பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு. அதாவது எதிர் தரப்பினர் மீது, அவரது செயலுக்கு எதிப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது. அதை நாமே அனுப்பலாம். நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில், வழக்கறிஞர் மூலமாக அனுப்பவேண்டும்.
நமது நாட்டு சட்டப்படி, வழக்கு தொடுப்பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் ( Opposite Party )- தான் வழக்கு நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழக்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ போதுமான சட்ட அறிவு இல்லாத நிலையில் வழக்கறிஞர் மூலமாக செய்ய வேண்டும்.
பொதுவாக லீகல் நோட்டீஸ் என்பது நாம் அனுப்பும் நோட்டீஸ் மற்றும் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் , இவை இரண்டையுமே குறிப்பிடும் சொல்லாகும். வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் அட்வகேட் நோட்டீஸ் ஆகும்.
லீகல் நோட்டீஸ் தயாரிப்பது எப்படி?
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு வருட உத்திரவாதம் உற்பத்தியாளரால் வழங்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒரு சில நாட்களி லேயே அது பழுதடைந்து விடுகிறது. நீங்கள் எந்த கடைக்காரரிடம் வாங்கினீர்களோ, அவரிடம் புகார் செய்கிறீர்கள். அவர் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் டீலராக இருந்தால் அவரே பழுது பார்த்து கொடுப்பார். அப்படி இல்லை என்றால் கம்பெனியின் சர்வீஸ் சென்டர் முகவரியை தருவார். அங்கு புகார் செய்கிறீர்கள். அவர்கள் பழுது பார்த்து தருகிறார்கள்.
மறுபடியும் குறுகிய காலத்தில் பழுது ஏற்படுகிறது. மீண்டும் பழுது பார்க்கப்படுகிறது. பழுதடைவது தொடர்கிறது . இதனால், உங்களால் தொடர்ச்சியாக மிஷினை பயன்படுத்தாத நிலை. இந்நிலையில், உங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் தரம் குறைந்தது அல்லது உற்பத்தியில் குறைபாடுள்ள பொருள் (Manufacturing Defect) என கருதுகிறீர்கள். அதனால் அந்த மிஷினுக்கு பதில் வேறு மிஷின் தருமாறு கேட்கிறீகள். கம்பெனிக்காரர்கள் அவ்விதம் செய்ய மறுக்கிறார்கள். அதனால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர போகிறீர்கள்.
இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
இந்த விஷயத்தில், விற்பனையாளரை பொறுத்த வரையில் அவர் மீது எவ்வித தவறும் கிடையாது. எனவே வழக்கில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சேர்த்தாலும் தவறு கிடையாது.
லீகல் நோட்டீஸ் எப்படி உருவாக்குவது எப்பதை இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்..
http://lawforus.blogspot.com/2009/08/blog-post_26.html