சுலபமான "தங்கம்" சேமிப்பு திட்டம்!


தங்கத்தின் விலை சுமார் பத்து வருடங்களாகத்தான் அதிக ஏற்றங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 1925-ம் ஆண்டு முதல் சுமார் 80 வருடங்களாக தங்கத்தின் ஏற்றம் சீராகத்தான் இருந்துள்ளது. 2004-க்குப் பிறகு தங்கத்தின் ஏற்றம் மிக அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு சில காரணங்கள் உள்ளன. உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, உலகளாவிய தங்கத்தின் முதலீடு என பல காரணங்கள் இதற்கு சொல்ல முடியும்.

2004-க்குப் பிறகு தங்கம் மிக அதிக விலையேற்றத்தைச் சந்தித்து உள்ளது. ஆக, 2004-ல் ஒரு கிராம் தங்கம் 585 ரூபாய். அதே 2012-ல் ஒரு கிராம் தங்கம் 3,045 ரூபாய், ஒரு பவுன் 24,360 ரூபாய். இத்தகைய ஏற்றத்தைப் பார்க்கும்போது, நடுத்தர வர்க்கத்தினருக்கும் அதற்கும் கீழே உள்ள வர்க்கத்தினருக்கும் தங்கம் என்பது எட்டாதப் பொருளாகவே மாறி வருகிறது.தங்கம் சேமிப்பு திட்டம்!

தங்கத்தைச் சேமிக்கும் திட்டத்தை மேற்கொள்ளும் முன்பு நீங்கள் இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

1. எந்த வயதில் உங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள்?

2. உங்கள் மகளுக்கு எத்தனை பவுன் சீதனமாக அளிக்கப் போகிறீர்கள்?

இந்த கேள்விகளுக்கு முதலில் தெளிவான விடையைக் கண்டுபிடியுங்கள்.

ஒருவருக்கு இரண்டு மகள்கள் என்று வைத்துக்கொள்வோம். முதல் மகள், சாதனா; இரண்டாவது மகள், ஸ்வேதா. சாதனாவுக்கு ஐந்து வயது. ஸ்வேதாவுக்கு 2 வயது. ஆக இந்த நபர் தனது இரு மகள்களின் உயர் கல்விக்குப் பிறகு சுமார் 25 வயதில் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்.இவர் ஒவ்வொரு குழந்தைக்கும் 25 பவுன் ஆபரணத் தங்கம் அன்பளிப்பு செய்ய விரும்புகிறார்.

ஆக, சாதனாவுக்கு மாதந்தோறும் 0.833 கிராம் தங்கமும், ஸ்வேதாவுக்கு மாதந்தோறும் 0.725 கிராம் தங்கமும் வாங்க வேண்டும். தங்கத்தின் விலையைப் பொறுத்து இதற்கு நீங்கள் செலவு செய்ய வேண்டிய பணத்தின் அளவு மாறுபடும். இன்றைய விலையில் சாதனாவுக்கு 0.833 கிராம் முதலீடு செய்ய வேண்டும். ஸ்வேதாவுக்கு 0.725 கிராம் முதலீடு செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு மாதமும் நீங்கள் சேமிக்கும் பணம் தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலமாக உங்கள் குழந்தையின் திருமணத்துக்கு ஆகும் பெரும் செலவை சுலபமாகச் சமாளித்துவிட முடியும்.

சிலர் தங்க காயின்களாக வாங்கிச் சேமிப்பார்கள், இப்படி செய்கையில் திருமணத்தின்போது காயின்களை கொடுத்து நகையாகச் செய்யும்போது அதிகம் கழிவு போக வாய்ப்புள்ளது. இதனால் நகையின் அளவு குறையும். எனவே, தற்போது நகைக் கடைகளில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தங்க நகைச் சேமிப்பு திட்டத்தில் மாதா மாதம் கட்டும் பணத்திற்கு அன்றைய தங்கத்தின் விலைக்கே தங்கத்தை ரிசர்வ் செய்து வைக்கும் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அல்லது பேப்பர் தங்கமான இ-கோல்டு ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப்., இ-கோல்டு என உங்களுக்குத் தோதான ஏதாவது ஒன்றில் சேமிக்கலாம். இப்படி சேமிக்கும்போது தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்திற்கு தகுந்த வகையில் தங்கத்தைச் சேமிக்க முடியும். பணமாகச் சேமித்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது தங்கத்தின் அளவை குறைவாகத்தான் வாங்க முடியும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"