ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கு எதிராக தலிபான்கள் புதுவித யுத்த தந்திரத்தை உபயோகிக்கிறார்கள் என்பது சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் செய்தியாக மாறியிருக்கிறது. தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு உலகில் உள்ள நவீன ஆயுதங்கள் அனைத்தையும் அமெரிக்க படைகள் பயன்படுத்துகின்றன. இதற்கு பதிலடி கொடுக்க தலிபான்கள் செய்யும் தந்திரம் என்ன தெரியுமா? குரங்குகளுக்கு ஆயுத பயிற்சி கொடுப்பது.
குரங்கு கூட்டங்களை பிடித்து வந்து, அதற்கு ஏகே 47 உள்ளிட்ட இயந்திர துப்பாக்கிகளை கையாள்வதில் பயிற்சி கொடுப்பது, அமெரிக்க யூனிபார்ம் அணிந்த படைவீரர்களை இனம் கண்டு தாக்குவதற்கு சொல்லிக் கொடுப்பது என தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கிறார்களாம். இந்த குரங்குகளுக்கு சம்பளம் வாழைப்பழம், கடலை.ஆயுதப் பயிற்சி பெற்ற குரங்குகளை களத்தில் இறக்குவதால், தலிபான் தரப்பில் ஆள்சேதம் குறையும்.
மேலும் மேற்குலக விலங்கின ஆர்வலர்கள் இதனால் ஆடிப்போய், அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க மும்முரமாக வலியுறுத்துவார்கள் என்பது தலிபான்களின் கணக்காம். வியட்நாம் போரின்போது அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ இதுபோன்ற குரங்கு தீவிரவாதிகளை உருவாக்கினர். அதை பின்பற்றித்தான் தலிபான்களும் இந்த குரங்கு வேலையில் ஈடுபட்டிருக்கின்றனராம்.
இந்த செய்தி உலகை குலுக்கியது. அமெரிக்கா அதிர்ந்துபோனது. ஆனாலும் தலிபான்கள் குரங்கு தீவிரவாதிகளை பயன்படுத்துகிறார்களா என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. இச் செய்தியை முதலில் உலகுக்கு அளித்தது சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழின் இணையதளம். ஏகே47 தூக்கியபடி உள்ள போட்டோ ஆதாரம் வேறு அதில் இருந்தது. பீப்பிள்ஸ் டெய்லி ஏதோ காமாசோமா பத்திரிகை அல்ல. சீன கம்யூனிஸ்ட் அரசின் அதிகாரபூர்வ நாளிதழ். அதில் வந்ததால்தான் அதிர்ச்சி.
அமெரிக்க போர் நிபுணர்கள் இது முழுக்க முழுக்க கட்டுக்கதை என மறுத்துள்ளனர். ஆயுதங்களை கையாளும் அளவுக்கு விலங்குகளுக்கு லாவகம் போதாது. மேலும் இயந்திர துப்பாக்கி போன்றவற்றில் இருந்து வரும் பேரோசை விலங்குகளை அலறியடித்து ஓடவே செய்யும் என்கின்றனர். குரங்கு துப்பாக்கி தூக்கியிருப்பது போன்ற படம், மட்டமான போட்டோஷாப் வேலை என்றும் சொல்லியிருக்கின்றனர். இதுபோன்ற மலிவான வதந்திகளை சீனா ஏன் பரப்புகிறது என புரியவில்லை.