பெண்களின் உள்ளாடைகளை திருடிய நிர்வாண திருடன்


சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோடு பார்த்தசாரதி கார்டன் தெருவில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையன் ஒருவன் நூதன முறையில் கைவரிசை காட்டி வருகிறான்.

வீடுகளுக்கு வெளியில் காம்பவுண்டு சுவருக்கு உட்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சமையல் சிலிண்டர்கள், கொடிகளில் தொங்க விடப்பட்டுள்ள ஆடைகள் மற்றும் சமையல் சாதனங்களை திருடிச் செல்வதை கொள்ளையன் வழக்கமாக கொண்டுள்ளான். அப்பகுதியில் செயல்பட்டு வந்த இலங்கை துணை தூதரகம் கடந்த செப்டம்பர் மாதம் நுங்கம்பாக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதனால் அப்பகுதியில் தூதரகத்துக்காக போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதன் பிறகுதான் அங்குள்ள பங்களா வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுபற்றி தேனாம்பேட்டை போலீசில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் செய்துள்ளனர்.ஆனால் போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை.இரவு ரோந்து பணியில் போலீசார் சாதாரண உடையில் சுற்றி வந்திருந்தால் அவனை நிச்சயம் பிடித்திருக்க முடியும் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கேமரா ஒன்றை பொறுத்தினர். இந்நிலையில் அங்குள்ள வீடு ஒன்றில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவரை கொள்ளையன் கற்பழிக்க முயற்சி செய்தான். அவர் சத்தம் போடவே அவன் அங்கிருந்து ஓடிவிட்டான். இதைத் தொடர்ந்து கேமராவில் பதிவான காட்சிகளை குடியிருப்பு வாசிகள் போட்டு பார்த்தனர்.
அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடம்பில் ஒட்டு துணியில்லாமல் வாலிபர் ஒருவர் நள்ளிரவு 3 மணி அளவில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. சிறிது நேரத்தில் அந்த வாலிபர் டவல் ஒன்றை இடுப்பில் கட்டிக் கொண்டு வெளியில் வரும் காட்சியும் கேமராவில் பதிவாகி உள்ளது.கொடியில் போடப்பட்டிருந்த டவல் ஒன்றை திருடி அவன் தனது உடம்பில் கட்டியுள்ளான். இதையடுத்து கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகள் தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. அதனை போலீசார் போட்டு பார்த்தனர். அப்போது நிர்வாண கொள்ளையன் யார்? என்பது அடையாளம் காணப்பட்டது. அவனது பெயர் குமார் என்பதை மட்டும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

அவனை கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கற்பழிப்பு முயற்சியில் இருந்து தப்பிய பெண்ணும் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் நிர்வாண கொள்ளையன் குமார் மீது பெண்ணை கற்பழிக்க முயன்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. உடம்பில் துணியில்லாமல் நள்ளிரவில் நிர்வாண கொள்ளையன் சுற்றித் திரிவது ஆழ்வார்பேட்டை பகுதிவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் ஆடைகளை திருடி அதில் சுகம் காணும் குணம் கொண்டவனாக குமார் இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"