சராசரியாக எல்லோரிடமும் குறைந்தபட்சம் ஒரு புகைப்பட ஆல்பமும், கைநிறைய புகைப்படங்களும் இருக்கவே செய்யும். ஆல்பங்களையும், புகைப்படங்களையும் வீட்டின் பீரோவிலோ அல்லது வரவேற்பறையிலோ பாதுகாப்பாக எடுத்து வைத்திருக்கலாம். ஒரு சில படங்களை பிரேம் செய்து வீட்டு சுவரில் மாட்டி வைத்திருக்கலாம்.
எப்போதாவது எடுத்து பார்ப்பது தவிர, இந்த புகைப்படங்கள் அவை இருக்கும் இடத்திலேயே கிடக்கும். கொஞ்சம் கவனிக்காமல் விட்டால் இந்த புகைப்படங்கள் காலப்போக்கில் பழுதாகிவிடும் வாய்ப்பு உண்டு.
இப்படி புகைப்படங்களின் மூலம் பாதுகாக்கப்படும் அதிக நினைவுகள் பாழாகி விடாமல் இருக்க சிறந்த வழி புகைப்படங்களை டிஜிட்டல் மயமாக்குவதுதான். அதாவது புகைப்படங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றி சிடியாகவோ அல்லது கம்ப்யூட்டரிலோ சேமித்து வைப்பதுதான். ஆல்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் படங்கள் அல்லது தனியே வைக்கப்பட்டிருக்கும் படங்கள் கால மாற்றத்தால் பழுப்படைந்து போகலாம். இவற்றை கை தவறி வைத்து தொலைத்துவிடும் சாத்தியமும் உண்டு.
ஆனால் புகைப்படங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றி கொள்ளும் போது இத்தகைய அபாயங்கள் கிடையாது. கம்ப்யூட்டரில் அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்பதோடு மற்றவர்களோடு சுலபமாகவும் பகிர்ந்து கொள்ளலாம். பிரிண்ட் செய்யப்படும் புகைப்படங்களின் காலம் மறையத் தொடங்கி, டிஜிட்டல் காமிரா, டிஜிட்டல் படங்கள் என எல்லாமே மாறி வரும் காலத்தில் பழைய புகைப்படங்களையும் டிஜிட்டல் வடிவில் மாற்றுவதே சரியாக இருக்கும்.
டிஜிட்டல் வடிவில் மாற்றுவதற்கு என்ன வழி என்று கேட்டால், புகைப்படங்களை ஸ்கேன் செய்வதுதான் என்று சுலபமாக சொல்லி விடலாம்.
ஆனால் படங்களை ஸ்கேன் செய்வதற்கு தனியே ஸ்கேனிங் சாதனம் வாங்க வேண்டுமே. ஸ்கேன் செய்வது எப்படி என்று கற்று கொள்ள வேண்டுமே என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அந்த பணியையெல்லாம் உங்கள் சார்பாக செய்து புகைப்படங்களை டிஜிட்டல் மயமாக்கி தரும் சேவையை ஸ்கேன் கார்னர் இணையதளம் செய்து தருகிறது.
உங்கள் வசம் உள்ள புகைப்படங்களை இந்த இணைய தளத்தில் குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்பி வைத்தீர்கள் என்றால், அவற்றை அழகாக ஸ்கேன் செய்து டிஜிட்டல் படங்களாக டிவிடியில் சேமித்து உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கின்றனர்.
இந்த டிவிடிக்களை பாதுகாப்பதும் எளிதானது. வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு போட்டு காண்பிப்பதும் சுலபமானது. அதுமட்டுமல்லாமல் இவற்றை உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவேற்றி வைத்து கொண்டு உங்களது அபிமான வலைப்பின்னல் தளங்களில் பகிர்ந்து கொள்வதும் சுலபமானது. இந்த சேவைக்காக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. படங்களை நீங்களே ஸ்கேன் செய்வதை காட்டிலும் இந்த சேவை மிகவும் சுலபமானது. செலவு குறைவானது. முதல் 6 மாத காலத்திற்குள் நீங்கள் டிவிடியை தொலைத்து விட்டீர்கள் என்றால் மாற்று டிவிடியை இந்த தளமே இலவசமாக வழங்குகிறது. எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் யுகத்தில் இந்த சேவை எந்த அளவுக்கு தேவையானது என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
உண்மையில் இப்படி ஒரு சேவை அவசியமானது என்பதை தனிப்பட்ட முறையில் உணர்ந்ததால்தான் இந்த இணைய தளத்தை இதன் நிறுவனரான எரிக் துவக்கி இருக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் அவர் தனது பாட்டியின் விடுமுறை கால புகைப்படங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில் தரும் சேவை ஏதாவது இருக்கிறதா என தேடிப்பார்த்திருக்கிறார்.
அப்படி ஒரு சேவை எதுவும் இல்லாததால் அவுட் சோர்சிங்கில் புகழ் பெற்ற இந்தியாவில் உள்ள தனது நண்பரை தொடர்பு கொண்டு புகைப்படங்களை டிஜிட்டல் படங்களாக மாற்றித்தர கேட்டிருக்கிறார். அப்போதுதான் இத்தகைய சேவை தேவைப்படும் பலருக்காக ஒரு தளத்தை துவக்கினால் என்ன என்ற எண்ணம் உண்டானது. அதன் பயனாக பிறந்ததுதான் ஸ்கேன் கார்னர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த தளம் செயல்பட்டு வருகிறது.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்