கடனை திருப்பி கேட்டதால்! கள்ளக்காதலி உதவியுடன் சிறுமி கொலை!!


தேனி மாவட்டம், போடி நகர் 4–வது வார்டு, அரசமரம் காமாட்சியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். நகைக்கடை அதிபர். பணம் கொடுக்கல்–வாங்கல் தொழிலும் செய்து வருகிறார்.

இவரது மனைவி செல்வமாரி (வயது 45). சவுந்தர்யா (13) என்ற மகளும், கிருஷ்ண குபேந்திரன் (6) என்ற மகனும் உள்ளனர். சவுந்தர்யா 6–ம் வகுப்பு படித்து வந்தார். கிருஷ்ண குபேந்திரன் முதல் வகுப்பு படித்து வருகிறான்.

அதே தெருவில், ஜக்கமநாயக்கன்பட்டி பன்னீர் செல்வம் தெருவை சேர்ந்த சுரேஷ் (32) நகைப்பட்டறை நடத்தி வந்தார். இவர் ராஜ்குமாரின் கடையில் வெள்ளிப்பொருட்கள் வாங்கியதில் கடன் தொகை அதிகரித்து விட்டது. இந்த கடனை சீக்கிரம் அடைக்குமாறு ராஜ்குமார் கேட்டு வந்தார்.

சுரேசுக்கும், அவரது பட்டறைக்கு எதிர் வீட்டில் வசிக்கும் மணிகண்டன் மனைவி கீதாவுக்கும் (32) கள்ளக்காதல் இருந்து வந்தது.

கடன் நெருக்கடியால் தவித்த சுரேஷ், கள்ளக்காதலி கீதா மற்றும் நண்பர்களான நாகலாபுரம் காமாட்சி (28), சுப்பராஜ்நகர் புதுக்காலனி கணேசன் (30), உசிலம்பட்டி விஜி என்ற விஜயராமன் ஆகியோருடன் சேர்ந்து ராஜ்குமாரை குடும்பத்தோடு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு பணம், நகைகளை கொள்ளை அடிக்க திட்டமிட்டார்.

இதற்காக சுரேஷ் மதுரைக்கு சென்று ‘சயனைடு’ என்ற விஷத்தை வாங்கி வந்தார்.

அந்த விஷத்தில் ஒரு பகுதியை கீதாவிடம் கொடுத்தார். ராஜ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கோவில் பிரசாதம் என்று கூறி, பாயாசத்தில் அந்த சயனைடை கலந்து கொடுத்து கீதா கொலை செய்து விடுவது என்பதும், ராஜ்குமாரை மதுபானம் அருந்த அழைத்து, அதில் சயனைடை கலந்து கொடுத்து சுரேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கொன்று விடுவது என்பதும் அவர்களது திட்டம்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ராஜ்குமாரின் மகள் சவுந்தர்யா, கீதாவின் வீடு அருகே நடந்து சென்றாள். கீதா அவரை அழைத்து, கோவில் பிரசாதம் என்று கூறி ‘சயனைடு’ கலந்த பாயாசத்தை கொடுத்தார். அதை குடித்த சிறுமி அங்கேயே மயங்கி விழுந்து, இறந்தார். அவரை இழுத்துச் சென்று பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, விஷம் கலந்த பாயாசத்தை ராஜ்குமாரின் வீட்டிற்கு கீதா கொண்டு சென்றார்.

அங்கு செல்வமாரியிடம் பாயாசத்தை கோவில் பிரசாதம் என்று கூறி கொடுத்தார். சிறுவன் கிருஷ்ண குபேந்திரன் அந்த பாயாசத்தை வாங்கி குடித்தான். செல்வமாரி அதை குடித்தபோது, வித்தியாசமான சுவையாக இருந்ததால் உடனே அதனை துப்பி விட்டார்.

அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. உடனே செல்வமாரி பிழைத்துக் கொள்வார், தான் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த கீதா அங்கிருந்து வெளியேறினார்.

அப்போது அந்த பகுதியில் ஏற்கனவே திட்டமிட்டபடி நின்று கொண்டு இருந்த சுரேஷ் தரப்பினரிடம், செல்வமாரி விஷம் கலந்த பாயாசத்தை குடிக்கவில்லை என்று கூறிவிட்டு கீதா தன்னுடைய வீட்டுக்கு சென்றார். இந்த சதியில், தான் மாட்டிக்கொள்வோம் என பயந்து, விஷம் கலந்த பாயாசத்தை கீதா குடித்து, மயங்கி விழுந்தார்.

இதற்கிடையே, பாயாசம் குடித்த மகன் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வமாரி, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு புறப்பட்டார்.

அப்போது இருட்டாக இருந்ததால் தெருவே பரபரப்பாக காணப்பட்டது.

சுரேஷ் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, விஜி என்ற விஜயராமன், கணேசன், காமாட்சி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் செல்வமாரியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகைகளை பறிக்க முயன்றனர்.

அப்போது மீண்டும் மின்சாரம் வந்ததால் அவர்கள் யார் என்பது செல்வமாரிக்கு அடையாளம் தெரிந்து விட்டது. உடனே 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

ஆனால் செல்வமாரி, தனது மகன் கிருஷ்ண குபேந்திரனை காப்பாற்ற அவனை தூக்கிக்கொண்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.


அங்கு இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தப்பிச் சென்ற சுரேஷ் தரப்பினரை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போடி விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுரேஷ், கணேசன், காமாட்சி மற்றும் அதே பகுதியில் பதுங்கி இருந்த விஜி என்ற விஜயராமன் ஆகியோர் உடனே போலீசார் வலையில் சிக்கினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜ்குமாரை குடும்பத்தோடு கொன்று விட்டு, கொள்ளை அடிக்க திட்டமிட்டது அம்பலத்துக்கு வந்தது.

உடனே கீதாவின் வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கு பீரோவில் அடைக்கப்பட்டு இருந்த சிறுமி சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றினர். மயங்கிய நிலையில் கிடந்த கீதாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி செத்தார்.

கொலையை அரங்கேற்றும் முன்பு அதுபற்றி கணவர் மற்றும் மாமியாருக்கு தெரிந்துவிடக்கூடாது என்று கீதா நினைத்தார். அதற்காக, இரவு 7½ மணியளவில் கணவர் மணிகண்டன் மற்றும் மாமியாருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விட்டு, அதன்பிறகு நகைக்கடை அதிபர் குடும்பத்தை தீர்த்துக்கட்டும் வேலையில் இறங்கி உள்ளார்.

போலீசார் கீதாவின் வீட்டிற்கு விசாரணைக்காக சென்ற பிறகே அவருடைய கணவர் மற்றும் மாமியாருக்கு இந்த திடுக்கிடும் சம்பவங்கள் பற்றிய விவரம் தெரியவந்தது.

இந்த சதி திட்டத்துக்கு தலைவனாக செயல்பட்ட சுரேஷ் ஏற்கனவே திருமணமானவர். மனைவி உத்தமபாளையத்தை சேர்ந்தவர். இவர்களுக்கு 1½ மாத கைக்குழந்தை உள்ளது. தற்போது 2–வது பிரசவத்திற்காக மனைவி ஊருக்கு சென்ற நேரத்தில் சுரேஷ் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கொலைக்கார கும்பலின் சதி திட்டத்திற்கு வசதியாக இருந்த மின்சார தடையே ராஜ்குமார் உயிரையும் காப்பாற்றி உள்ளது. மின்தடை ஏற்பட்ட நேரத்தில் இவர்கள் ராஜ்குமாரின் மனைவியை கொலை செய்ய முயன்றனர். ஆனால் மீண்டும் மின்சாரம் வந்ததால், அவர்களது திட்டம் நிறைவேற வில்லை. மின்தடை நீடித்திருந்தால் இவர்கள் செல்வமாரியை கொலை செய்துவிட்டு, ராஜ்குமாரையும் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கக்கூடும் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"