பிரிட்டனில் ஒக்ஸ்போர்ட் அருகே இருக்கின்ற பிஸ்டர் என்ற ஊரில் ஆரம்பித்திருக்கின்ற தாய்லாந்து உணவுக்கான விடுதியின் பெயர் - கேப்பேஜஸ் அண்ட் காண்டம்ஸ்.
இந்த உணவு விடுதிக்குள் நுழைந்தால் சுவற்றில் மாடப்பட்டுள்ள படங்களை ஆணுறைகளே அலங்கரிக்கின்றன.
மேற்கூறையிலிருந்து தொங்கும் விளக்குகள் கூட ஆணுறை வடிவத்தில்தான் இருக்கின்றன.
ஆனாலும் பிரிட்டனில் கடைகளுக்கு சென்று வெளிப்படையாக ஆணுறை வாங்க மக்கள் கூச்சப்படுகிறார்கள், பாலுறவு பற்றி சாதாரணமாக பேசவும் அவர்கள் தர்மசங்கடப்படுகிறார்கள் என்று பாலியல் கல்வி தொடர்பில் பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.
ஆக இந்தியாவில் மட்டும்தான் என்றில்லை,மேற்கத்திய நாடுகளிலும்கூட கடையில் போய் ஆணுறை வாங்குவது என்பது பலருக்கும் தர்மசங்கடமான ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது
பிரிட்டனில் பாலுறவின்போது பயன்படுத்தக்கூடிய ஆடைகள் பொருட்கள், கருவிகள் போன்றவற்றை விற்கக்கூடிய கடைகளையெல்லாம் சாதாரணமாகப் பார்க்க முடியும்.
முக்குட்டில் இருக்கும் மருந்து கடைக்கு போனால் பல வண்ணங்களிலும் வாடைகளிலும் ஆணுறைகளையும், வழவழப்புக்கான களிம்புகளையும் வாங்க முடியும்.
ஆனாலும்கூட கடைகளுக்கு சென்று அவற்றை வாங்குவதென்பது தர்மசங்கடமான ஒரு விஷயமாகவே மக்கள் கருதுகிறார்கள்.
ஃபியூஷன் காண்டம்ஸ் என்ற் நிறுவனம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் பாலுறவு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க தாங்கள் கூச்சப்படுவதாக அதில் கருத்து தெரிவித்த 54 சதவீத ஆண்களும் 57 சதவீத பெண்களும் குறிப்பிட்டுள்ளனர்.
மக்களுக்கு பாலுறவு வைத்துக்கொள்வதை விட கஷ்டமான ஒரு காரியம் பாலுறவு பற்றி பேசுவது என்கிறார் பாலியல் கல்விதொண்டு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஜெனவியெவ் எட்வர்ட்ஸ்.
"கடையிலே போய் ஆணுறை கொடுங்கள் என்று கேட்பது, முன்பின் தெரியாத ஒருவரிடம் போய் நான் உடலுறவு வைத்துக்கொள்ளப் போகிறேன் என்று அறிவிப்பது மாதிரியானது. ஆகவேதான் பலர் இதற்குத் தயங்குகின்றனர்" என்கிறார் உளவியல் நிபுணர் பிலிப் ஹட்சன்.
பிரிட்டனில் இணையம் வழியாக ஆணுறை விற்கின்ற ஒரு நிறுவனம் மைகாண்டம்.கோ.யூகே. இதன் விற்பனை பெருமளவில் அதிகரித்துவருவதற்கு காரணமும் கடைக்கு சென்று ஆணுறை வாங்குவதில் மக்களுக்கு உள்ள தயக்கம்தான் என்று அந்நிறுவனத்தார் கூறுகின்றனர்.
பள்ளிக்கூடத்திலேயே ஒழுங்கான பாலியல் கல்வி வழங்குவதுதான் இந்த தர்மசங்கடத்திலிருந்து மக்கள் வெளிவருவதற்கான வழி என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆணுறை வாங்கத் தயங்கினாலும், ஆணுறை வழங்கும் பிஸ்டெர் நகரத்து உணவகத்துக்கு செல்ல மக்கள் தயங்குவதாகத் தெரியவில்லை. அங்கே வியாபாரம் என்னவோ அமோகமாகத்தான் இருக்கிறது