அழகானவர்கள் அறிவாளிகளா? ஒரு ஆய்வு


கருப்பு தோலைவிட வெள்ளை தோல் உயர்ந்தது என்ற நிறவெறி கண்ணோட்டம் தென் ஆப்ரிக்காவோடு போயிற்று என உலகம் நம்பியது. முற்றிலுமாக ஒழியவில்லை என்று காட்டும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் மாதிரி. நிறவெறியின் உச்சகட்ட கொடுமைகளை கருப்பர்கள் சந்தித்த அமெரிக்காவில் இன்று அந்த இனத்தை சேர்ந்தவர் அதிபராக இருக்கிறார். சக்கரத்தின் சுழற்சி முடிந்துவிட்டதாக நினைத்தவர்களுக்கு புதிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

அழகானவர்களே அறிவாளிகள், திறமைசாலிகள், வேலைக்கு தகுதியானவர்கள் என்ற கருத்து வேகமாக வேர்விட்டு பரவுகிறது. இதனால் சமுதாயத்தில் மோசமான விளைவுகள் உருவாகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எந்த கலாசாரமானாலும் அழகுக்கு எப்போதுமே தனி இடம் இருந்து வருகிறது. ஆனால், வேலையில் சேர்வதற்கான அல்லது பதவி உயர்வுக்கான தகுதிகளில் கல்வி, அனுபவம், நம்பிக்கை, பின்னணி, செயலாற்றல் ஆகியவற்றை காட்டிலும் அழகுக்கு அதிக மார்க் கொடுப்பது இதுவரை கண்டிராத நடைமுறை.

இதில் ஆண்,பெண் வித்தியாசம் கிடையாது. அழகான ஆண்கள் 5 சதவீதம் அதிகம் சம்பாதிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெண்கள் 4 சதவீதம். இந்த பட்டியலில் இடம் பிடிக்க முடியாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அழகாக தோன்ற வேண்டும் என்பது ஆசையாக இருந்தது போய் அவசியமாக மாறியிருக்கிறது. இயற்கையில் வாய்க்காததை செயற்கையாக அடைய வழி தேடுகின்றனர். இதனால் பிளாஸ்டிக் சர்ஜன்கள் காட்டில் மழை. கண், காது, மூக்கு, உதடு எதை வேண்டுமானாலும் விரும்பும் வகையில் ‘திருத்தி’ அமைக்கின்றனர்.

இதையடுத்து அழகு சாதன தயாரிப்பாளர்கள் பார்வை இந்தியா போன்ற வளரும் நாடுகள் பக்கம் திரும்பியுள்ளது. கட்டிங், ஷேவிங், மேக்கப் செலவை மாதம்250க்குள் வைத்திருந்த இந்தியர்களிடம் கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது 8 மடங்கு அதிகம் செலவிடுவதாக கம்பெனிகள் கணக்கிட்டுள்ளன. இது வேகமாக அதிகரித்து ஆண்டுக்கு 4000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரி கலாசாரம் இறக்குமதி ஆவதற்குள் இந்தியர்கள் எல்லோரும் அழகாகி விடுவார்கள் என்று தோன்றுகிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"