வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த பள்ளமங்கலத்தைச் சேர்ந்தவர் ரோகிணி(26). மாற்றுத் திறனாளியான அவர் ராணிப்பேட்டை தாய்சேய் நல மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 4ம் தேதி காலை வேலைக்கு சென்ற அவர் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் ஐய்யம்பேட்டைச்சேரி வாழைத்தோட்டத்தில் முகம் சிதைந்த நிலையில் ரோகிணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீதர் (26) என்பவரை கைது செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில், வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் எடப்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரு தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும், நர்ஸ் ரோகிணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி மாலை 4 மணியளவில் ரோகிணி அழைத்ததன்பேரில் இருவரும் பைக்கில் பல இடங்களுக்கு சென்றுள்ளனர்.
காவேரிப்பாக்கம் வழியாக பைக்கில் சென்றபோது, ஏரிக்கரை அருகே வாழைத்தோட்டத்தில் வண்டியை நிறுத்திய ஸ்ரீதர் அவரை அனுபவிக்க முயன்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் ரோகிணியை கீழே தள்ளி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அருகில் கிடந்த கருங்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இதை ஸ்ரீதர் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அப்படியே கூறியுள்ளார்.
இதனையடுத்து காட்பாடி நீதிமன்றத்தில் ஸ்ரீதர் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
