பாலியல் வன்புணர்வில் மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகை!


கடந்த டிசம்பரில் டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறுபேரில் ஒருவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால், அவனைச் சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்க பரிந்துரைத்தது டெல்லி நீதிமன்றம்.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டு குறித்து விசாரித்த நீதிபதி சர்மா, பொதுமக்களிடமும் கருத்துகளைக் கேட்டிருந்தார். அவர்களில் பெரும்பாலோர் வன்புணர்வில் ஈடுபட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார்கள். பின்னர் அவர் தன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தார்.

மக்களவையில் இதுகுறித்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்த மத்திய அமைச்சர், குற்றவாளிகளின் வயது வரம்பைக் குறைப்பது குறித்து எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்றும், இது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை வாழ்வுரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாணவி வன்புணர்வு வழக்கில் 17 வயதான குற்றவாளியே மிகக்கொடூரமாக நடந்து கொண்டானென்றும், ஐவரால் வன்புணர்வு செய்யப்பட்டு மயக்கமுற்றிருந்த மாணவியை மயக்க நிலையில் மீண்டும் வன்புணர்ந்ததோடு, பெண்ணுறுப்பில் ஆயுதத்தால் தாக்கினான் என்றும் நிரூபணமாகியுள்ள நிலையில், அத்தகைய கொடூரனைச் சிறார் நீதிமன்றத்தில் விசாரிப்பது நாட்டுமக்களின் மனநிலைக்கு எதிரானது என்பதை மத்திய அரசு ஏன் உணரவில்லை என்பது வியப்பளிக்கிறது.

இன்னொரு பக்கம் இளம் குற்றவாளிகள் விசயத்தில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது கோவை உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் சிறார்கள் எனும்போது, சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஒருநீதியும், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இன்னொரு நிலைப்பாடும் சட்டத்தின்மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"