பாலுறவை அதிகரிக்கும் பெண்களுக்கான வயாகரா !


பெண்களின் மன அழுத்தத்துக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று களத்தில் குதித்தது ஜெர்மெனியிலுள்ள போரிங்கர் இன்கெல்ஹெம் கம்பெனி. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின் ஒரு மருந்தைக் கண்டுபிடித்து அதற்கு பிளிபான்செரின் என்று பெயரும் இட்டார்கள். கண்டுபிடித்த மருந்தை மன அழுத்தத்தில் இருந்த சில பெண்களுக்குக் கொடுத்து சோதனை செய்தார்கள்.

சோதனையின் முடிவு எப்படி இருக்கிறது என்று விசாரித்த போது தான் அவர்களுக்கு அந்த இனிய அதிர்ச்சியே தெரிந்தது. மன அழுத்தமெல்லாம் குறையவில்லை. ஆனால் மருந்தைச் சாப்பிட்டால் ‘அந்த’ ஆர்வம் அதிகமாகுது, என்று பெண்கள் ஏகத்துக்கு வெட்கப்பட்டிருக்கிறார்கள்.
 ஆஹா … அடித்தது ஜாக்பாட் என கம்பெனி சிலிர்த்துப் போய் விட்டது.

மன அழுத்தச் சமாச்சாரத்தைத் தூக்கிப் போட்டு விட்டு இந்தப் பக்கமாய் பார்வையைத் திருப்பினார்கள். அடுத்தடுத்த சோதனைகளில் இது பெண்களுக்கான ஒரு வயாகரா என நிரூபணமாயிருக்கிறது.

ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட வயாகரா உலகெங்கும் பல பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் குவிக்கிறது. அது கூட இதய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றபோது எதேச்சையாய் அகப்பட்டது தான். ஆண்களுக்கு வயாகரா போல பெண்களுக்கு எந்த மாத்திரையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அந்த குறையை பிளிபான்செரின் போக்கும் என நம்பப்படுகிறது.

இந்த மருந்தைத் தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும். இது நேரடியாக மூளையில் சென்று மூளையின் பரவசப் பகுதிகளைத் தூண்டி விடுகிறது. மூளையில் தேவையான கெமிக்கல்களைச் சுரக்க வைத்தும், அதன் அளவுகளை மட்டுப்படுத்தியும் இந்த ஆர்வம் கிளறப்படுகிறது.

இந்த மருந்தின் விரிவான சோதனையில் 2200 பெண்கள் ஈடுபடுத்தப் பட்டார்கள். இவர்களெல்லாம் “என்னத்த பாலியல்..” என ஆர்வமே இல்லாமல் கிடந்தவர்கள். இந்த மருந்தைச் சாப்பிட ஆரம்பித்தபின் அவர்களுடைய ஆர்வம் படிப்படியாய் அதிகரித்திருக்கிறது. உறவில் ஆர்வத்தையும், உற்சாகத்தையும், திருப்தியையும் கொடுத்திருக்கிறது.

ஆராய்ச்சியின் முடிவில் இந்த மருந்து பெண்களின் ஆர்வத்தை 60 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது என்பது தெரியவந்தது.

ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு எவ்வளவு பெரிய சிக்கலோ அதே அளவு சிக்கல் தான் பெண்களின் ஆர்வக் குறைவும். இந்த மருந்து பெண்களுக்கான வரப்பிரசாதம். பெண்களில் தாம்பத்ய ஆர்வத்துக்குத் தூபம் போடுகிறது என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜாண் தோர்ப்.

ஆண்களின் வயாகராவுக்கும், பெண்களின் பிளிபான்செரினுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. வயாகரா என்பது இன்ஸ்டண்ட் காபி போல, உடனடி எஃபக்ட். தேவைப்படும் போது ஒரு மாத்திரை போட்டுக் கொண்டால் போதும். பிளிபான்செரின் அப்படியல்ல.

தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். வயாகராவைச் சாப்பிட உடல் ஹெல்தியாக இருக்க வேண்டும். இதய நோயாளிகள் எட்டிக் கூடப் பார்க்கக் கூடாது. ஆனால் பிபான்செரினுக்கு அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.

இந்த மாத்திரையைச் சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற அசௌகரியங்களும் வந்திருக்கின்றன. அதன் காரணங்கள் இப்போது ஆராயப்பட்டு வருகின்றன. குடும்ப வாழ்க்கைக்கு தாம்பத்ய உறவு மிக மிக முக்கியம். அதில் பெண்களின் பங்களிப்பு மிகவும் தேவையானது. எனவே இந்த மருந்து உலகில் ஒரு புரட்சி என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"