மனித குலத்தின் முதல் தாயின் வயது 2 லட்சம் ஆண்டுகள்


மனித குலத்தின் முதல் தாயாக கருதப்படும் பெண் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒட்டுமொத்த மனித குலமும் ஒரு பெண்ணிடம் இருந்தே தோன்றியிருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் பற்றியும் இந்த முதல் பெண் எப்போது வாழ்ந்தாள் என்பது தொடர்பாகவும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியிருப்பது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள ரைஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பெருகிவரும் மக்கள்தொகை, வழக்கொழிந்த மக்கள் இனம் உள்பட பல அம்சங்களை வைத்து கணித ரீதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் மாரக் கிம்மல் கூறியதாவது:
மனித உடலில் 100 லட்சம் கோடிக்கும் அதிகமான செல்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் மைட்டோகாண்ட்ரியா என்ற பொருள் உள்ளது. செல்லுக்கு தேவையான சக்தியை இவைதான் வழங்குகின்றன. இதில் இருக்கும் பகுதிப் பொருள் ஜீனோம். இந்த ஜீனோமின் குணங்கள் தாயிடம் இருந்தே வருகின்றன. எத்தனை பரம்பரைகள் ஆனாலும், இந்த ஜீனோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியா ஆகியவை தாயுடன் தொடர்புடையதாகவே இருக்கும்.

இதன் அடிப்படையில் வித்தியாசமான மரபணு பண்புகள் கொண்ட 10 மனித மாதிரிகளை உருவாக்கினோம். அதில் இருந்து அதற்கு முந்தைய வம்சம், அதற்கும் முந்தைய வம்சம் என்று 10 மாதிரிகளைக் கொண்டு தனித்தனியே கணக்கிடப்பட்டது. இதன்மூலம், முதன்முதல் ஜீனோம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது தெரியவந்துள்ளது. மனித குலத்தின் முதல் தாயாக கருதப்படும் பெண் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"