இறந்தது தெரியாமல் விபசாரத்திற்கு பெண்ணை செல்போனில் அழைத்து சிக்கிய வாலிபர்கள்!!

கேரள மாநிலம் காட்டாக் கடையைச் சேர்ந்தவர் ஹசீனா (வயது 28). திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த இவர், கடந்த 13-ந்தேதி காட்டாக்கடையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களியக்காவிளையை அடுத்த படந்தாலு மூடு கல்லறைத் தோட்டத்தில் இறந்து கிடந்தார். களியக்காவிளை போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில், ஹசீனா திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் உள்ள மசாஜ் சென்டரில் வேலை பார்த்ததும் அப்போது இவருக்கு விபசார கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு வாழ்க்கை தடம் மாறியதை தெரிந்து கொண்டனர்.

மசாஜ் சென்டர் பழக்கம் மூலம் ஹசீனாவுக்கு கேரளாவின் சில முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் ஹசீனாவை அடிக்கடி குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இதன் மூலம் ஹசீனாவிற்கு இங்குள்ள சில வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் கேரளா பிரமுகர்களுக்கு தெரியாமல் அடிக்கடி ஹசீனாவை காட்டாக்கடையில் இருந்து களியக்காவிளை, படந்தாலுமூடு, அருமனை, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் கேரள பிரமுகர்களுக்கும், குமரி வாலிபர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு அது நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் ஹசீனா படந்தாலுமூடு கல்லறைத் தோட்டத்தில் இறந்து கிடந்தார். இவர் எப்படி படந்தாலுமூடு வந்தார்? இவரை அழைத்து வந்தவர்கள் யார்? என்பது தெரியாமல் இருந்த நிலையில் போலீசார் விசாரணையை தொடர முடியாமல் தவித்தனர்.

எனவே அவரது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் சாவுக்கான உண்மை காரணத்தை தெரிந்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர். பிரேத பரிசோதனையின் முதல் கட்ட முடிவில் ஹசீனா அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தது தெரிய வந்தது.

இதன் மூலம் யாராவது மர்மநபர்கள் ஹசீனாவை களியக்காவிளை அழைத்து வந்து அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து கொன்றிருக்கலாம் அல்லது அவரை கொலை செய்ய திட்டமிட்டு கூடுதலாக போதை கலந்த மதுவை கொடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இதற்காக ஹசீனாவின் செல்போனை கைப்பற்றி அதில் இருந்த எண்கள் மூலம் விசாரணையை தொடர முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டபோது ஹசீனாவின் செல்போனுக்கு ஏராளமான அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. அவர், இறந்தது தெரியாமல் பலரும் அவரை தொடர்பு கொண்டனர்.

அப்போது அந்த எண்களை குறித்து கொண்ட போலீசார் ஹசீனாவை தொடர்பு கொண்ட நபர்கள் யார்? யார்? என்பதை ரகசியமாக விசாரிக்க தொடங்கினர். இதில், சில முக்கிய பிரமுகர்களின் விலாசங்களும் சிக்கின.

இந்த தகவல் கசிய தொடங்கியதை அடுத்து ஹசீனாவின் செல்போனை தொடர்பு கொண்ட நபர்கள் இப்போது கலக்கம் அடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் போலீசார் தங்களை தேடி வரலாம் என்று எண்ணிய அவர்கள், தலைமறைவாகி வருகிறார்கள்.

இது போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. ஹசீனாவின் சாவுக்கான காரணத்தை கண்டுபிடிப்பதோடு அவரை தொடர்பு கொண்ட நபர்களையும் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"