தவறான தகவல்களுடன் ஒரு பாலிசி விற்பனை செய்வதைத்தான் 'மிஸ் செல்லிங்’ என்கிறோம். இன்றைக்கு இன்ஷூரன்ஸ் துறையின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருக்கிறது இந்த மிஸ் செல்லிங். இதிலிருந்து தப்பிக்க பாலிசிதாரர்கள் எப்படி கவனமாக இருக்கவேண்டும் என ஏகான் ரெலிகேர் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் எம்.டி. மற்றும் சி.இ.ஓ. ராஜீவ் ஜாம்ஹெட்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
''லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்தான் இந்த மிஸ் செல்லிங் என்பது அதிகமாக நடக்கிறது. குறிப்பாக, இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் அம்சங்கள், அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் மற்றும் கட்டணங்கள் குறித்து பாலிசிதாரருக்குத் தவறான தகவல்களைச் சொல்லி, பாலிசியை விற்கிறார்கள் சில ஏஜென்ட்கள். இந்த மிஸ் செல்லிங் என்பது இரு நிலைகளில் நடக்கிறது. முதல் நிலைக்குக் காரணம், பாலிசிதாரர்கள்தான். அவர்களுக்கு ஆயுள் காப்பீடு பற்றியும், ஒரு குறிப்பிட்ட பாலிசி அல்லது திட்டம் எப்படி செயல்படுகிறது என்பது பற்றியும் தெளிவாகத் தெரிவதில்லை. சுயமாகத் தெரிந்துகொள்ள எந்த முயற்சியையும் அவர்கள் எடுப்பதும் இல்லை. இந்த அறியாமையைப் பயன்படுத்தி, சிலபல பொய்களைச் சொல்லி, பாலிசிகளை ஏஜென்ட்கள் விற்பது இரண்டாவது காரணமாக இருக்கிறது.
மிஸ் செல்லிங்-கைத் தடுக்க பாலிசி எடுப்பவர்கள் ஓரளவுக்கு விவரமாக மாறுவதுதான் ஒரே வழி. ஏஜென்ட்கள் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிவிடாமல், உங்களுடைய நிதித் தேவை என்ன?, ஆயுள் காப்பீடு அவசியம் தேவையா? எவ்வளவுக்குத் தேவை? அல்லது முதலீடுதான் நோக்கமா என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் வருமானம், வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் உள்ளிட்டவைகளை அலசி ஆராய்ந்து அதன்பிறகு பாலிசியைத் தேர்வு செய்யுங்கள். ஏஜென்ட், இத்தனை வருஷம் கழித்து இத்தனை சதவிகித வருமானம் அல்லது தொகை கிடைக்கும் என உத்தரவாதம் தந்தால் நம்பாதீர்கள். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் உத்தரவாத வருமானம் கிடையாது.
ஒரு பாலிசியை எடுக்கும்முன் அந்த பாலிசி பற்றி முழுமையாகப் புரிந்துகொள்வது அவசியம். பாலிசியின் விவரங்களை முழுமையாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு சரியாகப் புரியவில்லை என்றால் விவரம் தெரிந்த குடும்ப உறுப்பினர், நண்பர்களிடம் காட்டி அதன் அர்த்தங்களைப் புரிந்துகொண்டு அதன்பிறகு பாலிசி எடுக்கவும். முடிந்தால் இது போன்ற பாலிசி வேறு எந்த நிறுவனங்களில் எல்லாம் இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்து ஏஜென்ட் குறிப்பிடுவது நல்ல பாலிசி, அது நமக்கு சரியானதாகவே இருக்கும் என்று தெரிந்தால் மட்டுமே எடுக்கவும்.
அடுத்து, பாலிசிக்கு எவ்வளவு பிரீமியம் கட்டினால், எவ்வளவு கவரேஜ் கிடைக்கும் என்பதை விளக்கும் அட்டவணையைக் கேட்டு வாங்குங்கள். இதன் அடிப்படையில் உங்களால் எவ்வளவு பிரீமியம் கட்ட முடியும் என்கிற முடிவுக்கு வரலாம். யூலிப் பாலிசி என்கிறபோது, 6% வருமானம் மற்றும் 10% வருமானம் என இரு பிரிவாகத் தரப்பட்டிருக்கும். ஏஜென்ட்கள் பெரும்பாலும்
10% வருமானத்தைக் காட்டிதான் பேசுவார்கள். நீங்களும் சில ஆயிரங்களைப் போட்டால், இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் 10 சதவிகிதம் வருமானம் கிடைக்கிறதே என்று பாலிசியை எடுப்பீர்கள். ஆனால், அது சந்தை சார்ந்த பாலிசியாக இருப்பதால், சந்தை சரியாகச் செயல்படவில்லை எனில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் அதிர்ச்சியே அடைவீர்கள்.
பாலிசியை எடுக்க முடிவு செய்துவிட்டால் புரபோசல் ஃபார்ம்-மை நீங்களே பூர்த்தி செய்யுங்கள். அப்போது அனைத்து தகவல் களையும் சரியாகக் குறிப்பிடுங்கள். சில நூறு ரூபாய் பிரீமியத்தை மிச்சப்படுத்த எண்ணி பின்னர் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் இழக்காதீர்கள். உதாரணத்துக்கு, சிகரெட், மதுப் பழக்கம் இருந்தால் பிரீமியம் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும். இதை மறைத்து பாலிசி எடுத்து, இந்தப் பிரச்னையால் க்ளைம் செய்யும்போது சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது.
பிரீமியம் கட்டி, பாலிசியை எடுத்தாகிவிட்டது எனில், இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு பாலிசி ஆவணங்களை அனுப்பி வைக்கும். அதில் பாலிசிக் காலம், நிபந்தனைகள் குறிப்பிட்டிருக்கும் பாலிசிப் பத்திரம், புரபோசல் ஃபார்ம்-ன் நகல், முதல் பிரீமிய ரசீது, யூனிட் ஒதுக்கீடு அறிக்கை (யூலிப் பாலிசி எனில்) போன்றவை இருக்கும்.
இந்த ஆவணங்களில் உங்களின் பெயர், நாமினி பெயர், இதர விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துவிடுங்கள். இந்த பாலிசி உங்களுக்கு சரியானதாக இல்லை, ஏஜென்ட் சொன்னது வேறாகவும், பாலிசியில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் வேறாகவும் இருந்து திருப்திகரமாக இல்லை என்றால் பாலிசியைத் திரும்ப ஒப்படைக்க முடியும். பாலிசி வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் பாலிசி பிடிக்கவில்லை என்றால் அதனை ரத்து செய்யமுடியும். இதனை 'ஃப்ரீ லுக் பிரீயட்’ என்பார்கள்.
ஏஜென்ட் உங்களை ஏமாற்றி பாலிசியை விற்றுவிட்டார் என்றால் காப்பீடு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் புகார் செய்யத் தவறாதீர்கள். உங்கள் ஒருவரின் புகார் மூலம் இன்னும் பலர் ஏமாறாமல் தடுக்கப்படும். ஒருவார காலத்தில் பிரச்னை தீர்க்கப்படவில்லை எனில், காப்பீடு நிறுவனத்தின் குறைதீர்ப்பு மேலாளருக்கு புகாரை எடுத்துச் செல்லுங்கள். அப்படியும் பிரச்னை தீரவில்லை எனில் ஓராண்டுக்குள் இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேன் (குறைதீர்ப்பாயம்) கொண்டு செல்லுங்கள். இவற்றை எல்லாம் மனதில்கொண்டு, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால், மிஸ் செல்லிங்-கைத் தவிர்க்க முடியும். ஆயுள் காப்பீடு என்பது நீண்டகாலத் திட்டம் என்பதால் நிதானம் தேவை.