பருவமடையும் பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் "மார்பக சூடு" கொடுமை


மார்பக சூடு (breast ironing) என்று அழைக்கப்படும் உடல் உருசிதைவு (body mutilation) வன்கொடுமை ஆப்ரிக்க கண்டம் கேமரூன் நாட்டில் பரவலாக நடந்து வருகிறது. இங்கு வசிக்கும் நான்கில் ஒரு பெண்ணுக்கு இக்கொடுமை நடக்கிறது. இது வரை புள்ளி விவரப்படி 3.8 மில்லியன் பெண்களுக்கு இக்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த மிருகத்தனத்தை பெற்ற தாய்மார்களே தங்கள் குழந்தைகளுக்கு விரும்பிச் செய்கின்றனர்.

கேமரூனில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த கொடுமையான பழக்கம் நடைமுறையில் உள்ளது. கேமரூனின் தென்கிழக்கு பகுதியில் ஐம்பத்துமூன்று சதவிகிதம் அண்மையில் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் இளவயது பருவமடைதல் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேம்பட்டுவரும் உணவு பழக்கம் பெண் குழந்தைகளின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது என்பதே அதற்கு காரணம்.

சுமார் ஒன்பது வயது பெண் குழந்தைகள் பருவமடையும் தருவாயில் இக்கொடுமையை சந்திக்கின்றனர். சூடான கல், தேங்காய் ஓடு, வாழைப்பழம், கிழங்குகளை மசிக்கும் மர உலக்கை கட்டை, சாணை கற்கள், மர கரண்டி மற்றும் சுத்தியல் போன்றவற்றை நிலக்கரி மேல் வெப்பமூட்டி உபயோகிக்கின்றனர். சூடு ஏற்றப்பட்ட பொருள்களை கொண்டு பெண் குழந்தைகளின் வளரும் மார்பகங்களை அழுத்தி பட்டையாக்க அல்லது மறைந்து போகவைக்க முனைகின்றனர்.

கேமரூனின் தாய்மார்கள் மார்பக சூடு அவர்களின் பெண் குழந்தைகளை இளம் வயது பாலியல் கொடுமைகளை தடுக்கும் அரணாகவே கருதுகின்றனர். இதன் மூலம் மார்பக வளர்ச்சி தள்ளி போடப்படுகிறது, அதனால் ஆண்கள் ஈர்க்கப்படுவது தடுக்கப் படுக்கிறது என்று நம்புகின்றனர். இளமைக் கால பாலியல் தாக்குதல் மற்றும் பதின்வயது கருவுருதலை தடுக்க முடியும் என்றும் நம்புகின்றனர்.

குடும்பப் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக இதைச் செய்கிறோம். எங்களுக்கும் எங்கள் தாய்மார்கள் இதையே தான் செய்தார்கள். மேலும் கல்வி கற்க எவ்வித தடையும் இல்லை, இவ்வாறு செய்வதால் பால்ய திருமணமும் தடுக்கப்படுகிறது என்று பெருமையாக தாய்மார்கள் கூறுகின்றனர். எங்கள் குழந்தைகளை காப்பாற்றவே இவ்வாறு செய்கிறோம் என்று அறியாமையுடன் நியாயப் படுத்துகின்றனர்.

இக்கொடுமைக்குப் பின் அக்குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். தீக்காயங்கள் மற்றும் உருச்சிதைவு போன்ற பல உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு இது வழிவகுக்கும் என்று மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

மார்பக புற்று நோய், நீர்க்கட்டி, மன அழுத்தம், மார்பக தொற்று, உருக்குலைந்த மார்பகம், முழுமையடையாத ஒரு அல்லது இரு மார்புகள் வர வாய்ப்புள்ளது. பல பெண்கள் பிற்காலத்தில் அவர்களின் குழந்தைகளுக்கு பால் புகட்ட முடியாமல் போய் முடியக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சியை கொண்டு அக்குழந்தை பாலியல் உறவிற்கு தயாராகி விட்டாள் என்று முடிவு செய்யும் உலகத்தை நினைத்தால் பதறுகிறது உள்ளம். இவை அனைத்திற்கும் கல்வி இன்மை மற்றும் விழிப்புணர்ச்சி குறைவு தான் காரணம்.

ஜெர்மன் மேம்பாட்டு நிறுவனம் ( GTZ) நடத்திய ஆய்வில் கடந்த 2006 ஜூன் மாதத்தில் இருந்து சுமார் பத்து வயது முதல் எண்பத்திரண்டு வயது வரை உள்ள பெண்களில் ஐயாயிரம் பேர்கள் இக்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மை காலமாக இக்கொடுமை அதிகரித்து உள்ளதால் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நாடு முழுவதும் செய்கின்றன.

அரசு சார்பற்ற நிறுவனங்கள் இளம் தாய்மார்களுக்கு ஊக்கமளித்து மார்பக சூடிற்கு எதிராக பிரசாரம் செய்கின்றன. பல பாதிக்கப்பட்ட பெண்களும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். பள்ளிகளிலும், கல்விக் கூடங்களிலும் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயலுகின்றனர்.

முந்தைய தலைமுறையினர் இக்கொடுமையான பழக்கத்தை ஏற்றுக்கொண்டு விட்டாலும், இளைய தலைமுறையினர் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். சிறு வயது திருமணம் மற்றும் தாய்மையை தடுப்பதற்கு சூடு வைப்பது தீர்வில்லை என்றும் அதற்கு மாறாக உடலமைப்பைப் பற்றியும் குழந்தை உருவாகாமல் எப்படி தடுப்பது என்பதை பற்றியும் விளக்குவதே தீர்வாகும் என்று இளைய தலைமுறையினர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"