பேஸ்புக் தகவலால் உல்லாசமாக இருக்க அழகிகளை தேடி சென்றவர் கொலை!!


திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே, திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் காரணிப் பாட்டை கிராமம் உள்ளது. அங்குள்ள சாலையின் தெற்குப்பகுதியில் கடந்த 9-ந்தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் இதையட்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், படுகொலை செய்யப்பட்டவர் சென்னை மைலாப்பூர் ஆதாம் தெருவில் வசித்து வந்த மனோஜ்குமார் (வயது 37) என்பது தெரிய வந்தது. இவருக்கு ஜெயா (34) என்ற மனைவியும், ரிச்சி (12) என்ற மகளும் உள்ளனர்.

மனோஜ்குமார் சென்னை துரைப்பாக்கம் ஓ.எம்.ஆரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் டீம் மானேஜராக பணியாற்றி வந்தார். அவர் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

விசாரணையில், பேஸ் புக் மூலம் அவரை தொடர்பு கொண்ட சிலர், அழகிய பெண்கள் தேவையா? என்று ஆசை காட்டி அழைத்ததும், அதன்படி அங்கு சென்றபோது மனோஜ்குமார் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

அவரைக்கொலை செய்ததாக, சென்னை தண்டையார்ப்பேட்டை மாநகர பஸ் பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த வெங்கடேசன் (29) மற்றும் சென்னை மாதவரம் மாநகர பஸ் பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த தயானந்தன் (30) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

வெங்கடேசன் பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு ஊராட்சி திருப்பேர் கிராமத்தை சேர்ந்தவர். தயானந்தன் செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரை சேர்ந்தவர்.

விசாரணையின்போது கொலை பற்றி அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

நாங்கள் இருவரும் கடந்த 8-ந்தேதி மனோஜ்குமாரின் போனில் தொடர்புகொண்டு அழகிய பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமானால் உடனடியாக வரவும் என்று அழைத்தோம்.

அதன்படி எங்களை சந்தித்த அவர், நாங்கள் கேட்ட பணத்தை தராமல் போலீசில் மாட்டி விடுவேன் என்று எங்களை மிரட்டினார்.

இதனால் நாங்கள் இருவரும் மனோஜ்குமாருக்கு அதிக அளவில் மது வாங்கி கொடுத்து போதையில் இருந்த அவரை கொலை செய்தோம். என்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"