கணினி பயன்பாட்டில் பலரின் நேரத்தையும் உழைப்பையும் தேவையற்ற முறையில் வீணாக்குவது வைரஸ்களே.எந்த நேரமும் ஒரு பயத்தை உருவாக்கி எந்த ரூபத்தில் வந்து நம் பைல்களை நாசம் செய்து விடுமோ? இயக்கத்தை முடக்கி விடுமோ என்ற அச்சத்துடன் ஒவ்வொருவரும் கம்ப்யூட்டரை இயக்க வேண்டியுள்ளது.அப்படிப்பட்ட வைரஸ்கள் ஏன் உருவாக்கப்படுகிறது????
பணம்:
இதுதான் பலரை இழுக்கும் தூண்டில்.வைரஸ் உருவாக்கி பல வழிகளில் சம்பாதிக்கலாம்.முதலாவதாக டேட்டா திருட்டு.வைரஸ் மூலம் அடுத்தவர்களின் கம்ப்யுட்டரில் நுழைந்து தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் தகவல்களைத் திருடுவது.தனிப்பட்டவரின் கிரெடிட் கார்டு தகவல்களைக் கண்டறிந்து அதனைப் பயன்படுத்தி பணம் திருடுவது இன்று மேல் நாடுகளில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு குற்றம் ஆகி விட்டது.
இன்னொன்று அடுத்தவரின் கம்ப்யூட்டரை முடக்கி அதனை பணயக் கைதியாக்கிப் பணம் பறிப்பது.முதலாவதாக நேரடியாகவே கம்ப்யூட்டரின் உரிமையாளரை தான் தான் இப்படிச் செய்ததாகக் கூறி மீண்டும் இயக்க பணம் கேட்பது.இன்னொரு வழியில் தான் அதற்கு தீர்வு காணும் மூன்றாவது மனிதனைப் போல் சென்று பணம் பெறுவது.இவற்றை ஆங்கிலத்தில் "ransomware" என்று அழைக்கின்றனர்.ransom என்ற சொல் பணயக் கைதியை விடுவிக்க வழங்கப்படும் பணம்.
தனி மனிதப் பிரச்னைகள்:
தாங்கள் மற்றவர்களை காட்டிலும் இருந்த கம்ப்யூட்டர் உலகில் வலிமை படைத்தவராக இருக்கிறோம் என்ற உணர்வைப் பெற பலர் வைரஸ்களை உருவாக்குகின்றனர்.இந்த உணர்வை மற்றவர்களிடம் காட்டாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே இருந்த எண்ணத்தை ஊட்டிக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு எந்த பலனும் பயனும் இதில் கிடைக்கவில்லை என்றாலும் தன திறமையைக் கொண்டு சிறிய அளவிலாவது அழிவை உருவாக்கி விட்டேன் என்ற தீய சிந்தனை இவர்களுக்கு ஏற்படுகிறது.
வைரஸ் குறித்து பத்திரிக்கைகள் மற்றும் இணையதள மீடியாக்கள் எழுதுகையில் ஏதோ ஒரு சாதனை புரிந்தது போல் எண்ணிக் கொள்கிறார்கள்.அதனால் தான் ஒருவர் தான் உருவாக்கிய வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என்ற செய்தியைப் பெற்ற பின் அதைக் காட்டிலும் அதிக சேதத்தை விளைவிக்கும் வைரஸை எழுத முயற்சிக்கிறார்.
குழு ஆதிக்கம்:
ரௌடிக் கும்பல்கள் போல வைரஸ் உருவாக்கும் குழுக்கள் ஆன்லைனில் இயங்குகின்றன.இவர்கள் வைரஸ் உருவாக்கி பணம் சம்பாதிப்பதில்லை.ஆனால் குழுவாகச் சேர்ந்து கொண்டு தங்களால் வைரஸ்களை உருவாக்கி அழிவைத் தர முடியும் என ஆன்லைனில் வெப்சைட்டுகளில் ஆரவாரமிடுவது இவர்கள் பொழுதுபோக்கு.இதே போல் பல கும்பல்களை இண்டர்நெட்டில் காணலாம்.இதில் ஒரு மோசமான விஷயம் என்னவென்றால் இருந்த குழுக்கள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதுதான்.
அரசியல் மற்றும் சமூகப் பழி தீர்த்தல்:
கட்சி ஒன்றின் இணைய தளத்தில் ஹேக்கர்கள் புகுந்து அங்கு தரப்பட்டிருந்த தகவல்களை எல்லாம் மாற்றி வைத்து விட்டதாக செய்திகள் வந்தன.இதுவும் ஒரு குழு ஏகாதிபத்திய மனப்பான்மை தான்.ஒரு அரசியல் கட்சி அல்லது சமூகக் குழுவினருக்கு தொல்லை தருவது அல்லது அதனைத் தாக்கும் ஒரு வழியாக வைரஸை உருவாக்குவது இப்படிப்பட்டவர்களின் வேளையாக உள்ளது.இவர்கள் வைரஸ்களை உருவாக்கி அழிக்கும் வழியே அலாதியாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக ஒரு அரசியல் கட்சியின் இணைய தளத்தைக் கெடுக்க ஒரு வைரஸ் எழுதப்பட்டது.ஆனால் அது நேராக அண்டக் கட்சியின் தளத்தை ஆக்கிரமிக்கும் வகையில் எழுதப்படவில்லை.அதற்குப் பதிலாக உலகின் பல்வேறு இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த வைரஸ் புரோகிராமினைப் பதிப்பது முதல் வேலையாக உள்ளது.அந்த வைரஸ் குறிப்பிட்ட நாளில் அக்கட்சியின் இணைய தளத்தைத் தான் தங்கும் கம்ப்யூட்டரில் இருந்து தாக்குவது போல அமைக்கப்பட்டிருக்கும்.அது அடுத்த நிலையாக இருக்கும்.
பாதிக்கப்படுபவர் இந்த வைரஸ் எங்கிருந்து உருவானது என்று அறிய முடியாது.ஏனென்றால் வைரஸ்கள் சம்பந்தமில்லாத கம்ப்யூட்டர்களிலிருந்து அந்த கம்ப்யுட்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கே தெரியாமல் அந்த அரசியல் கட்சியின் இன்டர்நெட் வெப்சைட்டை தாக்கியிருக்கும்.இன்னும் பலவகை வைரஸ் தாக்குதல்கள் நாள்தொறும் உருவாகி வருகின்றன.சைபர் உலகின் சாபக் கீடாக இது மாறி விட்டது.வேறு வழியின்றி இத்தகைய மோசமானவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே நாம் நம் உழைப்பையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டியுள்ளது.