இளம்பெண்ணை, செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ஒருவரின் 18 வயது மகள், தனியார் கல்லூரியில். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கோவையில் உள்ள ஒரு நடனக் குழுவிலும் இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று நடனமாடுவார். கடந்த ஆண்டு ரெட்பீல்டு பகுதியில் நடந்த புத்தாண்டு தின விழாவில் தங்கள் குழுவினருடன் சென்று நடனமாடிய அந்தப் பெண், நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
உடை மாற்ற வேண்டும் என்று கூறிய அவரை நடன குழுவை சேர்ந்த கண்ணன் (23), பிரதீப் (22) இருவரும் பைக்கில் அழைத்து சென்றனர். பிரதீப் வீட்டில் இளம்பெண் உடை மாற்றினார். அப்போது அங்கு செல்போனை மறைத்து வைத்து, இருவரும் அவரை ஆபாசமாக படம் பிடித்தனர்.
சில நாட்கள் கழித்து, அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட வாலிபர்கள், ‘உன்னை செல்போனில் நிர்வாணமாக படம் எடுத்துவிட்டோம். நாங்கள் கேட்கும்போதெல்லாம் பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் படத்தை இன்டர்நெட்டில் பரவவிடுவோம்’ என மிரட்டி வந்தனர்.
பயந்துபோன அந்தப் பெண், பலமுறை அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். இருவரின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்ததால் இதுகுறித்து தனது தந்தையிடம் கூறினார். பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்தனர். நேற்று மாலை புலியகுளம் பகுதிக்கு சென்று கண்ணன், பிரதீப் ஆகியோரை கைது செய்தனர்.