பிரிட்டனின் டாக்டர். ஆலிசன் பார்க் தலைமையில் ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. திருமணம், பாலியல், சுற்றுப்புறச் சூழல் என பல விதமான கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டன.
பாலியல் சார்பாக கேட்கப்பட்ட “திருமணத்திற்கு முன் உடலுறவு” வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இருக்கிறதா எனும் கேள்விக்கு எழுபது விழுக்காடு பேர் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளில் இந்த சிந்தனை இருபத்து இரண்டு விழுக்காடு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதை பிரிட்டன் மக்களின் பரந்து பட்ட மனம் என்றும் சகிப்புத் தன்மை என்றும் ஆரோக்கியமான மன மாற்றம் என்றும் சில பத்திரிகைகள் வர்ணிக்கின்றன.
வீட்டு வேலை செய்தல், ஆண் பெண் பாகுபாடு போன்ற பல்வேறு கேள்விகளுக்கு “தம்பதியினரின் அன்யோன்யத்தைப் பொறுத்து” என்பது போன்ற பதில் வந்தது குறிப்பிடத் தக்கது.
திருமணத்திற்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது வெளிநாடுகளைப் போன்றே இந்தியாவிலும் அதிகரித்திருப்பதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவித்திருந்தது. மேலை நாடுகளின் கலாச்சார மாற்றங்கள் நவீன யுகத்தில் உடனடித் தாக்கங்களை இந்தியாவிலும் ஏற்படுத்துகின்றன என்பதன் உதாரணமாக இந்த புள்ளி விவரத்தைக் கொள்ளலாம்.