செல்போனில் தேர்வு எழுதும் முறை


நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் வேளையில் செல்போனில் தேர்வு எழுதும் முறையை பெங்களுரைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்போன் கொண்டு வந்தால், அவற்றை பறிமுதல் செய்வதுடன் பெற்றோரை அழைத்தும் அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில் பெங்களுரைச் சேர்ந்த சேஷாத்ரிபுரம் பர்ஸ்ட் கிரேடு என்ற ஆர்ட்ஸ் கல்லூரியில் செல்போன் மூலம் தேர்வு எழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் தேர்வு எழுதுவது பல வெளிநாடுகளில் பழக்கத்தில் உள்ளது. தற்போது கம்ப்யூட்டரில் உள்ள தகவல் தொடர்பு வசதிகள் கையடக்க செல்போனிலும் வந்துவிட்டதால் ஆன்லைனில் செய்யக்கூடிய அனைத்தையும் செல்போனிலேயே செய்ய முடியும்.

சேஷாத்ரிபுரம் கல்லூரியில் முதல் கட்டமாக பிபிஎம் மற்றும் பிசிஏ படிப்புகளில் இந்த செல்போன் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேர்வு நடைபெறும் நாளன்று வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் பேப்பர்களுக்கு பதிலாக ஒரே மாதிரியான செல்போன் தரப்படும். இதில் கேம்ஸ் மற்றும் மெசேஜ் வசதி இருக்காது. இந்த செல்போன்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் சர்வருடன் இணைக்கப்பட்டிருக்கும். மாணவரின் பெயரை செல்போனில் பதிவு செய்தவுடன் சர்வருடன் இணைப்பு கிடைக்கும்.

கேள்வித்தாள் செல்போன் திரையில் தோன்றும். அப்ஜக்டிவ் முறையில் இந்தக் கேள்விகளுக்கு சரியான பதிலை ‘டிக்’ செய்ய வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தவுடன் தேர்வை முடித்துக் கொள்கிறோம் என்பதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனடியாக அவரது விடைத்தாள் கல்லூரி சர்வரில் சரிபார்க்கப்பட்டு மதிப்பெண் தரப்படும். இந்த முறையில் பேப்பர் செலவு மிச்சம். ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்த வேண்டிய வேலை மிச்சம். புதிய முறையில் தேர்வு என்பதால் மாணவர்களும் தேர்வை கண்டு பயப்படாமல் உற்சாகமாக தேர்வை எழுதுவார்கள்.

இது குறித்து கல்லூரி முதல்வர் எம்.பிரகாஷ் கூறுகையில், “தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்கினோம். மாணவர்கள் மத்தியில் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இதில் காப்பி அடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றார். விடைத்தாள் திருத்தும் வேலை இல்லாததால் ஆசிரியர்களும் இந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் வருகைப்பதிவுக்கும் இந்த செல்போன்கள் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தவுடன் செல்போனில் உள்ள குறிப்பிட்ட பட்டனை அழுத்தினால் வருகை பதிவாகிவிடும். கல்லூரிக்கு மாணவர் வரத் தவறினால் உடனடியாக கல்லூரியின் சர்வரிலிருந்து மாணவரின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் சென்றுவிடும். இதனால் மாணவர்கள் கல்லூரிக்கு மட்டம் போட முடியாது. அட்டன்டெண்ஸ் எடுக்க வேண்டிய வேலையும் ஆசிரியர்களுக்கு இல்லை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"