மாலை நேரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் தெற்கு மாடவீதி ஜேஜே என்றிருக்கும். நடைபாதை இல்லாத சாலையின் இருபுறமும் காய்கறிகள், பழங்கள் வரிசைகட்டி அமர்ந்திருக்கும். எடுத்துக் கடிக்க தூண்டும் வகையில் பசுமையாக காட்சியளிக்கும். அங்காடித் தெருவில் விண்டோ ஷாப்பிங் செல்வதைப் போல, இதையெல்லாம் கண்ணால் ருசிப்பதற்கே வருவார்கள் சிலர். பை நிறைய வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுவார்கள் பலர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது மத்திய அரசு.
காய்கறி, பழங்கள் பெரிதாகவும் பசுமையாகவும் வளர ஆபத்தான மருந்துகளை பல விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஆக்சிடாசின் என்ற ஹார்மோன் செடிகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறதாம். கர்ப்பிணிகளுக்கு வலி உண்டாக்கவும், பிரசவத்தால் ஏற்படும் ரத்தப் போக்கை நிறுத்தவும், தாய்ப்பால் சுரக்கவும் இந்த மருந்து கொடுக்கப்பட்டது. அதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக தெரிந்ததும் அரசு தடை விதித்தது.
மருந்து கடைகளில் காணாமல்போன ஆக்சிடாசின் வெவ்வேறு பெயர்களில் உரம், பூச்சிகொல்லி கடைகளில் கிடைக்கிறது. மாடுகள் அதிக பால் சுரக்க ஊசி மூலம் செலுத்துகின்றனர். கத்தரி, பூசணி, வெள்ளரி, பாகற்காய் போன்ற பல காய்கறிகள் பெரிதாக வளர அந்த மருந்து செலுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதை சாப்பிடுவதால் இதய கோளாறுகள், நரம்பு மண்டல பாதிப்பு, மறதி, மலட்டுத் தன்மை உள்ளிட்ட நோய்கள் தாக்கும் என அவர் எச்சரிக்கிறார்.
பாகற்காய் ஜூஸ் குடித்த ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரிதாக பேசப்பட்டது. இன்னும் கொடுமை என்னவென்றால் கலப்பட காய்கறிதான் வில்லன் என்பதை யாரும் கண்டுபிடித்து சொல்வதில்லை. கார்பைடு கற்களால் பழுக்க வைத்து மெருகூட்டிய மாம்பழம் சாப்பிட்டு பலர் நோயாளியானார்கள்.
காய்களுக்கு பசுமையும் பழங்களுக்கு வண்ணமும் ஏற்றுவதால் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவில்லை.எப்படியாவது சம்பாதிப்பது என்ற வெறி சமூகத்தின் எந்தப் பிரிவையும் விட்டு வைத்திருப்பதாக தெரியவில்லை. அவரவர் குடும்பத்தில் ஒருவர் படுக்கும்போதுதான் உறைக்கும் என்றால் அதுவரை இந்த பூமி தாங்காது.