அதிர்ச்சிகர சம்பவம்: 6 வயது சிறுமி பள்ளியில் கூட்டு பலாத்காரம்


பெங்களூருவில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி 2 பேரால் பள்ளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவின் கிழக்குப்பகுதியில் விப்கியார் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அப்பள்ளியில் பணிபுரியும் உடற் பயிற்சியாளரும், காவலாளியும் சேர்ந்து பள்ளியின் மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அச்சிறுமி கழிப்பறைக்கு சென்றபோதே அவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்.

கடந்த ஜுலை 2 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சிறுமியின் தாய் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணி புரிகிறார்.

சம்பவம் நிகழ்ந்த பின் வீடு திரும்பிய அச்சிறுமி தனக்கு சோர்வாகவும், உடல் வேதனையாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே தனக்கு நிகழ்ந்த கொடுமையை அச்சிறுமி தெரிவித்துள்ளார். அதன் பின்னரே இதுகுறித்த விவரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறுமியிடம் கொடூரமாக நடந்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பள்ளியில் 20 க்கும் அதிகமான உடற் பயிற்சியாளர்கள் பணிபுரிவதால், குற்றவாளிகளை அடையாளம் காண அடையாள அணி வகுப்பு ஒன்றை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதுவரை 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ள அந்த பள்ளி நிர்வாகிகளும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இதுகுறித்த தகவல் இதர பெற்றோர்களுக்கும் தெரியவந்ததை தொடர்ந்து, அவர்கள் ஒன்று திரண்டு, பள்ளி நேரத்தில் தங்களது குழந்தைகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, பள்ளிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பள்ளிக்குள் புகுந்து கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை சமாதானப்படுத்திய பள்ளி நிர்வாகி ஒருவர், இனிமேல் பள்ளியில் மாணவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும், பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இதனிடையே இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த பள்ளி முதல்வர், பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்துவது குறைகளை தெரிவிக்கும் முறை அல்ல என்றும், இதுபோன்ற குறைகளை தெரிவிக்க தனியாக ஒரு இமெயில் முகவரி அளிக்கப்படும்; அந்த முகவரியில் பெற்றோர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

இந்தியாவில் பரவலாக பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி வளாகத்திலேயே ஒரு 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம், இந்தியா எதிர்கொண்டு வரும் பிரச்னையின் தீவிரத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாக உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"