மனைவியின் கள்ளக்காதலுக்கு மாணவனை பலிக்கடா ஆக்கிய பள்ளி முதல்வர்!


தானே நகரின் நலஸ்போரா கிழக்குப் பகுதியில் தாக்கூர் வித்யா மந்திர் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி உள்ளது. இதன் முதல்வராக இருப்பவர் அமர்ஜித் சிங். 30 வயதாகிறது. இவர் காமர்ஸ் ஆசிரியராகவும் இருக்கிறார்.

அமர்ஜித் சிங்கின் மனைவி பெயர் கிரண். 28 வயதான இவருக்கு, கள்ளத் தொடர்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதுவும் அமர்ஜித்திடம் படிக்கும் மாணவர்களிடமே அவர் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

கிரணின் செல்போனை எடுத்துப் பார்த்த அமர்ஜித் சிங், அதன் மூலம் தனது மனைவியின் கள்ளத் தொடர்புகளைக் கண்டுபிடித்தார்.

இதையடுத்து தன்னிடம் படித்த முன்னாள் மாணவரான அக்பர் அலி வர்சி என்ற 20 வயது நபரைப் பிடித்தார். அவரிடம் தனது மனைவியைக் கொல்ல வேண்டும் என்று கூறினார். இதற்காக ரூ. 50,000 பணமும் கொடுத்தார்.

சம்பவ நாளன்று தனது மனைவிக்கு கல்லூரியிலிருந்து போன் செய்த அமர்ஜித் சிங், வர்சி என்ற முன்னாள் மாணவரை அனுப்புவதாகவும், அங்கு உனக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கும் என்றும் கூறியுள்ளார். வர்சியை தனக்குத் தெரியும் என்று தெரிவித்த கிரண், சரி என்றார்.

இதையடுத்து வர்சி, கிரண் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து அவரை சந்தோஷ் புவன் என்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கூட்டிச் சென்றார். அங்கு வர்சியின் கூட்டாளியான ராஜாராம் தாஸ் என்பவர் காத்திருந்தார்.

அங்கு கிரணுக்கு இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி குளோரோபார்ம் கொடுத்தனர். பின்னர் அவர் மயங்கியதும் முதலில் கத்தியை எடுத்துத் தலையை வெட்டினர். பின்னர் உடலையும் துண்டு துண்டாக வெட்டித் தள்ளினர். அதன் பின்னர் தலையை ஒரு சாக்குப் பையிலும், உடல் பாகங்கள பல்வேறு பைகளிலும் போட்டனர். அதன் பின்னர் கவ்ராய் பதா என்ற இடத்தில் கொண்டு போய் இந்த பைகளைப் போட்டனர்.

இந்த பைகள் குறித்து அப்பகுதியினர் போலீஸாரிடம் தெரிவிக்கவே போலீஸார் விசாரணையில் குதித்தனர். உடல் பாகங்களைச் சேகரித்த அவர்களுக்கு அது யாருடைய உடல் என்பதைக் கண்டறிவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தலையைக் கண்டுபிடித்த போலீஸார் அதை வைத்து தேடுகையில், அமர்ஜித்சிங்கின் மனைவி அவர் என்று தெரிய வந்து அமர்ஜித்திடம் விசாரணை நடத்தினர். அப்போது கூட தனது திட்டத்தை அமர்ஜித் சிங் போலீஸிடம் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து அமர்ஜித் சிங்கை போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் உண்மையைக் கக்கினார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"