டு ஊர்களுக்கிடையே நடைபெறுவதால், பலர் மிகவும் ஆர்வத்துடன் விளையாடுவர். இதைப் பார்த்தால் நமக்கே விளையாட வேண்டுமென்ற ஆசை வரும்.

ரேக்ளா ரேஸ்
ரேக்ளா ரேஸ் என்றால் மாட்டு வண்டி பந்தயம். இந்த பந்தயம் இன்றும் பல கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகிறது. அதுவும் ஒரு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும்.

ஜல்லிக்கட்டு
பாரம்பரிய விளையாட்டுக்களில் அன்று முதல் இன்று வரை அழியாமல் கொண்டாப்பட்டு வரும் விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு தான். அதிலும் இந்த விளையாட்டு தமிழ்நாட்டில் இருக்கும் அலங்காநல்லூரில் நடைபெறும். இதில் காளைகளை நன்கு வளர்த்து, அந்த காளையின் கொம்புகளில் பணமூட்டையை கட்டிவிட்டு, காளையை அடக்கி, அந்த பொன்மூட்டை எடுக்க வேண்டும். இது மிகவும் ஆபத்தான விளையாட்டு. இன்றும் இந்த விளையாட்டைத் தான் பெரும்பாலான இளம் தலைமுறையினர் விரும்பி விளையாடுவார்கள்.

உறியடி
இதுவும் ஒருவித பொங்கல் விளையாட்டுக்களில் ஒன்று. இதில் மேலே தொங்கும் பானையை, எந்த தடங்கல் வந்தாலும் முயன்று உடைக்க வேண்டும். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஏனெனில் இந்த பானையை உடைக்க அருகில் செல்லும் போது, உடைப்பவர்களின் முகத்தில் தண்ணீர் ஊற்றி, அவர்களின் கவனத்தை திசை திருப்புவார்கள்.

கோலப் போட்டி
பெண்களுக்கு நடைபெறும் ஒரு போட்டி என்றால் அது கோலப் போட்டி தான். இந்த போட்டியில் வெற்றி பெற பெண்கள் விடிய விடிய கோலத்தைப் போட்டு, வண்ணத்தை தீட்டுவார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"